Tuesday, November 18, 2014

புத்திசாலித்தனம்

ஒரு ஏழைக் குடும்பத்தில் ராமன் என்ற சிறுவன் இருந்தான். சிறு வயதிலேயே தந்தையை இழந்தான். அவனுடைய தாய் மகனை அழைத்துக் கொண்டு, பிறந்த ஊரான தெனாலிக்கு புறப்பட்டார். அங்கு ராமன் தாய்மாமா வீட்டில் வளர்ந்தான். படிப்பு வரவில்லை. ஆனால், நகைச்சுவையாகப் பேசும் திறமை இருந்தது.
ராமன் வாலிபப் பருவத்தை அடைந்த பிறகு, குடும்பத்தைக் காப்பாற்ற என்ன செய்வது என்ற கவலை எழுந்தது.
ஒருநாள் தெனாலிக்கு ஒரு துறவி வந்தார். அவரிடம் தன் நிலையைச் சொல்லி வருந்தினான். இரக்கப்பட்ட துறவி, காளியின் மூல மந்திரத்தை உபதேசித்து, ""இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் ஜெபித்து வா! காளி உனக்கு பிரசன்னமாகி வேண்டும் வரம் தருவாள்,'' என்று வழிகாட்டினார்.
அதன்படி ராமனும் அந்த ஊரில் இருந்த காளி கோயிலுக்குச் சென்றான்.
மந்திரத்தை 108 முறை ஜபித்து விட்டு கண்களைத் திறந்து பார்த்தான். காளியின் தரிசனம் கிடைக்கவில்லை. இருந்தாலும், ஜெபத்தை விடாமல் தொடர்ந்தான்.
இரவாகி விட்டது. ராமன் கோயிலை விட்டு நகரவில்லை. ஒரு வழியாக காளி அவன் எதிரில் தோன்றினாள்.
"" உனக்கு என்ன வேண்டும்?'' என்று கேட்டாள்.
""தாயே! நான் வறுமையில் வாடுகிறேன். அதைப் போக்குங்கள். படிக்காத எனக்கு நல்லறிவும் தாருங்கள்,'' என்றான் இதைக் கேட்ட காளி கலகலவென சிரித்தாள்.
'' அடேய்! உனக்குப் பேராசை தான். கல்வியும் வேண்டும், செல்வமும் வேண்டுமா?''
""ஆம் தாயே! புகழ் பெற கல்வி வேண்டும். வறுமை நீங்கப் பொருள் வேண்டும்,'' என்றான் ராமன்.
காளி தன் இரண்டு கைகளையும் நீட்டினாள். அதில் இரண்டு பால் கிண்ணங்கள் இருந்தன.
அந்தக் கிண்ணங்களை அவனிடம் தந்தாள் காளி.
""ராமா! இதிலுள்ள பால் விசேஷமானது. வலது கிண்ணம் கல்வி. இடது கிண்ணம் செல்வம். நீ ஒரு கிண்ணத்திலுள்ள பாலை மட்டும் இப்போது குடித்துக் கொள்ளலாம். எது தேவை என்பதை நீயே முடிவு செய்து கொள்'' என்றாள்.
ராமன், ""நான் இரண்டையும் தானே கேட்டேன். ஒன்றை மட்டும் குடிக்கச் சொன்னால் எப்படி? எதை எடுப்பது என்று தெரியவில்லையே'' என்று யோசித்தபடி நின்றான். பிறகு சட்டென்று இடது கையிலிருந்த பாலை (செல்வம்) வலது கையிலிருந்த கிண்ணத்தில் (கல்வி) கலந்து, இரண்டையும் வேகமாக குடித்து விட்டான்.
அதுகண்டு காளியே திகைத்துப் போனாள்.
""அடேய்! நான் உன்னை ஒரு கிண்ணத்து பாலைத் தானே குடிக்கச் சொன்னேன்!''
""ஆம் தாயே, நானும் ஒரு கிண்ணத்துப் பாலைத்தானே குடித்தேன்.'' என்றான்.
""ஏன் இரண்டையும் ஒன்றாகக் கலந்தாய்?''
""கலக்கக் கூடாது என்று நீ சொல்லவில்லையே அம்மா!'' அவனது புத்திசாலித்தனத்தால் மகிழ்ந்த காளி,""பாலகா! நான் உக்கிர தேவதை.
என்னிடம் வரம்பு மீறினால் அவர்களை அழித்து விடுவேன் என்பதை நீ அறிவாய். ஆனால், கோபக்காரியான என்னையே மடக்கி விட்டாயே! ஏமாற்றினாலும் நீ அறிவில் சிறந்தவன். "விகடகவி' என்னும் பெயருடன் வாழ்வில் சிறந்து விளங்குவாய்,'' என்று வரம் அளித்து மறைந்தாள்.
இந்த ராமன் தான், பிற்காலத்தில் கிருஷ்ணதேவராயரின் அரசவையில் விகடகவி தெனாலிராமனாக புகழ் பெற்று விளங்கினார். புத்திசாலிகளைத் தேடி கடவுளும் வருகிறார் என்பது புலனாகிறதல்லவா!

No comments:

Post a Comment