Tuesday, July 5, 2011

ஆடலரசனுக்கு அபிஷேகம்


சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆனித்திருமஞ்சன விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கொடியேற்றம் தொடங்கி நடராஜரின் ஆருத்ரா தரிசனம் காண்பது வரை 10 நாட்களும் சிதம்பரத்தில் விழாக்கோலம்தான்.
வேனிற் காலம் தொடங்கும் அற்புத மாதம் ஆனி மாதம். நாடெல்லாம் நன்றாக மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் பக்தர்கள் ஆனி மாதம் திருமஞ்சன விழா கொண்டாடுவதாக சான்றோர்கள் தெரிவிக்கின்றனர். ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் தரிசனமாகையால் இத்தினம் ஆனி உத்திரம் எனவும் ஆனித்திருமஞ்சனம் எனவும் அழைக்கப்படுகிறது.

ஆறுகால பூஜைகள்
ஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி. இவர் ஆதிசேஷனின் அம்சம். அன்றைய தினத்தில் சிதம்பரம் ஆலயத்தில் ஆதிமூலவர் சந்திர மௌலீஸ்வரருக்கு ஆறுகால பூஜைகள் வெகு விமர்சையாக நடக்கும். அப்போது கனக சபையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இது முடிந்த பின் சிவகாமியம்மை சமேத நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஆராதனை காட்டப்படும். பத்துநாட்கள் நடைபெறும் விழாவில் 9ம் நாள் தேரோட்டம் மிக முக்கியமானது. தேர்த் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகளும் 5 தேர்களில் எழுந்தருளி உலா வருவது கண்கொள்ளாக்காட்சி. மூலவர் நடராஜரே தேரில் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் உலா வரும் அதிசயம் இங்கு மட்டுமே நடக்கிறது.

தேர் வீதியுலா ஆயிரம் கால் மண்டபம் வந்தடைய நள்ளிரவாகி விடுவதால் இரவு முழுவதும் நடராஜரும் சிவகாமியம்மையும் இம்மண்டபத்தில்தான் தங்குவார்கள். மறுநாள் திருமஞ்சனம் நடைபெறும். அபிஷேகம், அலங்காரம் முடிந்தபின் இருவரும் ஆனந்தத் தாண்டவம் ஆடியபடி ஞானசபையான சிற்சபையில் எழுந்தருளுவார்கள். அங்கு கடாபிஷேகம் நடைபெறும். உலக இயக்கத்தையே தனது உடலுக்குள் ஒளித்து வைத்துக்கொண்டு ஆனந்த நடனமாடும் நடராஜரைப் பார்த்தாலே பக்தர்களுக்குப் பரவசம்தான்.

ஆனித்திருமஞ்சன நாளில் தில்லை காளி அம்மனுக்காகக் காத்திருந்து தரிசனம் தந்து திரும்புவார் நடராஜர். இதில் குளிர்ந்து கோபம் தணிவாள் தேவி என்பதும் ஐதீகம்.

மனோதைரியம் கூடும்

ஆடலரசனான ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு சிதம்பரம், திருவாரூர் போன்ற திருத்தலங்களில் ஆனித் திருமஞ்சனம் சிறப்பிப்பது போல் மற்ற சிவாலயங்களிலும் ஆனித் திருமஞ்சனம் போற்றப்படுகிறது. இந்தத் திருமஞ்சன நிகழ்ச்சியில் சுமங்கலிகள் கலந்துகொண்டால், நீடூழி வாழுகின்ற சுமங்கலி பாக்கியத்தைப் பெறுவார்கள். கன்னியர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். ஆடவர்களுக்கு மனதில் தைரியமும் உடல்பலமும் வளமும் கூடும் என்பது ஐதீகம்.

ஆடலரசனுக்கு அபிஷேகம்
திருமஞ்சனம் என்றால் மகாஅபிஷேகம் என்று பொருள். ஆடலரசரான நடராஜருக்கு ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. இதில் சிறப்பு வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும், மார்கழி திருவாதிரையில் நடைபெறும் திருமஞ்சனமும் ஆகும். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். பிற திருமஞ்சன நாட்களான சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலைநேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும். பொன்னம்பலமான சிதம்பரத்தில், பத்துநாட்கள் நடைபெறுவது ஆனி உத்திரத்திருவிழா. ஆனிஉத்திர நட்சத்திரத்தன்று இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். அன்று பகல் ஒருமணிக்கு நடராஜரும், சிவகாமியம்மனும் ஆனந்த நடனம் செய்தபடியே எழுந்தருள்வர்.

No comments:

Post a Comment