Tuesday, October 6, 2015

மனச்சோர்வு! தப்பிப்பது எப்படி?

வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயத்தில் ஏதாவது காரணம் முன்னிட்டு சோகமாகவோ, மனத்தளர்வுடனோ, மனக்கசப்புடனோ நாம் இருக்க நேரிடும். நாமாகவோ, நண்பர்களிடம், உறவினர்களிடம் பகிர்ந்துகொள்வதன் மூலமாகவோ, இத்தகைய உணர்வுகளில் இருந்து விடுபட்டுவிடுவோம். ஆனால், இந்தக் கசப்பான உணர்வுகள் தொடர்ந்து பல வாரங்களோ, மாதங்களோ நீடித்து, அன்றாட வாழ்க்கையையே பாதிக்குமானால், என்ன செய்வது? டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்: மனச்சோர்வை எப்படி கண்டுபிடிப்பது? மனச்சோர்வு வயது பாகுபாடின்றி அனைவரையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. கீழ்க்கண்ட அறிகுறிகளில் ஐந்து அல்லது ஆறு அறிகுறிகளாவது இருந்தால், ஒருவர் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஒருநாளில் பெரும்பாலான நேரம் சோகமாகவும் துக்கமாகவும் தோன்றுதல். வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் இருத்தல், எதையும் சந்தோஷமாக அனுபவிக்க முடியாமல் இருத்தல், எதுவும் பிடிக்காமல் இருத்தல். சக்தி இல்லாமல் களைப்பாகத் தோன்றுதல், சிறு வேலை செய்யக்கூட அலுப்பாகத் தோன்றுதல். பசியின்மையால் எடை குறைதல், சிலருக்கு அதிகப் பசியினால் எடை கூடலாம். தூங்குவதற்கு அதிக நேரம் எடுத்தல், இயல்பைவிடச் சீக்கிரமாகவே எழுந்து கொள்ளுதல். உடலுறவில் நாட்டமின்மை. தன்னம்பிக்கை இல்லாமை. மிகவும் உபயோகமற்றவராகத் தோன்றுதல். மன உளைச்சல். எளிதான முடிவுகள்கூட எடுக்கத் திணறுதல். முன்பு சமாளித்த அதே விஷயங்களைத் தற்போது சமாளிக்க முடியாமல் திணறுதல். வாழ்க்கையில் நம்பிக்கையில்லாமல் இருத்தல். எளிதில் எரிச்சல் அடைதல். தற்கொலை பற்றிய எண்ணம் தோன்றுதல் அல்லது முயற்சித்தல். மேற்கூறியவை ஒருவரை படிப்படியாகப் பாதித்திருக்குமானால், அவருக்கு மனச்சோர்வு இருக்கிறது என்பதை அறிந்துகொள்வது கடினம். அதனால், அவரைச் சோம்பல் உள்ளவராகவும், மனவலிமை அற்றவராகவும் கருதி மற்றவர்கள் துன்பம் கொடுக்கக்கூடும். மேற்கூறிய அறிகுறிகள் பொதுவாக இருப்பினும் வயது மற்றும் உடல்நிலைக்கேற்றபடி அறிகுறிகள் கீழ்க்கண்டவாறு வித்தியாசப்படலாம். இளம் வயதினர்: (12 – 18 வயதுக்கு உட்பட்டோர்): சோம்பல் உள்ளவர்களாகவும், பெற்றோரின் பேச்சைக் கேட்காதவர்கள் போலவும் தோன்றும். படிப்பில் முன்பு இருந்ததைவிட குறைந்த நாட்டம், பாடங்களில் முன்பைவிட குறைந்த மதிப்பெண்கள் பெறுதல். தனிமையை விரும்புதல், நண்பர்களைப் புறக்கணித்தல். அதிகத் தூக்கம் அல்லது பசி, குறைந்த தூக்கம் அல்லது குறைந்த பசி. முன்பு விரும்பிச் செய்த செயல்களில்கூட விருப்பம் இல்லாமல் இருப்பது. எரிச்சலடைதல். முன்பைவிடக் குறைவாகப் பேசுதல் மற்றும் பழகுதல். தற்கொலை முயற்சியில் ஈடுபடுதல் / தன்னைத்தானே துன்புறுத்துதல். உதாரணமாகக் கைகளைக் கிழித்துக்கொள்வது, தீக்காயம் ஏற்படுத்திக்கொள்வது. ஆண்கள்: எளிதில் எரிச்சல் அதிகக் கோபம் சண்டை போடும் மனப்பான்மை கட்டுப்பாட்டை அதிகமாக இழப்பது பெண்கள்: காரணமற்ற உடற்குறைகளுக்கு டாக்டரிடம் சிகிச்சை பெற்றும் குணமடையாமல் இருத்தல் அதிகப் பதற்றம், பயம் மகப்பேறு காலத்துக்குப் பின்: குற்ற உணர்வு சிறு விஷயங்களுக்கும் பதற்றம் உங்கள் குழந்தையைப்பற்றியோ, பிற விஷயங்களைப்பற்றியோ உற்சாகமின்மை. எளிதில் எரிச்சல் அடைவது. மிக்க சோர்வு குழந்தை மற்றும் உங்களை சரிவரப் பார்த்துக் கொள்ள இயலாமல் தடுமாறுவது. குழந்தை பிறந்தபின் பல்வேறு காரணங்களினால் மனச்சோர்வு அடைகிறார்கள். இதற்கு சரியான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், இதற்கு தாய், சேய் நலம் கருதி மருத்துவரை நாடுவது மிகவும் அவசியம். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில்: மறதி: இந்த வயதில் மறதி ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் மறதி மற்றும் குழப்பம் மனச்சோர்வின் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம். மிகவும் தனிமையாக உணர்வது உடல் நலமின்மை: மனச்சோர்வு ஏற்படும்போது உடல்நலம் இல்லாதது போலவோ அல்லது ஏற்கெனவே உள்ள வியாதிகள் அதிகமானது போலவோ தோன்றலாம். மனவலிமையற்ற நிலைதான் மனச்சோர்வா? மனச்சோர்வு என்பது மற்ற நோய்கள் போன்றுதான். யாருக்கு வேண்டுமானாலும் இந்த நோய் ஏற்படலாம். மூளையில் உள்ள குறிப்பிட்ட புரதத்தின் அளவு குறைவதால் மனச்சோர்வு வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. புரதக் குறைவுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். மனவலிமையின்மை நிச்சயமாக ஒரு காரணம் இல்லை. வின்ஸ்டன் சர்ச்சில், ஆபிரகாம் லிங்கன் போன்ற உலகின் மிகச் சிறந்த தலைவர்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தகுந்த சிகிச்சை எடுத்துகொள்ளும்போது இந்த நோயையும் குணப்படுத்த முடியும். எதனால் மனச்சோர்வு ஏற்படுகிறது? மனச்சோர்வு ஏற்பட ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் உள்ளன. இது மனிதருக்கு மனிதர் மாறுபடும். வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்: வேலையிழப்பு, திருமண முறிவு, மரணம் போன்ற இழப்புகளுக்குப் பிறகு, சில நாட்களுக்கு மனச்சோர்வுடன் இருப்பது இயல்புதான். இந்த நிலை வாரம் அல்லது மாதக்கணக்கில் தொடருமானால் அது வியாதியாகிறது. சூழ்நிலை: கவலைகளையும் துக்கங்களையும் பகிர்ந்துகொள்ள நண்பர்களோ, உறவினர்களோ இல்லாமல் இருத்தல். உடல்நலக் கேடு: உயிரைப் பறிக்கும் புற்றுநோய் மற்றும் இதய நோய்கள், வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் நோய்களான மூட்டு வலி நோய்கள், நுரையீரல் நோய்கள் போன்றவை ஏற்படும்போது மனச்சோர்வு அடைவது இயற்கை. இது தொடருமானால் சிகிச்சை தேவை. சிலர் இயற்கையாகவே எளிதில் மனச்சோர்வு அடைபவராக இருப்பார்கள். மதுப்பழக்கம்: தொடர் குடிப்பழக்கம் மரபணுக்கள்: பெற்றோருக்கு இந்த நோய் இருக்குமானால், குழந்தைகளுக்கும் வரும் வாய்ப்பு அதிகம். எப்போது டாக்டரிடம் செல்ல வேண்டும்? மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால், மனநல மருத்துவரிடம் உடனடியாகத் தயக்கமின்றிச் செல்ல வேண்டும். பெரும் பாதிப்புகள் நேர்வதிலிருந்து இது நம்மைப் பாதுகாக்கும். சிகிச்சை: மனச்சோர்வின் வீரியத்தைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும். இதற்கு மருந்துகள் மட்டுமோ, அல்லது ஆலோசனைச் சிகிச்சைமுறைகளோ அல்லது இரண்டும் கலந்தோ அளிக்கப்படும். சிகிச்சை பெறுவது அவசியமா? ஐந்தில் நான்கு பேர் சிகிச்சை இல்லாமலே 4 – 6 மாதங்களுக்குள் சரியாகிவிடுவர். மீதம் இருக்கும் அந்த ஒரு மனிதரும் சிகிச்சை இல்லாமலே குறைந்தது இரண்டு வருடங்களில் குணமாகலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. அப்படியிருக்க மருத்துவ உதவி எதற்கு? ஒவ்வொருவரும் மேற்சொன்னவற்றில் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்று கண்டுகொள்வது கடினம். ஒருதடவை மனச்சோர்வு வியாதி வந்துவிட்டால், அது மீண்டும் வர 50 சத வாய்ப்பு உள்ளது. அதைத் தடுக்க சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். அது மட்டுமின்றி, மனச்சோர்வு ஒருவரது இயல்பு வாழ்க்கையைப் பாதித்துத் தன்னம்பிக்கையை இழக்கச் செய்கிறது. தற்கொலை எண்ணங்களைத் தூண்டுகிறது. சிலர் தற்கொலையும் செய்துகொள்கின்றனர். மருந்துகள் மற்றும் பிற உதவிகள் பெறுவதால், அடுத்தடுத்து நிகழும் பாதிப்புகளைத் தடுக்க முடியும்! யோகா எவ்வாறு உதவுகிறது? மனச்சோர்வில் இருந்து குணமடைய யோகப் பயிற்சிகள் உதவுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ‘அம்’ மந்திர உட்சாடணை மனச்சோர்வில் இருந்து குணமடைய பெரிதும் உதவுகிறது. யோகா – உடல் மற்றும் மனநிலைகளில் தளர்வு நிலையை ஏற்படுத்துகிறது. விழிப்புணர்வுடன் வாழ உதவுகிறது. யோகப் பயிற்சிகள் உடல் மற்றும் மன அளவில் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. மனநிலையை ஸ்திரமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஒருவரின் தூக்கம் மற்றும் பசி அளவைச் சீராக்குகிறது. குறிப்பிட்ட யோகப் பயிற்சிகள் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்களின் வியாதியை அதிகமாக்கும். அதனால், எந்த யோகப் பயிற்சியையும் கற்பதற்கு முன் யோகா ஆசிரியரிடம் உங்கள் வியாதியின் முழு விபரத்தைக் கூறி அவர்கள் அனுமதித்த பின்னரே செய்யவும். யோகப் பயிற்சிகளை புத்தகத்தின் வாயிலாகவோ, டிவி, சிடி, ஆகியவை மூலமாகவோ கற்றுக்கொண்டு செய்தால், உங்கள் உடல்நலம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் தகுந்த யோகா ஆசிரியரிடம் மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டும். யோகப் பயிற்சிகள் கற்றாலும், ஏற்கெனவே மருந்து எடுத்துக்கொண்டு இருந்தால், அதை மருத்துவரின் அறிவுரையின்றி நிறுத்தக் கூடாது!

  

No comments:

Post a Comment