Friday, February 14, 2014

கண்ணனை வெல்லும் அஸ்திரம்!

கண்ணனை வெல்லும் அஸ்திரம்!

'நந்தகோபன் இளங்குமரன்' என்று கண்ணனைச் சொல்வார்கள். தந்தை நந்தகோபனுக்கு அடங்கிய பிள்ளை என்று புகழ்வார்கள். ஸ்ரீராமரும் அப்படித்தான். தன்னை தசரதரின் பிள்ளை என்று பிறர் சொல்வதில் அப்படியொரு ஆனந்தம் அவருக்கு!

ராம.. ராவண யுத்தம் முடிந்தது. 'அப்பாடா... நீ வந்த வேலை முடிந்துவிட்டது. இனி, வைகுந்தத்துக்குச் செல்லலாம்' என்று ஸ்ரீபிரம்மா சொல்ல, உடனே பரமேஸ்வரன், 'என்ன விளையாடுகிறாயா? நம் வேலை சுலபமாகிவிட்டது என்று சுயலாபத்துடன் செயல்படுவது தவறு. ஸ்ரீராமனைத் தர...ிசிக்க அயோத்தியே ஆவலாகக் காத்திருக்கிறது. அவனும் பட்டாபிஷேகத்தைச் செய்து கொள்ளவேண்டும். உறவுகளையும் ஊரையும் பார்த்து அவன் மகிழ வேண்டும். தந்தையை இழந்து தவிக்கிறவனுக்கு, இந்த மனநிறைவேனும் கிடைக்கட்டுமே!' என அருளினாராம் சிவபெருமான்.

இதைக் கேட்ட வால்மீகி நெகிழ்ந்து போனார்; நெக்குருகினார். சிவபெருமானை மனதாரப் போற்றினார். எப்படிப் போற்றினார் தெரியுமா? 'ஷடர்த்த நயனஹா ஸ்ரீமான்' என வாழ்த்திக் கொண்டார். ஸ்ரீமான் என்றால், ஸ்ரீயாகிய தேவியை திருமார்பில் வைத்திருப்பவன் ஸ்ரீமந் நாராயணன் என்றுதான் அர்த்தம். ஆனால், சிவபெருமானை நெகிழ்ந்து புகழ்ந்தார் இப்படி! ஷட் என்றால் ஆறு; அர்த்தம் என்றால் அதில் பாதி. அதாவது, முக்கண்ணன் என்பதை சூசகமாகச் சோல்லி ஆராதித்தார் வால்மீகி.

சிவனாரின் திருவுளம் என்ன நினைத்ததோ, அதையேதான் திருமாலும் நினைத்தார். அதாவது, தசரதரின் மைந்தன் என்று அனைவரும் சொல்வதில் அகமகிழ்ந்தார் ஸ்ரீராமர். அதேபோல், தன்னை எப்போதும் நந்தகோபனின் திருமகனாவே நினைத்து மகிழ்ந்தார் ஸ்ரீகண்ணபிரான்.

இப்படித் தந்தைக்குப் பணிந்தவனாக, இன்னாரின் மகன் என்று சொல்வதில் பெருமிதம் கொண்டவனாக பகவான் ஸ்ரீகிருஷ்ணன் இருந்தாலும், இன்னொரு விஷயத்தில் தெளிவாக இருந்தான். அந்த விஷயம்... விஷமம் தான்! அவனைப் போல சேட்டைகளை எவரும் செய்ய முடியாது. அவனது சேட்டைகளுக்கு எல்லையே இல்லை. மிகுந்த வால்தனம் செய்யும் குழந்தைகளை, 'இது சரியான விஷமக்கொடுக்கு' என்பார்களே... பகவான் ஸ்ரீகிருஷ்ணனும் அப்படியொரு விஷமக் கொடுக்காக.. எவராலும் அடக்கமுடியதவனாகத்தான் இருந்தான்!

அடங்கவே மாட்டாதவன்தான்; எவராலும் அவனை வெல்லவே முடியாதுதான்! ஆனால், அவனை அடக்கியாளவும் அவனை வெல்லவும் ஒரேயொரு அஸ்திரம் போதுமானது. அந்த அஸ்திரம் நம்மிடமே இருக்கிறது. அதன் பெயர்... அன்பு, பக்தி!

உண்மையான அன்பும், ஆழ்ந்த பக்தியும் கொண்டு அவனை நெருங்கினால், நமக்கு அடங்குவான்; நம்மில் வசமாவான். முயன்றுதான் பாருங்களேன்!

No comments:

Post a Comment