Sunday, November 9, 2014

மஹாபலிச் சக்கரவர்த்தி

ஆவணி மாதம் திருவோண நக்ஷத்திரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப் படுகிறது.  இது பரசுராமரின் பூமி என்றும், கடவுளின் நாடு என்றும் அழைக்கப்படும் கேரளப் பகுதியில் விசேஷமாகக் கொண்டாடுகின்றனர்.  நக்ஷத்திரங்களில் "திரு"வாதிரை, மற்றும், "திரு" வோணம் இரண்டு மட்டுமே திரு என்னும் அடைமொழியோடு கூடியது,  திருவோணம் மஹாவிஷ்ணுவின் சிறப்பையும், திருவாதிரை சிவனின்  சிறப்பையும் கூறும். திருவோண நக்ஷத்திரத்தன்று கொண்டாடப்படும் பண்டிகையே ஓணம் பண்டிகை.

மஹாபலிச் சக்கரவர்த்தி ப்ரஹலாதனின் பேரன்.  அவர் மூவுலகையும் ஒருசேர ஆண்டு வந்தார்.  இன்னும் இந்திர பதவியையும் அடைய வேண்டியும் ,மேலும் பற்பல சிறப்புக்களைப் பெற வேண்டியும் மஹாபலிச் சக்கரவர்த்தி யாகம் செய்ய ஆரம்பித்தான். யாகத்துக்கு வருபவர்களுக்கும், மற்றும் பலருக்கும் இல்லை என்னாமல் தானங்கள் பல வழங்கினான்.  ஏற்கெனவே மஹாபலி இந்திரன் பதவியைப் பறிக்கத் திட்டம் போடுவதை அறிந்த தேவர்கள் மஹாவிஷ்ணுவிடம் முறையிட அவரும் உரிய காலத்தில் காஸ்யபருக்குத் தான் மகனாகப் பிறந்து மஹாபலிக்கு மோக்ஷம் கொடுப்பதாகச் சொல்லி இருந்தார்.  அதன்படி திருவோண நக்ஷத்திரத்தில் வாமனன் அவதரித்ததாகச் சொல்லப்படுகிறது.  இந்த வாமனன் குள்ளமான சிறுவனாக இருந்தான்.  இவனுக்கு உபநயனம் செய்வித்து  அந்தக் கால வழக்கப்படி பிரமசாரி பிக்ஷை எடுக்கச் சென்றான்.

மஹாபலி யாகம் செய்வதையும், தானங்கள் கொடுப்பதையும் அறிந்து கொண்ட வாமனன் தானும் அங்கே தானம் வேண்டிச் செல்கிறான்.  வந்தவன் சாதாரணமான நபரல்ல என்பதை அசுர குரு சுக்ராசாரியார் புரிந்து கொள்கிறார். ஆகவே மஹாபலியை எச்சரிக்கிறார்.  ஆனால் மஹாபலியோ மஹாவிஷ்ணுவே தன்னிடம் பிக்ஷை கேட்டு வந்திருப்பதைத் தனக்கு அளிக்கப்பட்ட கௌரவமாக எண்ணிக் கொண்டு தானம் கொடுக்க ஆயத்தம் ஆகிறான்.  பார்த்தால் சின்னஞ்சிறு சிறுவன்.  இவனுக்கு என்ன கொடுப்பது?  வாமனன் மஹாபலியின் யோசனையைக் கண்டு சிரித்துக் கொண்டே தன் காலால் மூன்றடி நிலம் கொடுக்கச் சொல்ல, இது என்ன பெரிய விஷயமா என எண்ணிய மஹாபலி சம்மதம் தெரிவித்து தாரை வார்க்க கிண்டியை எடுக்கிறான். அதைத் தடுக்க எண்ணிய சுக்ராசாரியார் வண்டின் உருவம் எடுத்து கிண்டியின் வாயை அடைத்துக் கொள்ள, விஷமக்கார வாமனன் ஒரு தர்ப்பைப் புல்லால் வண்டின் கண்ணைக் குத்த, வண்டு பறந்து வெளியே வருகிறது.  ஒரு கண் போய் விடுகிறது.

மஹாபலி தாரை வார்க்கிறான்.  குள்ளமாக இருந்த வாமனன் திரிவிக்கிரம அவதாரம் எடுத்து ஒரு காலால் பூமியையும், இன்னொரு காலால் விண்ணையும் அளந்துவிட்டு மூன்றாவது அடியை வைக்க இடம் தேடுகிறான்.  அப்போது இந்த விஸ்வரூப தரிசனத்தால் பக்திப் பரவசம் அடைந்த மஹாபலி மூன்றாவது அடியைத் தன் தலையிலே வைக்குமாறு சொல்லித் தலை குனிந்து அமரத் தன் தலையால் அவனை அழுத்திப் பாதாளத்துக்குள் தள்ளிய வாமனன் அன்று முதல் மஹாபலி பாதாளத்தைக் காவல் காத்துக்கொண்டு சிரஞ்சீவியாக இருப்பான் என்றும் சொல்கிறான்.

நல்லாட்சி புரிந்த மஹாபலியை நினைவு கூர்ந்தே பத்து நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப் படுகிறது.  மேலும் கேரளாவில் மழை முடியும் காலமும் இது.  கிட்டத்தட்ட அறுவடைத் திருவிழா என்றும் சொல்லலாம்.  ஹஸ்த நக்ஷத்திரம் தொடங்கித் திருவோணம் வரையிலும் வரும் பத்து நாட்கள் இந்தப் பண்டிகை கொண்டாடப் படும்  அன்றைய தினம் மஹாபலி தன் குடிமக்களைக் காண வேண்டி வருடா வருடம் இந்த நாளில் வருவதாக ஐதீகம்.  இதுவும் மஹாபலி வேண்டியதன் பேரில் வாமனன் தந்த வரமாகச் சொல்லப்படுகிறது.  ஆகவே தங்கள் அரசனை வரவேற்க பூக்களால் கோலம் போட்டு வைத்து வரவேற்கின்றனர்.  அத்தப்பூ என்னும் ஒரு வகைப்பூவை வைத்துக் கோலம் போடுவார்கள். இந்த விழாவும் அத்தம்பத்து என்னும் பெயரிலும் அழைக்கப்படுகிறது.  ஒரே வகைப்பூக்களில் முதல் நாள் ஆரம்பிக்கும் கோலம் பத்தாம் நாளன்று பத்துவகையான பூக்களால் அலங்கரிக்கப்படும்

"ஓண சாத்யா" என்னும் 64 வகைகளில் ஆன உணவு தயாரிக்கப்படும். எவ்வளவு ஏழையாயினும் அவரவர் சக்திக்கு ஏற்ப ஓணம் கொண்டாடுவார்கள்.  படகுப் போட்டிகள், களறி, கயிறு இழுத்தல், பாரம்பரிய நடனப் போட்டிகள் ஆகியனவும் நடைபெறும். மக்கள் புத்தாடை உடுத்தி, கோயில்களுக்குச் சென்று சிறப்பாக விழாவைக் கொண்டாடுவார்கள்.  இன்றைய தினம் அவர்கள் புத்தாண்டு பிறப்பதாகவும் ஐதீகம். இது தமிழ்நாட்டிலும் குறிப்பாகத் தென் தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வந்ததாக மதுரைக் காஞ்சி சொல்கிறது.


.“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார்
மாயோன் மேய ஓண நன் நாள்
கோணம் தின்ற வடு வாழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறுபொரு செருவின்
மாறாது உற்ற வடு படு நெற்றி
சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர்
கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட
நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…" - மதுரைக் காஞ்சி

நன்றி விக்கிபீடியா!

No comments:

Post a Comment