Monday, June 27, 2011

ஆன்மிக கதைகள்16 பழசை நினைச்சுப் பாருங்க!




இன்று நாம் பல ஊர்களில், உயர்ந்த நிறுவனங்களில் பணிசெய்கிறோம். ஐம்பதாயிரம் வரை சம்பளம் வாங்கிக் குவிக்கிறோம். இதற்கு காரணமானவர்கள் யார்? நமது ஆசிரியர்கள். நமக்கு மூன்று வயதாக இருந்தபோதே, ஏ, பி, சி,டி....அ, ஆ.. கற்றுக்கொடுத்த அந்த ஆசிரியர்களை குறைந்தபட்சம் ஒன்றாம் தேதி கைநீட்டி சம்பளம் வாங்கும் போதாவது நினைக்கிறோமா!
ஆனால், படிப்பறிவே இல்லாத ஒருவர் தன் குருவை உயிராக மதித்தார் என்ற கதை தெரியுமா?
கோல்கட்டாவிலுள்ள ஒரு டாக்டரின் வீட்டில் வேலைக்காரனாக இருந்தவர் லாட்டு. ராமகிருஷ்ண பரமஹம்சரின் பக்தரான அந்த டாக்டர், அவரைத் தரிசிக்கச் செல்லும் போதெல்லாம், தன் தேவைகளைக் கவனித்துக் கொள்ள லாட்டுவையும் உடனழைத்துச் செல்வார். ஒருமுறை லாட்டுவைப் பார்த்த ராமகிருஷ்ணர், ""நீ ஆன்மிகத்தில் உயர்ந்த இடம் பெறுவாய்,'' என்றார்.
"எழுத்தறிவே இல்லாத தனக்கு ஆன்மிகத்தில் உயர்ந்த இடமா? இந்த சாமிக்கு என்னாயிற்று?' என்று தானே லாட்டு நினைத்திருப்பார்! டாக்டரும் அதே போல் தான் நினைத்தார்.
ஒருமுறை லாட்டுவை ராமகிருஷ்ணர் தொட்டார். ""இப்போது சொல், ஈஸ்வரகோடிகள் (இறைவனின் பல பிரிவு) என்பவர்கள் யார்?'' என்றார். லாட்டு மடமடவென கண்களில் கண்ணீருடன் பதிலளித்தார்...இப்படி ஒரு உயர்ந்த கேள்விக்கு பதிலளிக்க தன்னால் எப்படி முடிந்ததென ஆச்சரியப்பட்டார். அவரை அடிக்கடி தியானம் செய்யும்படி ராமகிருஷ்ணர் சொல்வார்.
ஒருமுறை லாட்டுவைக் காணவில்லை. அவர் கோயிலில் அதிக நேரமாக தன்னைஜ மறந்து தியானத்தில் இருப்பதாக ஒரு சீடர் சொல்லவே, ராமகிருஷ்ணர் அங்கு சென்றார். லாட்டுவுக்கு உடலில் வியர்வை வழிந்தோடியது. அது கூட தெரியாமல் அவர் தன்னிலை மறந்து அமர்ந்திருந்தார். அதைக் கண்ட குரு அவருக்கு விசிற ஆரம்பித்துவிட்டார். இந்த அற்புதத்தைப் பார்த்தோ என்னவோ, சுவாமி விவேகானந்தர் லாட்டுவுக்கு "அத்புதானந்தர்' என்று பெயர் சூட்டினார். படிப்பே இல்லாத தன்னை ஆன்மிகப் பெருமகனாக்கியதற்காக, ராமகிருஷ்ணரின் இறுதிக்காலத்தில், அவருக்கு மலஜலம் அள்ளிக்கூட சேவை செய்தார் லாட்டு. இந்தக் கதையைப்படித்த நீங்கள், இனியேனும் உங்களை வளர்ச்சிக்கு காரணமான ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களை எண்ணிப் பார்த்து மானசீகமாக வணங்குவீர்கள் தானே!

No comments:

Post a Comment