Saturday, July 23, 2011

சோமாஸ்கந்தர் வடிவம்

சிவனுக்கும், உமாதேவிக்கும் நடுவில் சிறுகுழந்தையாக முருகன் அமர்ந்திருக்கும் திருக்கோலமே சோமாஸ்கந்தர் வடிவம் எனப்படும். பாலமுருகன் உலகத்தை சுற்றி வந்த பிறகும் அவருக்கு கனி கிடைக்கவில்லை. ஞானத்தை தரும் கனி என்பதால் அந்த ஞானபண்டிதன் அதே போன்று மற்றொரு பழத்தை பெற வேண்டும் என்பதில் ஆவலாக இருந்தார்.ஒருமுறை தன் தந்தையின் கழுத்தில் கரிய நிறத்தில் நாவல்பழம் போல் உருண்டையாக தங்கியிருக்கும் ஆலகால விஷத்தை கேட்டு அடம் பிடித்தார். சிவன் அதை விஷம் என்று கூறியும் முருகன் விடுவதாக இல்லை. தந்தையின் கழுத்தை பிடித்து இழுத்து அந்த உருண்டையை வெளியே கொண்டுவர முயற்சி செய்தார். இதனால் சிவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிவனை இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து காப்பாற்றி, முருகனை தன் மடியில் இருத்தி ஞானப்பால் ஊட்டி அமைதிப்படுத்தினாள் பார்வதி. சிவன் அவரை சமாதானப்படுத்தும் வகையில், தன்னருகில் இருத்தி சமாதானம் செய்தார். இதுவே சோமாஸ்கந்தர் வடிவமாயிற்று. சோமாஸ்கந்தர் என்பது சிவபெருமானின் 25 வடிவங்களில் ஒன்று. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், குமரகோட்டம், காமாட்சியம்மன் கோயில், தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளிட்ட பல தலங்கள் சோமாஸ்கந்த வடிவ கோயில்களாகும். உலகிலேயே மிகப்பெரிய சோமாஸ்கந்த வடிவம் இலங்கையில், திருக்கேதீஸ்வரம் என்ற ஊரிலுள்ள சிவாலயத்தில் உள்ளது.

No comments:

Post a Comment