Sunday, December 22, 2013

மனிதனை கர்ம சொரூபி என்று சொன்னால் அது மிகையாகாது

மனிதனை கர்ம சொரூபி என்று சொன்னால் அது மிகையாகாது. அவன் பிறப்பிலிருந்து இறக்கும் வரை உடலாலோ அல்லது மனதினாலோ ஏதாவது ஒரு கர்மத்தை செய்து கொண்டே இருக்கிறான். கர்மம் செய்யாமல் இங்கே யாராலும் இருக்க முடியாது. உயிரோடு இருக்கும் வரை கர்மத்திலிருந்து விடுபடவும் முடியாது. இதைப் புரிந்து கொண்ட நம் முன்னோர்கள் அந்தக் கர்மங்களை ஒழுங்குபடுத்தி, நெறிப்படுத்தி முக்தியடையும் வழிகளாக வகுத்து வைத்தனர். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று ஒருவன் வாழ்வானாகில் அவன் வாழ்க்கை முழுமையடைவதில்லை. இப்படித்தான் வாழ வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்த வழிமுறையைக் கடைபிடித்து ஒருவன் வாழ்வானாகில் அதுவே கர்ம யோகம். அதுவே முழுமையான தவ வாழ்வு.

பொதுவாக இந்த கர்மங்களை இரண்டு வகையாக நல்வினை, தீவினை என்று எல்லோரும் சொல்லி வருகிறோம். ஆனால், அது தவறாகும். ஏனென்றால், எது நல்ல வினை என்றோ, எது தீய வினை என்றோ தீர்மானிப்பதில் முரண்பாடு ஏற்பட்டு விடுகிறது. ஒருவருக்கு நல்லதாக, பயனளிக்கும் விதமாக செய்யப்படுகின்ற வினை பிரிதொருவருக்கு தீமையை விளைவிப்பதாக இருக்கிறது. இந்த முரண்பாடுகள் எல்லா உயிர்களின் வாழ்விலும் நிலவுகிறது. எனவே, கர்மங்கள் குறித்த ஆய்வு மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே அறிவில் சிறந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. நமது தேசத்தைப் பொருத்தவரை வேத காலத்துக்குப் பிறகு உபநிடதங்கள் மற்றும் தரிசனங்கள் தெளிவான விக்கங்களைத் தரந்துள்ளன. அவைகளும் கர்மங்களை இரண்டு பிரிவாகவே சொல்கின்றன. நல்லது, தீயது என்ற முரண்பாடை அவை வேறு விதமாக நம் முன் வைக்கின்றன. அதாவது புலன் இன்பங்களை நாடுவதால் மனிதனை பந்தப்படுத்தி தளைப்படுத்தும் விஷய கர்மங்கள் தீயவை என்றும், விடுதலையை அளிக்கும் சிரேயோ கர்மங்கள் நல்லவை என்பதும் அந்த முடிவான கருத்தாக அமைகிறது.

விஷய கர்மம் என்பது புறப் பொருள்கள் சம்மந்தப்பட்ட செயல்களைக் குறிப்பதாகும். இது தான், தனது, எனது என்ற எண்ணத்தைத் தூண்டுவதுடன், பயனை தானே அனுபவிக்க வேண்டும் என்ற வேட்கையையும் உருவாக்கி மனிதனைத் தளைப்படுத்துகிறது. காமம், பேராசை போன்ற மிருகக் குணங்களை வளர்த்து விடுகிறது. விஷய கர்மத்தை புரிவதும், விஷத்தைப் புசிப்பதும் ஒன்றுதான். தவநிலையில் மேம்பட்டவர்களுடைய இத்தகைய கர்ம வினைகளை பரம்பொருள் தானே ஏற்றுக் கொள்வதையே சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டதாகச் சொல்வார்கள். ஒருவன் இத்தகைய தீமையான விஷயகர்மங்களில் இருந்து விடுபடுவதற்கான உபாயமாக விளங்குவதே சிரேயோ கர்மமாகும். ஆன்ம விசாரம், பரநாட்டம், தவவாழ்வு வாழ்பவர்களால் மட்டுமே சிரேயோ கர்மத்தை கடைபிடிக்க முடியும். அதாவது எந்த கர்மத்தில் ஈடுபடும் போதும் அதன் பலனின் மீது ஆசை கொள்ளமல் இருப்பதாகும். இதனால் நான், எனது என்ற சுயநல உணர்வுகளையும், பேராசை, காமம் போன்ற மிருகக் குணங்களையும் வெற்றி கொள்ளவும், அவற்றிலிருந்து விலகி இருக்கவும் முடியும்.

இதன் பயனாக துன்பங்களில் இருந்து விடுபடலாம். இந்த சிரேயோ கர்மமானது தூய்மையானது, சுயநலமற்றது, தவறான வழியில் செல்லாததாகும். கீதை சொல்லும் பலனை எதிர்பாராமல் செய்யும் நிஷ்காம்ய கர்மபாவனை இந்த சிரேயோ கர்மத்தின் உட்பகுதியே. சிரேயோ கர்மத்தை கடைபிடிப்பவர்கள் சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை ஆகிய நான்கையும் கடைபிடிப்பது அவசியம். சிரேயோ கர்மத்தை கடைபிடித்து வாழ்பவருக்கு இறையாற்றலின் பரிபூரண அருள் சித்திக்கும். இந்த உலகில் உண்மையானது மெய்ப் பொருளாகிய இறையாற்றல் மட்டுமே. எனவே அந்த உண்மையாகிய தர்மத்திற்கு எதிராகப் பொய் சொல்லி வாழ்வது கடினம். ஆனால், தர்மத்தின் வழியில் உண்மையைச் சொல்லி அதன் வழியில் நடப்பது மிகவும் சுலபம். உள்ளதை உள்ளதென்று சொல்வதற்கு ஒரு நொடி கூட யோசிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் உண்மையில்லாததைச் சொல்லப் போனால் ஒருவன் இல்லாததை உண்டு பண்ண வேண்டும். அத்தகைய தவறான செய்கையே ஒருவனை பயத்திலும், கற்பனையிலும் ஆழ்த்தி, மன உலைச்சலுக்கும், கவலைக்கும் ஆளாக்கிவிடுகின்றது.

எனவே துன்பங்களுக்கும், சிக்கலான வாழ்க்கைக்கும் காரணமாக அமையும் விஷய கர்மங்களை விடுத்து சிரேயோ மார்க்கத்தை பின்பற்றுவது மட்டுமே ஒருவனை அழியாத, புனிதமான, உன்னதமான இடத்திற்கு இட்டுச் செல்லும்.

No comments:

Post a Comment