Tuesday, November 18, 2014

அருகம்புல்லால் குளிரும் ஆனைமுகன்

கதைகள் மூலம் கருத்துக்களைச் சொல்வதில் வல்லவர்கள் நம் முன்னோர். அதில் ஒரு கதையை மட்டும் பார்த்து விட்டு பிறகு கருத்தைப் பார்க்கலாம்.
எமனுடைய பிள்ளை அனலன். பிறர் அறியாமலே அவர்களின் உடம்பில் புகுந்து அப்படியே உருக்கி, உடலிலுள்ள சத்தினை உண்டு விடுவான். ஏராளமானவர்களை எமனின் வாசலுக்கு அனுப்பிய அனலன், தேவலோகம் சென்றான்.
தேவர்கள் நடுங்கினார்கள்.
""விநாயகா! வாமன ரூபா! காப்பாற்று! காப்பாற்று!'' என்று கதறினார்கள். அதற்கு பதில் அளிப்பது போல், ""அஞ்சாதீர்கள்!'' என்று குரல் கொடுத்தபடி விநாயகப் பெருமானும் எழுந்தருளினார்.
அவர் பின்னால் தேவர்கள் எல்லோரும் ஓடிப்போய், மறைந்து கொள்ள முயன்றார்கள். அதற்குள் அங்கு வந்த அனலன், தேவர்களின் முன்னால் நின்ற விநாயகரைப் பார்த்தான்.
விநாயகரோ,""அனலா! என் வயிற்றில் ஏராளமான உலகங்கள் இருக்கின்றன. அவற்றையும் ஒரு கை பார்!'' என்று சொல்லி அனலனைத் துதிக்கையால் வாரி விழுங்கினார்.
விநாயகர் வயிற்றில் அனலன் புகுந்ததும், அனைவரின் வயிற்றிலும் அக்னி எரிந்தது.
அதாவது அனைவருக்கும் கடும் கொதிப்பு உண்டானது.
தேவர்கள் திகைத்தனர்.
உடனடியாக விநாயகரின் திருமேனியைக் குளிர்விக்க என்ன வழி என ஆராய்ந்தனர். அதன் பலனாக...
சந்திரன், தன் அமுதமயமான ஒளிக்கதிர்களை விநாயகர் மீது மழையாகப் பொழிந்தான். பாம்புகள் குளிர்ச்சியானவை என்பதால், அவற்றை அவர் உடம்பில் சுற்றினார்கள். என்ன செய்தும் பலனில்லை. அப்போது அங்கு வந்த முனிவர்கள் ஆளுக்கு 21 அருகம்புற்களை விநாயகருக்கு சாத்தினர்.
உடனடியாக விநாயகரின் திருமேனி குளிர்ந்து விட்டது. அதே நேரம் மற்றவர்களுக்கும் வெம்மை நீங்கி குளிர்ச்சி உண்டானது.
அன்று முதல் பால், தயிர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தாலும், அருகம்புல் அர்ச்சனையையும் ஏற்ற விநாயகர், கால அனலப் பிரசமர் என்றும் பால சந்திரப் பிரசமர் என்றும் பெயர் பெற்றார்.
ஜபம், தவம், யோகம் என்று செய்யும் போது உடம்பெல்லாம் சூடு பரவும். அந்த சூட்டைத் தணிக்க குளிர்ந்த நீரிலே மூழ்குவது, மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வது ஆகியவற்றால் சூடு தணிவதுடன் தவசக்தியும் இறங்கி விடும். பக்கவிளைவும் கூட உண்டாகலாம்.
அதெல்லாம் இல்லாமல் உடல் கொதிப்பில் இருந்து விடுபடவும், ஆரோக்கியம் பெறவும் அருகம்புல் கஷாயம், அருகம்புல் ஜூஸ் என்றெல்லாம் இன்று சொல்வதை புராணத்தில் கதை வாயிலாக கருத்தாக சொல்லியிருக்கிறார்கள் நமது முன்னோர்கள். விநாயகர் சதுர்த்தி நன்னாளில், ஆனைமுகத்தான் நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கட்டும்.

No comments:

Post a Comment