Sunday, October 25, 2015

கறுப்பு ஆடை அணியக்கூடாதா?

சத்குரு, கறுப்பு நிறம் அணிவது பற்றி உங்கள் கருத்து என்ன? பொதுவாக கறுப்பு நிறம் எதிர்மறை சார்ந்த நிறமாக கருதப்படுவது ஏன்? கறுப்பு அமங்கலமா? சத்குரு: கறுப்பு நிறத்துக்கு ஒரு குறிப்பிட்ட தன்மை உண்டு. கறுப்பு அணிந்தால் நீங்கள் பலவற்றையும் ஈர்க்கக் கூடும். அதற்கு நீங்கள் நிறங்கள் பற்றி முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது ஒரு பொருள் சிவப்பாக இருக்கிறது என்றால், அந்த பொருள் சிவப்பு நிறமாக இருப்பதாக நினைக்கிறீர்கள், இல்லையா? ஆனால் அப்படி இல்லை. ஒரு பொருள் சிவப்பாக இருப்பதற்குக் காரணம், ஒளி அதன் மீது விழும் போது, அது அனைத்து நிறங்களையும் தனக்குள் ஈர்த்துக்கொண்டு, சிவப்பு நிறத்தை மட்டும் உள்ளே ஈர்க்காமல் வெளியேற்றிவிடுகிறது. அதனால் தான் அது சிவப்பாகத் தெரிகிறது. எனவே ஒரு பொருள் எதை வெளியேற்றுகிறதோ அதைத்தான் அந்த பொருளின் நிறமாகக் காண்கிறோம். கேள்வி அப்படியானால் ஒரு பொருள் வெண்மையாக இருந்தால், அது வெண்மை நிறத்தை பிரதிபலிப்பதால் என்கிறீர்களா? சத்குரு: வெண்மை நிறம் மற்றும் கறுப்பு நிறத்தில் கவனிக்கத்தக்க விஷயம் உள்ளது. ஒரு பொருள் வெண்மை நிறமாக தோன்றுகிறது என்றால் அது, எதையும் உள்ளே இழுத்துக் கொள்ளவில்லை என்று பொருள். அனைத்தையும் வெளியேற்றிவிடுவதால் வெண்மையாக காண்கிறோம். அதேபோல் ஒரு பொருள் கறுப்பாகத் தோன்றினால், அது அனைத்து நிறங்களையும் உள்ளே இழுத்துக் கொண்டு எதையும் பிரதிபலிக்கவில்லை என்று அர்த்தம். கேள்வி நாம் கறுப்பு நிற ஆடை அணிந்தால், அனைத்து நிறங்களையும் ஈர்க்கிறோம். எதையும் பிரதிபலிக்க மாட்டோம். ஆனால் ‘பல விஷயங்களையும் ஈர்ப்போம்‘ என்று எதைக் குறிப்பிட்டீர்கள் சத்குரு? சத்குரு: கறுப்பு நிற ஆடை அணிவதால் நீங்கள் பலவிதமான சக்திகளை ஈர்ப்பீர்கள். அதுவும் தொடர்ந்து கறுப்பு நிற ஆடையே அணிந்து கொள்ள வேண்டும் என்றால், உங்களை ஒரு குறிப்பிட்ட விதமான சாதனா மூலம் நீங்கள் தயார்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் மாந்திரீகம் செய்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் எப்போதுமே கறுப்பு ஆடை அணிகிறார்கள். ஆடை மட்டுமின்றி தலையில் கூட கறுப்புத்துணி கட்டிக் கொள்வார்கள். ஏனென்றால் அவர்கள் பலவிதமான சக்திகளை ஈர்க்க விரும்புகிறார்கள். கேள்வி ஒரு நிறத்துக்குள் இத்தனை விஷயம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒருவேளை எனக்குள் அத்தகைய மாந்திரீக ஈடுபாடுகள் எதுவும் இல்லாமல், நான் கறுப்பு உடைகளை வெறுமனே என் மனப்போக்கினால் தேர்வு செய்தால்? சத்குரு: ஓ! மனப்போக்கு (tendency) என்பதே உடைபட வேண்டிய விஷயம்; வளர்த்துக் கொள்ளத் தகுந்த விஷயம் அல்ல. உங்களுக்கு கறுப்புதான் பிடிக்கும் என்றால் அந்த மனப்போக்கை உடைத்துவிடுங்கள். சிவப்புதான் பிடிக்கும் என்றால் அந்த மனப் போக்கையும் உடைத்துவிடுங்கள். நாம் எதையும் முழுவிருப்பத்தின் பேரில் சுயமாக தேர்வு செய்ய வேண்டும்… மனப்போக்கின் அடிப்படையில் அல்ல. அது தினமும் நீங்கள் காலையில் குடிக்கும் காபியாக இருந்தால்கூட! காபி குடிக்கக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் எதையும் மனப்போக்கின்படி இல்லாமல் சுயமான தேர்வின் பேரில் செய்யுங்கள் என்றுதான் சொல்கிறேன். மனப்போக்கின் அடிப்படையில் எந்த செயலைச் செய்தாலும் அது திரும்பத் திரும்பச் செய்யும் ஒரு பழக்கமாகவே மாறிவிடும். ஒன்றைத் திரும்பத் திரும்பச் செய்தால் எங்கும் சென்று சேரமாட்டீர்கள். எனவே உங்கள் தேர்வின் அடிப்படையில் நீங்கள் ஒன்றை அணிவதோ, உண்பதோதான் சிறந்தது. மனப்போக்கு என்னும் பெயரில் கறுப்பு நிற உடைகளை அணிந்தால் நீங்கள் பிரச்சனையை விலைக்கு வாங்குகிறீர்கள் என்றே சொல்லலாம். கேள்வி ஓ! அப்படியானால் கறுப்பு நிறம் குறித்து முழுவதுமாக சொல்லுங்களேன்… சத்குரு: மேற்கத்திய கலாச்சாரத்தில் கறுப்பு உடைகளை அதிகம் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், அங்கு குளிர் அதிகம். கம்பளி ஆடைகள் அங்கு அவசியம். செம்மறி ஆடுகளும் கறுப்பாக இருக்கின்றனவே! (சிரிக்கிறார்). கறுப்பு ஆடைகள் உடல் வெப்பத்தைத் தக்க வைக்க உதவும் என்று அறிந்து கொண்டார்கள். இதை நீங்களும் கவனித்து இருக்க முடியும். குளிர் பிரதேசத்தில் கறுப்பு உடை, அதே துணியால் ஆன வெள்ளை ஆடையைவிட, உங்களை அதிக கதகதப்பாக வைத்திருக்கும். ஆனால், அவர்களை ஸ்லிம்மாகக் காட்டுகிறது என்பதால், இப்போது ஒரு ஃபேஷனாக கறுப்பு ஆடை அணிகிறார்கள். ஆனால், நீங்கள் கறுப்பு ஆடை அணியும்போது நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள், எந்தவிதமான சூழலில் இருக்கிறீர்கள் என்ற கவனம் மிகவும் முக்கியம். ஒரு குறிப்பிட்ட இடம் மிகவும் சக்தி வாய்ந்த இடமாக, நேர்மறை சக்தி கொண்டதாக இருந்தால், நீங்கள் கறுப்பு அணியலாம். அப்படி இல்லாத இடங்களில் கறுப்பைத் தவிர்த்து விடலாம். ஏதோ ஒரு நாள் விருப்பம் என்று கறுப்பு அணிந்தீர்கள் என்றால் பரவாயில்லை. அப்போதும் சில சூட்சுமமான விஷயங்கள் நிகழக்கூடும். அதைத் தவிர்க்க முடியாது தான். ஆனால் தொடர்ந்து கறுப்பே அணிந்து வந்தால், அது உங்கள் மனநலம், உணர்வுகள், உங்கள் ஆரோக்கியம், நலவாழ்வு என்று அனைத்தையுமே பாதிக்கும். எனவே ஃபேஷன் என்னும் பெயரில் தொடர்ந்து கறுப்பு அணிந்தால், அது உங்கள் உடல்நிலை, மனநிலை, ஆன்மீக நிலை போன்றவற்றில் மிகவும் அதிக விளைவுகளை ஏற்படுத்தும். எனவே நீங்கள் இருக்கும் இடம், சூழல் குறித்து உங்களுக்கு அதிகம் தெரியவில்லை என்றால் வெள்ளை அல்லது மற்ற வெளிர் நிறங்களை (light colors) அணியலாம். குறிப்பாக வெள்ளை அனைத்தையும் முழுவதுமாக பிரதிபலித்துவிடும். ஆனால் மிகவும் நேர்மறையான சக்தி கொண்ட இடங்களில் அடர்த்தியான நிறங்களை (dark colors) அணியலாம். குறிப்பாக கறுப்பு ஆடை அணியலாம். அந்த இடத்தின் சக்தியை நல்ல முறையில் கிரகிக்க இது உதவும்.

1 comment: