Saturday, June 25, 2011

குறை சொல்லும் வழக்கம் வேண்டாமே!

குறை சொல்லும் வழக்கம் வேண்டாமே!

வீட்டில் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பும் அம்மா காலையில் பரபரப்பாக வேலை செய்வார். கணவனை வேலைக்கு கிளம்புவதற்குள் மனைவி விறுவிறுவென சமையல் செய்வார். சில சமயங்களில் உணவில் காரம் அதிகமாகி விடலாம், உப்பு குறைந்து விடலாம். தினமும் இப்படி ஆவதில்லை. என்றாவது ஒருநாள் இப்படி ஆகலாம். இதற்காக அவர்களைக் கண்டபடி திட்டுபவர்கள் உண்டு. இப்போது, மொபைல் போன் வந்துவிட்டதால், அலுவலகத்திலிருந்தே அழைத்து மனைவிக்கு டோஸ் விடுபவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் ஒரு செய்தியைத் தெரிந்து கொள்ள வேண்டும். நபிகள்நாயகம் அவர்களைப் பார்க்க ஒரு பெண்மணி அடிக்கடி வருவார். வரும்போது பழங்கள் கொண்டு செல்வது அவரது வழக்கம். நாயகம் அவர்கள் அதில் ஒன்றிரண்டைச் சாப்பிட்டு விட்டு, மற்றதை தனது தோழர்களிடம் கொடுத்து விடுவது வழக்கம். முழுப்பழத்தையும் அவர் சாப்பிடுவதில்லையே என்ற ஆதங்கம் அந்தப் பெண்மணியிடம் இருந்தது. ஒரு சமயம் அந்த அம்மையார் திராட்சைப்பழம் வாங்கி வந்தார்.
நாயகம் அவர்கள், அந்தப்பெண்மணி கொண்டு வந்த பழங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் சாப்பிட்டு விட்டார். அம்மையாருக்கு மிகுந்த ஆனந்தம். அவர் மகிழ்ச்சியுடன் விடைபெற்றுச் சென்றார். உடனே தோழர்கள் நாயகம் அவர்களிடம்,""அண்ணலாரே! எப்போதும் எங்களுக்கு தராமல் சாப்பிடமாட்டீர்கள். இன்று ஏன் எங்களுக்கு தரவில்லை. ஆச்சரியமாக உள்ளதே!'' என்றனர். உடனே நாயகம் அவர்கள், ""தோழர்களே! அந்த அம்மையார் கொண்டு வந்த திராட்சை புளிப்பாக இருந்தது. நான் உங்களில் யாருக்காவது கொடுத்து, "இவை புளிக்கின்றன' என்று சொல்லிவிட்டால், அந்த அம்மையாரின் மனம் புண்படும். எனவே தான் நான் அதை முழுமையாக சாப்பிட்டு விட்டேன். அது மட்டுமல்ல! நான் அவர் கொண்டு வருவதை முழுமையாகச் சாப்பிடுவதில்லையே என்ற அவரது ஆதங்கமும் நீங்கிவிட்டது,'' என்றார்கள். எத்தகைய உயர்ந்த பண்பு பாருங்கள்! பிறர் மனம் நோகாமல் செயல்படுவது மிகப்பெரிய அருஞ்செயல். நாமும் அந்த அரிய பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். என்றோ ஒருநாள் சமையலில் சிறுசிறு குறைகள் இருக்கிறது என்பதற்காக, மனைவியையோ, தாயையோ திட்டாதீர்கள். குறை காணும் வழக்கத்தை விடுங்கள்

No comments:

Post a Comment