Monday, July 25, 2011

ராமாயணம்

ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பி, மாமியார், மருமகள், தந்தை, மகன் என உறவோடு வாழ்ந்து வருகிறோம். ஆனால், ஆளுக்கொரு கருத்து கொண்டு பிரச்சனைகளைத்தான் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். ஸ்ரீராமர் குடும்பத்தினர் இப்படி இல்லை. மிகுந்த ஒற்றுமையுடன் அனுசரணையாக நடந்து கொண்டனர். அவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து பல செய்திகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ராமன்+அயனம் என்பதே ராமாயணம் ஆயிற்று. ராமன் காட்டிய வழி என்று இதற்குப் பெயர். அதற்காக ராமன் காட்டிற்கு மனைவியுடன் சென்றானே, அது போல் நாமும் போக வேண்டுமா என எண்ணக் கூடாது. காட்டிற்கு போ, 14 வருஷம் இரு என்று தந்தை சொன்னவுடன் ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேளாமல் மலர்ந்த முகத்துடன் ராமன் புறப்பட்டான். பிள்ளைகள் தந்தை சொல்லைக் கேட்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. கணவன் புறப்பட்டவுடன் மனைவி பின்னாள் போனாள். இதைத்தான் ராமன் இருக்குமிடம் சீதைக்கு அயோத்தி என்றார்கள். அவள் கண்ணைக் கசக்கிக் கொண்டு, என் மாமனார் இப்படி செய்து விட்டாரே! இவரெல்லாம் ஒரு மனுஷனா? என்று கதறிக் கொண்டு தகப்பனார் வீட்டுக்கு ஓடவில்லை. கணவனின் மனமறிந்து நடக்கும் வீட்டில் சண்டைக்கு இடமில்லை. மாமியார்கள் யாரும் சீதாவைக் கொடுமைப்படுத்தவில்லை, கைகேயி உட்பட. உன் புருஷன் காட்டுக்கு போகட்டும், நீ இங்கேயிருந்து எங்களுக்கு சேவகம் செய், என அதிகாரம் செய்யவில்லை. மாமியார்கள் மருமகள்களை கொடுமை செய்யக்கூடாது என்பதை இது உணர்த்துகிறது. மைத்துனர்கள் அண்ணன் மனைவியை தாயாக மதிக்க வேண்டும் என்பதை லட்சுமணன், பரத, சத்ருக்கனர்களின் கதாபாத்திரங்கள் சுட்டிக்காட்டின. ஒரு ஆணும்,பெண்ணும் எப்படி இருக்கக்கூடாது என்பதை உணர்த்தின ராவண, சூர்ப்பனகை பாத்திரங்கள். இப்படி அன்றாட வாழ்வின் ஒரு குடும்பத்தினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் நூல் ராமாயணம்.

No comments:

Post a Comment