Saturday, November 23, 2013

கம்பன் தன் தமிழ் மூலமாகவும் மிக உயர்ந்த ஒழுக்கத்தைக் கூறுகிறான்

கம்பன் தமிழ்ச் சமுதாயம் சார்ந்த பல ஒழுக்கங்களைத் தன் காப்பியம் மூலம் காட்டிவிட்டான். அதில் ஓன்று இதோ...

இராமனைத் தேடிக்கொண்டு ஒரு பெரும் படை திரட்டிக்கொண்டு பரதன் கானகம் வருகிறான்.அங்கே படகோட்டும் குகனைச் சந்திக்கிறான்.

பரதனும் குகனுமே இராமனிடம் பெருத்த அன்புடையவர்கள். ஆதலால் பரதன் குகனிடம், இராமன் எங்கே படுத்திருந்தான் என்று கேட்கிறான். தர்ப்பைப்புல் மெத்தையும், தலை வைத்துகொள்ள ஒரு கல்லையும் காட்டி,”இதில் தான் இராமன் உறங்கினான்”, என்று அழுதவாறே சொல்கிறான் குகன்....


பின்னர் பரதன், “இலக்குவன் எங்கே படுத்திருந்தான்?” என்று கேட்கிறான்.

இங்குதான் கம்பன் காட்டும் தமிழ் நாட்டு ஒழுக்கம் தெரியும். குகன் கூறுவது போல் அமைந்துள்ள பாடல் பின்வருமாறு:

“அல்லைஆண்டு அமைந்த மேனி அழகனும் அவனும் துஞ்ச

வில்லைஊன் றியகை யோடும் வெய்துயிர்ப் போதும் வீரன்,

கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் கண்கள்நீர் சொரியக் கங்குல்

எல்லைகான் பலவும் நின்றான் இமைப்பிலன் நயனம் என்றான்”

(இருளை ஆட்சி செய்துகொண்டு கருமை பொருந்திய திருமேனியில் இணையற்ற அழகுடையவனாகிய இராமனும் அவளும் துயிலும்போது, இலக்குவன் தான் தூங்காமல், வில்லை ஊன்றிய கையோடு, கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் சொரிய, இரவு முழுவதும் கண் இமைக்காமல் காவல் நின்றான். எனவே அவன் உறங்கவில்லை).

இதில் கவனிக்க வேண்டியது இலக்குவன் இராமனையும் சீதையையும் கண் இமைக்காமல் காத்தான் என்பது அல்ல.குகன் இராமனும் சீதையும் உறங்கினார்கள் என்பதை எப்படிக் கூறுகிறான் என்பதே.

இராமனின் அழகை “இருளை ஆட்சி செய்யும் கருமை பொருந்திய உடல் அழகை உடையவன்” என்று கூறுகிறான். ஆனால் சீதையை வர்ணிக்க வில்லை. சீதையை வெறுமே “அவள்” என்று கூறுகிறான். சீதை இன்னொருவன் மனைவி. எனவே அவளை வர்ணிக்கக் கூடாது என்ற தமிழர் ஒழுக்கத்தின் வழி நின்று ஓடம் ஓட்டும் குகன் மூலமாகக் கம்பன் தன் தமிழ் மூலமாகவும் மிக உயர்ந்த ஒழுக்கத்தைக் கூறுகிறான்....
 

 

No comments:

Post a Comment