Thursday, November 13, 2014

நதி மூலம்- ரிஷி மூலம் பார்க்கக் கூடாது

நதி மூலம்- ரிஷி மூலம் பார்க்கக் கூடாது
மலையில் தோன்றும் சிறிய அருவி, சமதளத்தை அடைந்ததும் விரிந்து பரந்து அகண்ட நதியாக வளர்ந்து விடும். சிறு சிறு வாய்க்கால்களும் அதனுடன் கலந்து நதியின் பரப்பளவை அதிகரிக்கச் செய்யும்.
சூரிய வெப்பம், சந்திரனின் குளிர்ச்சி மற்றும் காற்று ஆகியவற்றின் தாக்கத்தால் அந்த நதி நீர் சுத்தமாக இருக்கும். ஆனால், மலையில் அருவி உற்பத்தியாகும் இடம், சுத்தமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அந்த இடம் அருவருப்பாகக் காட்சி தரலாம். மலையில் உள்ள மாசுக்களும் அங்கு இறந்து போன உயிரினங்களின் உருப்படிகளும் அருவி நீரில் கலக்க வாய்ப்பு உண்டு. அதைக் கண்ணுற்றவனுக்கு, நதியின் தூய்மையில் சந்தேகம் வந்து விடும்.
எனவே, நதியின் மூலத்தைப் பார்த்து அதன் தரத்தை நிர்ணயிக்கக் கூடாது என்பர். மலையில் இருந்து சம தளத்தை அடைந்து நதியாக ஓடும்போது அதற்கு பெருமை அதிகம். ரிஷிகேசத்தை விட, ஹரித்வாரில் நீராடுவது சிறப்பு.
சேற்றில் தோன்றியது செந்தாமரை. அதற்காக தாமரையைப் பார்த்ததும் சேற்றின் ஞாபகம் வரக் கூடாது. 'புனுகு' தரும் நறுமணத்தை நுகர வேண்டும்; அது வெளியாகும் விலங்கினத்தின் உருப்படியைப் பார்க்கக் கூடாது. 'வெண் சாமரம்' வீசி கடவுளை வழிபடுவோம். அது கௌரிமானின் ரோமங்கள் என்ற எண்ணம் வரக் கூடாது

அது போலவே ரிஷி மூலத்தையும் பார்க்கக் கூடாது. பராசர முனிவருக்கு மீனவப் பெண்ணின் வாயிலாகத் தோன்றியவர் வியாசர்.

எமதர்மனின் கணக்குப்பிள்ளையான சித்திரகுப்தன், பசுவின் வயிற்றில் இருந்து தோன்றியதாகக் கதை உண்டு. அது, அவனது பெருமைக்கு இழுக்கல்ல. 
குடத்தில் தோன்றியவர் ஆயினும் கடல் நீர் முழுவதையும் குடித்து பெருமை பெற்றவர் அகத்தியர்.

ராமனின் நடத்தையைப் பின்பற்ற வேண்டும். கிருஷ்ணனின் நல்லுரையைக் கேட்க வேண்டும்!' எனச் சொல்லும் பெரியோர்கள், கிருஷ்ணனின் சாகசச் செயல்களைப் பின்பற்றக் கூடாது என்பார்கள்.
ரிஷிகளும் பரோபகாரத்துக்காக வேதங்களை அர்ப்பணித்தவர்கள். அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜீவாதாரமாகத் திகழ்வது- நதி. சிந்தனையாளர்களுக்கு வழிகாட்டுபவர்கள்- ரிஷிகள். அவர்களது தன்னலமற்ற செயல்பாடுகளைப் பார்க்க வேண்டுமே தவிர, அவர்களது மூலத்தை ஆராய்ந்து குறைகளைச் சுட்டிக் காட்டுவது தவறு

No comments:

Post a Comment