Thursday, November 14, 2013

அண்ணல் காந்தி மகாத்மாவானது எப்போது தெரியுமா ?


அண்ணல் காந்தி மகாத்மாவானது எப்போது தெரியுமா ?

அவர் தன்னை சுயபரிசோதனை செய்து சுயசரிதத்தை எழுதி வெளிப்படுத்திய போதுதான். வேதாத்ரி மகரிஷி அவர்களின் மனவளக் கலையில் தற்சோதனை என்று ஒரு பயிற்சி தரப்படுகிறது. அதுதான் சுய பரிசோதனை. நம் எண்ணங்கள், சொல், செயல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கங்களை நாமே நடுநிலையில் இருந்து ஆராய்ந்து மதிப்பீடு செய்வதே தற்சோதனை என்கிற சுய பரிசோதனை. என்னைக் கேட்டால் இதுவே ஆன்மீக வாழ்விற்கான முதல்படி. மற்றதெல்லாம் இதற்குப் பிறகுதான். பாவ மன்னிப்பு என்று சொல்லப்படுவது இதைத்தான். தன்னை உணர்ந்து திருந்துபவனுக்கே மன்னிப்பேயன்றி மற்றவர்களுக்கு அல்ல.

தற்சோதனை என்பது அவ்வளவு எளிய காரியமல்ல. ஒவ்வொரு தவறுகளையும், குற்றங்களையும், குறைபாடுகளையும் பூசி மொழுகி ஒரு போலி முகமூடியை அணிவித்து அவற்றையெல்லாம் மூடி மறைத்து வைத்துக் கொண்டே வந்திருக்கிறது நம் அகங்காரம். அப்படி கோடிக்கணக்கான மறைந்து கிடக்கும் தவறுகளும் ஒவ்வொரு நான் என்கிற அகங்காரமேயாகும். தற்சோதனை செய்து ஒவ்வொரு நானாக விரட்டியடித்து விட்டால் மிஞ்சி நிற்பதுவும் நான் தான். அது தான் ஆத்மா. அதை உணர்ந்ததால் தான் அவர் மகாத்மா. பெரும்பாலும் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்யத் தடையாக இருப்பது எது என்று பார்த்தால், அது பிறரையும், பிறருடைய செயல்களையும் மதிப்பிடுவதில் நாம் புத்தி கூர்மை உள்ளவர்களாக இருப்பது தான். அந்த நிலையில் நம் புத்தி கூர்மைக்கு அளவே இல்லை. எந்தக் குற்றங்களையும், தவறுகளையும் பிறரிடம் கண்டுபிடித்து கண்டிக்கிறோமோ, அவை இலட்சக்கணக்கில் நமக்குள்ளே இருக்கிறது என்பதை நாம் உணர்வதே இல்லை. இதற்குக் காரணம் நம்மில் ஒருவருக்குக் கூட சுய பரிசோதனை என்கிற பழக்கம் இல்லாமல் போனதுதான்.

நாம் இலட்சிய வாழ்க்கை வாழ்வதாக கற்பனை செய்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உண்மை பேசுபவனாக, நல்லவனாக, நேசிக்கும் குணமுடையவனாக, தன்னலமற்றவனாக, விட்டுக் கொடுக்கும் குணமுடையவனாக, இனிமையானவனாக வாழ்வதாக நாம் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நம்மைச் சுற்றி உள்ளவர்களைக் கேட்டால், அவர்கள் சொல்வார்கள் நாம் எவ்வளவு மிருகத் தன்மைகளை உடையவர் என்று. ஏனென்றால், அவர்களும் அவர்களுடைய தவறுகளை கவனிப்பதில்லை. அரக்கனான இராவணனுக்குக் கூட பத்து முகம்தான். நமக்கோ கோடிக்கணக்கான முகங்கள். ஏனென்றால் நாம் அவனை விட்டு பல யுகங்களைக் கடந்து பரிணாமத்தின் உச்சகட்டத்திற்கே வந்து விட்டோம். நாம் உண்மையில் இருக்கும் நிலைக்கும், இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிற நிலைக்கும் இடையிலுள்ள அகழிதான் ஒவ்வொரு ஆன்மிக சாதகனும் கடக்க வேண்டிய முதல் கட்ட நடவடிக்கையாகும். அதற்கான ஒரே வழி தற்சோதனை மட்டுமே. கோடிக்கணக்கான போலியான நான்களை அழித்து விட்டு ஒரே ஒப்பற்ற ஒளிமிகுந்த நானாக ஆன்மாவில் ஜொலித்திருப்பதே நம் இலக்காகும்.

மனப்பூர்வமாக தற்சோதனை செய்யும் போது ஒவ்வொரு மனிதனும் தன்னை மிகக் கேவலமானவன் என்பதை உணர்ந்து கொள்வான். ஆபாசமான எண்ணங்கள், கீழ்தரமான உணர்ச்சிகள், மிருகத்தனமான வேகங்கள், பலமில்லாத நம்பிக்கைகள், நிறைவேறவே முடியாத கனவுகள் ஆகிய எல்லாம் சேர்ந்த ஒரு அழுக்கு மூட்டையாகவே அவன் காணப்படுவான். நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு குரூரமானவன் ஒளிந்து கொண்டிருக்கிறான்.திமிர் பிடித்தவனாக, அசட்டுத்தனங்களுடையவனாக, குரூர குணங்கள் மிகுந்தவனாக, அஞ்ஞானம் மிக்கவனாக ஒரு கொடிய மிருகமாக அவன் விளங்குகிறான். அவன் இடைவிடாமல் போராடிக் கொள்ளையடித்து, கொன்று சமைத்து, திரட்டிப் புதைத்து வைத்து கூட்டிப் பெருக்கிய வண்ணம் இருக்கிறான். ஆனால், இதையெல்லாம் எதற்காகச் செய்கிறான் ? என்று பார்த்தால், ஓடி மறையும் நிலையில்லாத அரைகுறைத் திருப்திக்காகவே. அதையே ஆனந்தம் என்று எண்ணி தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறான் அந்தக் குரூரன். என்னே பரிதாபம்.

எனவே சரியான தற்சோதனையின் மூலம் ஒரு மனிதன் தன்னைத் தானே உள்ளபடி தெரிந்து கொண்ட மாத்திரத்தில் குருஷேத்திர யுத்தத்தில் தான் வென்று விட்டதாக வைத்துக் கொள்ளலாம். நமக்குள்ளே ஒளிந்திருக்கும் சைத்தான்களை கைப்பற்றுவது அவ்வளவு எளிய காரியமல்ல. ஆனால், நம் மனதின் இருண்ட மூலை, முடுக்குகளிலே அவைகளைக் கண்டு விட்டோமானால், திரும்பிக் கூடப் பார்க்காமல் விட்டால் போதும் என்று எல்லாம் ஓட்டமெடுத்து விடும். அதையும் மீறி ஒன்றிரண்டு பிடிவாதமாக பல்லை இளித்து பயம் காட்டும். கூத்தாடும். ஆனால், தன்னுடைய பலத்திலே நம்பிக்கை கொள்ளும் அளவுக்கு நாம் திண்மையும், துணிவும் பெற்று விட்டால் எல்லா சைத்தான்களையும்(தடைகளையும்) முறியடித்து அகழியைக் கடந்து தெய்வீக வாழ்வெனும் கோட்டையைக் கைப்பற்றி விடலாம். இததையெல்லாம் படித்து விட்டு தற்சோதனை என்பது மிகக் கடினமானது என்று நினைத்து விடாதீர்கள். சில நாள் பயிற்சிக்குப் பிறகு அது மிக எளிமையானது மட்டுமல்ல, வேடிக்கையும், இலாபமும் ஒருங்கே அமைந்த பொழுது போக்கு என்பதையும் உணர்வீர்கள். பொறாமை, கோபம், காமம், பேராசை, சுயநலம் போன்ற எல்லா பலவீனங்களையும் நீங்கி அன்பு, தன்னம்பிக்கை, அமைதி, பெருந்தன்மை, துணிவு ஆகிய நற்குணங்கள் மேலோங்குவதையும் உணர்வீர்கள்.

இத்தகைய உயர்ந்த தற்சோதனைக்கு ஏற்ற நேரம் இதுவே. இந்த ஓய்வான நேரத்தில் ஒரு அரைமணி நேரம் உங்கள் மனதை நீதிபதியின் ஆசனத்தில் அமர்த்துங்கள். இன்று செய்த காரியங்கள், அவற்றின் நோக்கங்கள், எண்ணங்கள், உணர்ச்சிகள் என்று எல்லாவற்றையும் நீதிபதியின் முன் அணிவகுத்திடச் செய்யுங்கள். அப்போதுதான் தெரியும் பிரமிக்கவைக்கும் கொடூரங்களும், மூச்சடைக்க வைக்கும் மிருகத்தனங்களும் நிறைந்த துப்பறியும் கதை போன்றது நம் அன்றைய சரித்திரம் என்பது. எட்ட நின்று பார்க்கும் உங்களுக்கு வேடிக்கையாகத்தான் இருக்கும். ஆனாலும், நம் தவறை நாம் உணர இது வழி வகுக்கும். தவறான கொள்கைகள் உதிர்ந்து சரியான கொள்கைகள் தழைத்தோங்கும். தற்சோதனை செய்யுங்கள். முகமூடிகளைக் கழற்றி வீசி எறியுங்கள். மேன்மையடையுங்கள்.

No comments:

Post a Comment