Saturday, February 2, 2013

மகத்துவம் மிகுந்த மந்திரம்

சதாசர்வ காலமும் நாராயணரின் திருநாமத்தை உச்சரித்தபடியே ஈரேழு உலகங்களையும் வலம் வருபவர் நாரதர். அடிக்கொரு முறை உச்சரிக்கும் 'நாராயணா' என்ற திருமந்திரத்தின் பலனை அறிந்து கொள்ளும் ஆவல் நாரதருக்கு எழுந்தது. தனது தந்தையான பிரம்ம தேவரிடம் சென்று விளக்கம் கூறும்படி கேட்டார்.

நாராயண மந்திர விளக்கம்........

'ஓம் நமோ நாராயணாய நம என்ற மந்திரத்தின் பலன் யாது என்று உனக்கு தெரிய வேண்டுமானால், கோதாவரிக்கரையில் இருக்கும் வண்டிடம் சென்று கேள்!' என்று கூறினார் பிரம்மதேவர். அதன்படி நாரதர், குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அங்கிருந்த வண்டிடம், 'ஓம் நமோ நாராயணாய நம' என்ற மந்திரத்தின் அர்த்தம் யாது என்று கேட்டார்.

நாரதர் கூறிய மந்திரத்தைக் கேட்டதும் வண்டானது மறுநொடியே தனது உயிரை விட்டது. இதனை பார்த்த நாரதர், பதறியடித்துக் கொண்டு பிரம்மதேவரிடம் வந்தார். 'தந்தையே! நாராயணாய மந்திரத்தின் பலன் என்ன என்று எனக்கு தெரிந்து விட்டது. அந்த மந்திரத்தைச் சொன்னால், அதைக் கேட்பவன் செத்துப் போய்விடுவான்' என்றார்.

நாரதருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி............ அதைக் கேட்டு புன்முறுவல் பூத்தபடி, 'சரி! யமுனா நதிக்கரையில் உள்ள ஆலமரத்தில் இப்போதுதான் பிறந்த கிளி உள்ளது. அதனிடம் சென்று மந்திரத்திற்கான அர்த்தம் கேள்' என்றார் பிரம்மதேவர். நாராயண மந்திரத்திற்கான அர்த்தம் அறியும் ஆவலில் கிளியிடம் சென்று அர்த்தம் கேட்டார் நாரதர். மறுநொடி அந்த கிளியும் உயிரை விட்டு விட்டது.

அதிர்ச்சியில் ஆடிப் போய்விட்டார் நாரதர். குருவி, ஆந்தை என்று மந்திரத்தின் அர்த்தம் கேட்கும் படலம் தொடர்ந்தது. அவைகளும் இறப்பை தழுவின. நாரத முனிவருக்கு சப்த நாடியும் அடங்கி விடுவது போல் தோன்றியது. அவரை பார்த்து பிரம்மதேவர், 'பூலோகத்தில் சுந்தரபுரம் என்ற ஊரில் அந்தணர் ஒருவர் வீட்டில் உள்ள பசுவுக்கு அழகான கன்று பிறந்துள்ளது. அதனிடம் சென்று மந்திரத்திற்கான அர்த்தம் கேள்!' என்றார்.

அரச குழந்தையிடம்......... தந்தையே! நான் அனுபவப்பூர்வமாகவே மந்திரத்தின் பலனை தெரிந்துகொண்டேன். எதற்காக மீண்டும் ஒரு கன்றை பலியிட வேண்டும். அதுவும் இறந்து விட்டால் அந்த பாவத்தை நான் எங்கு சென்று தொலைப்பது' என்று கூறி மறுத்தார் நாரதர். ஆனால் பிரம்மதேவர், 'நீ சென்று கேள்' என்றார்.

எப்படியும் மந்திரத்தை உச்சரித்ததும் கன்று இறந்து விடும். அங்கிருப்பவர்கள் என்னை சும்மா விடமாட்டார்கள் என்று நினைத்தபடி, கன்றிடம் ஓம் நமோ நாராயணாய நம என்ற மந்திரத்தின் அர்த்தம் கேட்டார் நாரதர். எதிர்பார்த்ததுதான்; கன்றின் கதையும் முடிந்து விட்டது. பிரம்மலோகம் சென்ற நாரதரின் நடுக்கத்தை பார்த்ததும் நடந்ததை ஊகித்துக் கொண்ட பிரம்மதேவர், 'நாரதா!' என்று அழைத்தார்.

'சுவாமி! ஒன்றல்ல... இரண்டல்ல... நாராயண மந்திரத்தின் பலனை ஐந்து முறை பார்த்து தெரிந்து கொண்டுவிட்டேன்' என்றார் நாரதர். உடனே பிரம்மதேவர், 'நீ காசி நகருக்கு செல்!. அங்கு அரசனுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்துள்ளது' என்று அவர் சொல்லி முடிக்கும் முன்பாக பதறி இடைமறித்தார் நாரதர்.

மந்திரத்தின் மகத்துவம்........... 'ஐயனே! அந்த குழந்தை இறந்து விடுமே! ஏற்கனவே ஐந்து உயிர்கள் என்னால் இறந்துவிட்டன. இப்போது பூலோக பிறப்புகளில் உயர் பிறப்பான மனிதனையும் அழித்த பாவியாகி விடுவேனே' என்றார் நாரதர். 'நீ அங்கு சென்று, அந்த குழந்தையிடம் கேட்டுதான் ஆக வேண்டும்' என்று உத்தரவிடும் தொனியில் கூறினார் பிரம்மதேவர்.

வழியே இல்லை, காசிக்கு சென்று குழந்தையிடம், நாராயண மந்திரத்தின் அர்த்தம் கேட்டார் நாரதர். குழந்தை இறந்து விடும் என்று எண்ணிய நாரதருக்கு ஆச்சரியம் தாளவில்லை. அந்த குழந்தை நாரதரிடம் பேசியது, 'வண்டாக, கிளியாக, குருவியாக, ஆந்தையாக, கன்றாக பிறந்தது நானே.

நான் பிறந்த ஒவ்வொரு பிறப்பிலும் தாங்கள் வந்து கூறிய ஓம் நமோ நாராயணாய நம என்ற மந்திரத்தை கேட்டதன் காரணமாக, அந்த பிறவியின் பயனை அடைந்து ஒவ்வொரு முறையும் மேல் பிறப்பை அடைந்தேன். இப்போது உயர் பிறப்பான மனித பிறவியை அடைந்துள்ளேன்.

இப்போதும் அந்த மந்திரத்தை கேட்டதால் நான் வைகுண்ட பதவியை அடைவேன்' என்றது. புரிந்து விட்டது நாரதருக்கு, நாராயண மந்திரத்தினை உச்சரிப்பதும், கேட்பதும் இறைவனடியை சேர்வதற்கான துரிதமான பாதை என்று.  

No comments:

Post a Comment