எல்லாம் நாம்தான் நமக்குத்தான் எல்லாம் தெரியும்” என்ற எண்ணம், நம்மில் பலருக்கு உண்டு. என்னவோ, நமக்கு முன்னால் உலகமே இருந்ததில்லை; நமக்குப் பின்னால் உலகம் இருக்கப் போவதில்லை; நாம்தான் உலகத்தையே தாங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனை பொங்கித் ததும்புகிறது. இதற்கு இலவச இணைப்பாக முன்னோரை இழித்துப் பேசும் பழக்கமும் பரவி வருகிறது.
இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை வேதவியாசர் விரிவாகக் கூறுகிறார். வியாசர் கூறிய அத்தகவல்களைப் பார்க்கலாம்.
பீஷ்மர் சர தல்பத்தில் (அம்புப் படுக்கையில்) இருந்தார். அப்போது அவரிடம் தர்மர் “தர்மத்தின்படி நடந்து மரணத்தை வென்ற இல்லறத்தான் யார்? அறிவாளிகளில் சிறந்தவரும், அனைத்து சாஸ்திரங்களிலும் கரை கண்டவருமான தாங்கள் இந்த இல்லற தர்மத்தை உள்ளது உள்ளபடி எனக்குச் சொல்ல வேண்டும்” என வேண்டினார்.
பீஷ்மர் பதில் சொல்லத் தொடங்கினார். மேலோட்டமாகப் பார்த்தால் அது, பதில் போல இருக்கும். ஆனால் அது ஓர் அற்புதமான பாடம். பீஷ்மர் சொன்னது.
“மனுவின் பிள்ளை இக்ஷ்வாகு. இக்ஷ்வாகுவின் பத்தாவது பிள்ளை தசாச்வன். இவன் மாஹிஷ்மதி நாட்டின் மன்னனாக இருந்தான். தசாச்வனின் பிள்ளை மதிராச்வன். இவன் சத்தியம், தானம், தவம் இடைவிடாத பயிற்சி உள்ளவன்.
மதிராச்வனின் பிள்ளை த்யுதிமான். இவன் பாக்கியசாலி. பராக்கிரமமும் தைரியமும் உடல் பலமும் கொண்டவன். இவன் பிள்ளை ஸூவீரன். உலகம் முழுவதும் புகழ் பெற்றவன் இவன்; தர்மவான். இவன் கஜானா எப்போதும் நிறைந்திருக்கும். இந்த ஸூவீரனின் பிள்ளை துர்ஜயன். யாராலும் வெல்ல முடியாத இந்த துர்ஜயனின் பிள்ளை துரியோதனன். இவன் ஒளி பொருந்திய உடம்பைக் கொண்டவன். மகாராஜா, இராஜரிஷிகளில் தலை சிறந்தவன் எனப் பலவகைகளிலும் சிறப்பைப் பெற்றவன் (நமக்குத் தெரிந்த துரியோதனன் இவன் அல்லன்).
துரியோதனன் ஆண்டபோது மழை நன்றாகப் பொழிந்தது. ரத்தினங்கள், பசுக்கள், உணவுதானியங்கள், செல்வம் என எல்லாம் நிறைந்திருந்தன. கருமியோ, ஏழையோ நோயாளியோ உடல் இளைத்தவனோ ஒருவன் கூட இல்லை. தர்மவான், மிகுந்த அனுபவமுள்ளவன், இன்சொல் பேசுபவன், பொறாமை இல்லாதவன், புலன்களை வென்றவன், இரக்கம் உள்ளவன், பராக்கிரமசாலி, தற்பெருமை இல்லாதவன், விதிப்படி யாகங்களைச் செய்பவன், அடக்கமும் புத்திக் கூர்மையும் உள்ளவன், பிராம்மணர்களிடம் அன்பு உள்ளவன், சொல்லிலும் அதன் அங்கங்களிலும் கரை கண்டவன் (அப்பாடா! படிக்கும் போதே மூச்சு முட்டுகிறதே!) இவ்வளவு புகழ் பெற்ற துரியோதனனை நர்மதா நதியின் அதிதேவதை ஒரு மானிடப் பெண்ணாக வந்து மணம் செய்து கொண்டாள்.
துரியோதனனுக்கு சுதர்சனை என்ற மகள் பிறந்தாள். அவளைப் போன்ற அழகி அதற்கு முன்னால் இருந்ததில்லை. ஒரு சமயம் அவள் தந்தையால் நியமிக்கப்பட்டு அக்னி ஹோத்ர சாலையில் அக்னி காரியம் செய்யத் தொடங்கினாள்.
அப்போது அக்னி பகவான் ஒரு மானிட வடிவம் கொண்டு அவளிடம் “சுதர்சனை! நான் உன்னை மணக்க விரும்புகிறேன்” என்றார். அதைக் கேட்ட சுதர்சனைக்கு உடல் மெல்ல நடுங்கியது. அவள் வெட்கத்தோடு “ஐயா! என்னைப் போன்ற பெண்களுக்குத் திருமணம் செய்யத் தீர்மானிப்பதற்கு, முக்கியமாகப் பெற்றோருக்கும், சுற்றத்தாருக்கும் மட்டுமே அதிகாரம் உண்டு. என் தந்தையைக் கேளுங்கள்” என்றாள்.
சிறிது காலம் ஆனது. துரியோதனன் தன் மந்திரிகளை அழைத்து “யாகத்திற்குத் தேவையான பொருள்களைச் சேகரியுங்கள்! நான் யாகம் செய்யப் போகிறேன்” என்றார். ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
யாகம் தொடங்கப்படும் நேரம் அப்போது அக்னி பகவான் ஓர் அந்தண வடிவில் வந்து “மன்னா! உன் மகளை எனக்கு மணம் செய்து கொடு!” எனக்கேட்டார்.
மன்னர் மறுத்தார். யாகத்திற்கு உண்டான தீக்ஷையை மன்னர் எடுத்துக் கொண்டதும் ஹோமத்திற்கான யாக குண்டத்தில் இருந்த அக்னி மறைந்தது. அதைக் கண்ட மன்னர் “ஏன் இப்படி நடந்தது? மந்திரங்களில் தேர்ச்சி பெற்றவர்களான நீங்கள், வேண்டியதைச் செய்யுங்கள்!” என வேத வல்லுனர்களிடம் வேண்டினார்.
வேத வல்லுனர்கள் மந்திரங்களைச் சொல்லி அழைத்தார்கள். ஜொலிக்கும் உருவத்தோடு, அங்கே அக்னி பகவான் வந்தார்; வேத வல்லுனர்களைப் பார்த்து “வேதியர்களே! துரியோதனன் மகளை நான் திருமணம் செய்து கொள்வதற்காகக் கேட்கிறேன்” என்றார்.
வேத நிபுணர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அவர்கள் விடியற்காலை நேரத்தில் மன்னனிடம் போய், அக்னிபகவான் சொன்னதைச் சொன்னார்கள்.
துரியோதனன் மகிழ்ந்தார். அவர் “அப்படியே ஆகட்டும். என் மகளைத் தருகிறேன். அக்னி பகவான் எப்போதும் இங்கேயே இருக்க வேண்டும்” எனக் கேட்டார்.
அக்னி பகவானும் ஒப்புக் கொண்டார். அன்று முதல் இன்று வரை அக்னி பகவானின் சாந்நித்தியம் மாஹிஷ்மதி நகரத்தில் விளங்கி வருகிறது. (இதை திக்விஜய யாத்திரையின் போது சகாதேவன் கண்டான்)
அக்னி பகவானுக்கும் சுதர்சனைக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு சுதர்சனன் என்ற மகன் பிறந்தான். சுதர்சனன் சிறு குழந்தையாக இருக்கும் போதே, வேதங்களை முழுவதுமாக ஓதினான். அந்தச் சுதர்சனனுக்கும் ஓகவான் என்னும் அரசரின் மகளான ஓகவதிக்கும் திருமணம் நடந்தது.
(இந்த சுதர்சனன் தான் இல்லறத்தில் இருந்தபடியே யமனை வென்றவர். இவர் வரலாற்றைச் சொல்ல வந்த பீஷ்மர் இவர் முன்னோரின் வரலாற்றை ஏன் சொல்ல வேண்டும்? சுதர்சனனைப் பற்றிய தகவலை மட்டும் சொல்லி இருக்கலாமே என்ற எண்ணம் எழலாம். சுதர்சனன் உயர்ந்த நிலை அடைந்ததற்கு அவருடைய முன்னோரின் உயர்ந்ததான நற்குணங்களும் வேதப் பயிற்சியும் காரணம் என்பதை, நாம் புரிந்து கொள்வதற்காகவே, பீஷ்மர் இவ்வாறு செய்திருக்கிறார்.)
சுதர்சனனும் ஓகவதியும் குருக்ஷேத்திரத்தில் இல்லறத்தைத் தொடங்கினார்கள். “நான் இல்லறத்தில் இருந்தபடியே யமனை வெல்வேன்” என்று சபதம் செய்தார் சுதர்சனன்.
அவர் தன் மனைவியிடம் “ஓகவதி! நம் வீட்டில் விருந்து என்று வந்தவருக்கு நீ எந்த விதத்திலும் குறை வைக்கக்கூடாது. என்ன என்ன வகைகளில் விருந்தாளி திருப்தி அடைவாரோ அந்த அந்த வகைகளில் எல்லாம் நீ அவனை உபசரிக்க வேண்டும். நான் வீட்டில் இருந்தாலும் சரி வெளியில் இருந்தாலும் சரி. எக்காரணத்தைக் கொண்டும் விருந்தாளியை நீ அவமானப் படுத்தக் கூடாது” என்றார்.
மனைவியும் ஒப்புக்கொண்டாள்.
“இந்த நியமத்தில் சுதர்சனன் எப்படியாவது தவறிவிடுவான். நாம் அவனைப் பிடித்துவிட வேண்டும்.” என்ற எண்ணத்தில், சுதர்சனன் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தான் யமன்.
ஒருநாள் சுதர்சனன் சமித்துகள் கொண்டு வருவதற்காக, வெளியே போயிருந்தார். அந்த நேரத்தில் சுதர்சனனின் இருப்பிடத்தைத் தேடி அழகான வேதியன் ஒருவன் வந்தான். அவனுக்குச் செய்ய வேண்டிய உபசாரங்களை எல்லாம் செய்து ஓர் ஆசனத்தில் உட்காரவைத்தாள் ஓகவதி. அதன் பிறகு, “உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்!” எனக்கேட்டாள்.
வந்த விருந்தாளி “அரசியே! இல்லற தர்மத்தில் உனக்கு நம்பிக்கை இருந்தால் என் விருப்பத்தை நிறைவேற்று! எனக்கு நீதான் வேண்டும்” என்றான்.
அதற்குப் பதிலாக என்னவெல்லாமோ விலை உயர்ந்த பொருள்களைத் தருவதாகச் சொன்னாள் ஓகவதி.
வந்தவனோ “அதெல்லாம் வேண்டாம். எனக்கு நீதான் வேண்டும்” என்றான்.
கணவரின் சொற்களைக் கருத்தில் கொண்ட ஓகவதி “அப்படியே ஆகட்டும்” என்றாள்.
அதே நேரத்தில் கைகளில் சமித்தோடு சுதர்சனன் ஆசிரம வாயிலை நெருங்கினார். வழக்கம் போல் யமனும் பின்னாலேயே வந்தான். சுதர்சனன் ஆசிரம வாயிலில் நின்றபடி “ஓகவதி! எங்கே போய் இருக்கிறாய்?” என்று கூவினார்.
பதில் இல்லை. சுதர்சனன் மறுபடியும் கூவினார். “சத்தியம் தவறாதவளும், மலர்ந்த முகத்தோடு வாயிலில் நின்று என்னை மகிழ்ச்சியோடு வரவேற்பவளுமான ஓகவதி எங்கே? ஓகவதி! எங்கே போனாய்?” என்றார்.
ஆசிரமத்தின் உள்ளே இருந்த வேதியன் பதில் சொல்லத் தொடங்கினான். “அக்னியின் புத்ரனான சுதர்சனா! உன் இருப்பிடத்திற்கு விருந்தாளியாக வந்த எனக்கு உன் மனைவி எல்லாவிதமான அதிதி பூஜைகளையும் செய்வதாகச் சொன்னாள். நானோ அவளையே விரும்பினேன். அதற்காக அவள் என்னைப் பூஜை செய்து கொண்டிருக்கிறாள். இந்த விஷயத்தில் வேறு என்ன பொருத்தமோ அதை நீ செய்யலாம்” என்றான்.
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் சுதர்சனனின் பின்னால் இருந்த யமன் தன்னைத் தயார்படுத்திக் கொண்டான். “இப்போது இந்தச் சுதர்சனன் தன் சபதத்திலிருந்து தவறுவான். ஒரே போடாகப் போட்டு விடவேண்டியது தான்” என்று யமன் தன் கையில் இருந்த தடியைத் தயாராக வைத்துக் கொண்டான்.
சுதர்சனன் பேசத் தொடங்கினார். “அவரிடம் சொல்லிலோ, செயலிலோ, பார்வையிலோ, நடவடிக்கையிலோ அணுவளவுகூட கோபமோ, பொறாமையோ இல்லை. உள்ளே இருக்கும் உத்தம வேதியனே! அதிதிகளைப் பூஜித்து அவர்கள் மனம் மகிழும்படி செய்யும் இல்லறத்தானுக்கு, அதைவிடப் பெரிய தர்மம் வேறெதுவும் இல்லை என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். அதைக் கடைப்படிப்பதாக நான் சபதமே செய்திருக்கிறேன். என் உடம்பைத் தொட்டு நான் சத்தியம் செய்கிறேன். என் உயிர், என் மனைவி, என்னிடம் உள்ள அனைத்துப் பொருள்களும் அதிதிகளுக்குக் கொடுக்கத் தகுந்தவையே. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், புத்தி, ஆத்மா, மனம், காலம், திசை என்னும் பத்தும் மனிதனின் உடம்பில் இருந்தபடி அவன் செய்யும் நல்வினை, தீவினைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. நான் என் சபதத்திலிருந்து விலக மாட்டேன். இதற்காகத் தேவர்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்றார்.
அப்போது எல்லாத் திசைகளிலும் “இது உண்மை! இது உண்மை!” என்ற வார்த்தைகள் அடிக்கடி கேட்டன.
அதே நேரத்தில் விருந்தாளியாக வந்திருந்த வேதியன், வாயு பகவானைப் போல ஆகாயம், பூமி எங்கும் பரவி வளர்ந்தவனாக, பிரம்மாண்ட வடிவத்தோடு வெளிப்பட்டான். தேவ ஸ்வரம் அமைந்த குரலில் எங்கும் கேட்கும்படியாக சுதர்சனனைக் கூப்பிட்டுச் சொல்லத் தொடங்கினான்.
“குற்றமற்றவனே! உனக்கு நன்மை உண்டாகட்டும்! நான் தர்ம தேவதை. உன்னைச் சோதனை செய்வதற்காகவே வந்தேன். உன்னுடைய உண்மை நிலை அறிந்ததும், எனக்கு உன்மேல் எல்லையில்லாத அன்பு உண்டாகியிருக்கிறது. உன் சபதத்திலிருந்து நீ நழுவும் சமயம் பார்த்து உன்னைத் தண்டிக்க வேண்டும் என்று உன் பின்னாலேயே சுற்றி வரும் இந்த யமன் உன் உறுதியால் தோற்றுப் போய் உன் வசமாக ஆகிவிட்டான்.
“பதிவிரதையும் நல்லொழுக்கம் நிறைந்தவளுமான உன் மனைவி ஓகவதியைக் கண்ணெடுத்துப் பார்ப்பதற்குக் கூட சக்தி படைத்தவன் உலகெங்கிலும் ஒருவன் கூட இல்லை. இவளை யாராலும் வெல்ல முடியாது. இவள் சொன்னது எதுவாக இருந்தாலும் அப்படியே பலிக்கும்.
“தவப்பயனும் பிரம்ம ஞானமும் கொண்டவளாகிய இந்த ஓகவதி உலகின் பாபங்களைப் போக்குவதற்காக, ஒரு பாதி உடம்பால் ஓகவதி என்னும் பெயர் கொண்ட சிறந்த நதியாக மாறுவாள். மற்றொரு பாதி உடம்பால், உன் மனைவியாக உன்னுடன் இருப்பாள். உன் இந்த உடம்புடனேயே அழிவில்லாத உலகங்களை அடைவாய்! யமன் உன்னிடம் தோற்றுப்போய் விட்டான். இல்லற ஒழுக்கத்தாலேயே நீ காமக் குரோதங்களை வென்றாய்!” என்று தர்மதேவதை கூறி முடித்தது.
அதே நேரத்தில் ஆயிரம் வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் ஏறி, தேவேந்திரன் அங்கு வந்தான்.”
இந்த இடத்தில் கதையை முடித்தார் பீஷ்மர். கூடவே அதன் தொடர்பாகச் சில தகவல்களையும் சொன்னார்.
“தேவேந்திரனே தேடி வரும்படியான ஓர் உயர்ந்த நிலை சுதர்சனனுக்குக் கிடைத்தது எப்படி? யோசித்துப்பார்! பூஜிக்கப்படும் தகுதிவாய்ந்த அதிதி, மனப்பூர்வமாக ஆசிர்வாதம் செய்வதனால் உண்டாகும் பலன், மரியாதை கொடுத்து உபசரிக்காமல் போனால் அது ஏற்கெனவே நாம் செய்த தான, தர்மங்களையும், நற்செயல்களையும் கூடப் போக்கி, பாபத்தைச் சேர்த்து விடும். நாம் செய்த புண்ணியம் எல்லாம், அவமானப் படுத்தப்பட்ட விருந்தாளிக்குப் போய்விடும். சுதர்சனனின் இந்த வரலாற்றைத் தினந்தோறும் சொல்பவன் புண்ணிய உலகங்களை அடைவான்” என்றார்.
No comments:
Post a Comment