Thursday, July 21, 2011

ஆச்சாரியார்கள் நுனியில் ஒரு முடிச்சுடன் கூடிய மூங்கில் கம்பு வைத்திருப்பதன் நோக்கம் என்ன?

** ஆச்சாரியார்கள் நுனியில் ஒரு முடிச்சுடன் கூடிய மூங்கில் கம்பு வைத்திருப்பதன் நோக்கம் என்ன?

இதற்கு யோகதண்டம் என்று பெயர். நுனியில் உள்ள முடிச்சை "ஞானக்ரந்தி' என்பர். அதாவது எது உண்மையான இன்பம் என்று தெரியாமல், அறியாமையினால் மனித வாழ்க்கை போராட்டமாகவே உள்ளது. இக்கஷ்டத்திலிருந்து விடுபட வேண்டுமானால் நமக்கு நல்லறிவு வேண்டும். ஒரு மரத்திலிருந்து நேரடியாக பழம் கிடைப்பதில்லை. முதலில் மொட்டு, இரண்டாவது மலர், மூன்றாவது காய், நான்காவது பழம் கிடைக்கிறது. நல்லறிவு என்பது பழம் போன்றது. அது உடனே கிடைத்துவிடாது.
முதலில் நல்லோர் சேர்க்கை. இரண்டாவது அவர்கள் காட்டிய வழியில் திருக்கோயில் வழிபாடு. மூன்றாவது நல்லறிவு புகட்டும் நூல்களைப் படித்தும், நல்லோர்களின் உபதேசங்களைப் பெற்றும் குறுகிய மனப்பான்மையிலிருந்து விடுபட்டு பரந்த மனப்பான்மையும், தர்ம சிந்தனையையும் அடைதலாகிய யோக நிலை. யோகம் என்றால் கண்மூடி தியானத்திலிருப்பது மட்டுமல்ல. தாழ்ந்த நிலையிலிருக்கும் நம்மை மகான்களுக்கு இணையாக உயர்த்திக் கொள்வதும் யோக நிலை தான். இம்மூன்றும் ஒழுங்காக அமைந்தால் அதாவது மொட்டு, மலர், காய் மூன்றும் சரியாக இருந்தால் பழமாகி விடுவது போல், நாமும் உண்மையான ஞான முதிர்ச்சி ஏற்பட்டு உண்மையான மகிழ்ச்சியுடன் வாழலாம். ஆசார்யர்களை தரிசித்தால் நம் நிலையும் உயர்ந்து, நல்லறிவு பெற்று இன்பமாய் வாழலாம் என்பதை உணர்த்துவது தான், யோக தண்டமும், ஞான முடிச்சுமாகும்.

* சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்கு மூன்றிற்கும் விளக்கம் அளிக்கவும்
சாஸ்திரம் நல்வழிகளைக் கூறும் நூல். கூறப்பட்ட நல்வழிகளைக் காலம் காலமாகக் கடைபிடித்து வருவது சம்பிரதாயம். இதனைச் செயல்படுத்துவது சடங்கு.

* மலைக் கோயில்களை கிரிவலம் வந்தால் உண்டாகும் நன்மைகள் என்ன?

மலையைச் சார்ந்து கோயில்கள் அமைந்திருப்பது மிக விசேஷமானது. இறைவன் மலை வடிவமாக பல தலங்களில் உறைந்திருக்கிறார். மலையையும் கோயிலையும் சேர்த்து கிரிவலமாக வந்தால் நாம் பல பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கும். துயரங்களை நீக்கி நலமுடன் வாழ இறைவன் அருள்பாலிப்பார்.

* மந்திரத்தைத் தவறாக உச்சரித்தால் என்ன நடக்கும்?
விபரீதமான பலன் உண்டாகும். இந்திரனைக் கொன்று பழி தீர்க்க நல்ல வலிமை வாய்ந்த மகன் பிறக்க வேண்டும் என்று ஒரு அரக்கன் யாகம் செய்தான். மந்திரங்கள் தவறாக உச்சரிக்கப்பட்டன. தவறாக உச்சரிக்கப்பட்டதால் மந்திரத்தின் பொருள்மாறியது. இந்திரனைக் கொல்ல வேண்டும் என்று யாகம் செய்யப் போக இந்திரனால் கொல்லப்பட வேண்டும் என்ற விபரீத அர்த்தத்தில் யாகம் நடந்து விட்டது. அரக்கனுக்கு விருத்தாசுரன் மகனாகப் பிறந்தான். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் மூண்டது. மகாவிஷ்ணுவின் துணையுடன் இந்திரன் விருத்தாசுரனை கொன்றுவிட்டான். இப்போது புரிகிறதா! தெரிந்தவர்களிடம் கேட்டு, மந்திரங்களை நல்ல முறையில் உச்சரித்தால் தான் நல்ல பலன் கிடைக்கும். நமது குழந்தைகளுக்கு சமஸ்கிருதத்தை அவசியம் கற்பியுங்கள்.

No comments:

Post a Comment