Saturday, June 18, 2011

பொன்னையும் மண்ணாகப் பார்க்கும் அடியார்கள்!

பொன்னையும் மண்ணாகப் பார்க்கும் பக்குவநிலை
அடைந்த அடியார்கள்!

கான்கள் எனப்படுபவர்கள் மண், பொன், பெண் என்னும் மூவாசைகளையும் துறந்தவர்கள். குறிப்பாக மண்ணையும் பொன்னையும் சமமாகக் கருதும் மனப் பக்குவம் பெற்றவர்கள்.

ஒருசமயம் பகவான் ராமகிருஷ்ணர் தன் மனைவி சாரதாதேவியுடன் வீதியில் நடந்து கொண்டிருந்தார். முன்னே சென்று கொண்டிருந்த ராமகிருஷ்ணர் கீழே ஏதோ கிடப்பதைப் பார்த்துவிட்டு, அதை மண்ணால் மூடிவிட்டு நடந்தார். இதைக் கவனித்த சாரதா அம்மையார், ""சுவாமி, எதையோ மண்ணால் மூடினீர்களே... என்ன அது?'' என்று கேட்டார்.

""ஒன்றுமில்லை தேவி. பூமியில் ஒரு பொற்காசு கிடந்தது. அதைப் பார்த்தால் எங்கே உனக்குப் பொன் மேல் சபலம் ஏற்பட்டுவிடுமோ என்று ஐயுற்று அதை மண்ணால் மூடினேன்'' என்றார்.

அதைக் கேட்டுப் புன்னகைத்த அம்மையார், ""சுவாமி, தங்களுக்கு இன்னும் மண்ணுக்கும் பொன்னுக்கும் வேறுபாடு தெரிகிறதா? கல்லையும் பொன்னையும் சமமாகக் கருதும் மனப்பக்குவம் அடைந்தவரல்லவா நீங்கள்!'' என்றார். சாரதாதேவியின் மனப்பக்குவ நிலையைக் கண்டு வியந்தார் ராமகிருஷ்ணர்.

நாயன்மார்களில் ஒருவர் அப்பர் சுவாமிகள். அவர் கரத்தில் எப்போதும் உழவாரப்படை இருக்கும். சிவாலயத்தின் திருச்சுற்றில் பக்தர்கள் வலம் வரும்போது, அவர்கள் கால்களில் முட்செடிகள் போன்றவை குத்தாமலிருக்க அவற்றை செதுக்கி அப்புறப்படுத்தும் பணியைச் செய்து வந்தார்.

ஒருநாள் சுவாமிகளைச் சோதிக்கத் திருவுளம் கொண்டார் சிவபெருமான். அப்பர் சுவாமிகள் பிராகாரத்தில் செங்கற்களுக்கு இடையில் மண்டிக் கிடந்த முட்செடிகளை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு செங்கல்லை பொன்னாக மாற்றினார் ஈசன். ஆனால் அடிகளாரோ, அந்தத் தங்கக் கல்லையும் செங்கலாகவே பாவித்து ஒதுக்கிவிட்டுத் தன் திருப்பணியைத் தொடர்ந்து மேற்கொண்டார். கல்லையும் பொன்னையும் சமமாகக் கருதும் அவர் மனப்பக்குவம் கண்டு மகிழ்ந்தார் சிவபெருமான்.

இதேபோன்ற அனுபவம் வைணவப் பெரியாரான வேதாந்த தேசிகருக்கும் ஏற்பட்டது.

ஒருநாள் தேசிகர் அரிசியுடன் கலந்துள்ள மண்ணுருண்டைகள், சிறு கற்கள் ஆகியவற்றை முறத்தில் புடைத்து அரிசியை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அந்த அரிசியினூடே பொன்மணிகளைக் கலந்தார் திருமால்! அரிசியில் கலந்திருந்த தங்க மணிகளைக் கண்ட தேசிகர், "நமக்குத் தேவை திருவாராதனைக்கு அரிசிதான்' என்று பொன்மணிகளை ஒதுக்கித் தள்ளினார்.

இந்த சமபாக மனத்தை கண்ணன் கீதையில், குணத்ரய விபாக யோகத்தில் (14-ஆம் அத்தியாயம், 24-ஆம் சுலோகம்) விளக்குகிறார்.

"ஸம துக்க ஸுக: ஸ்வஸ்த:

ஸம லோஷ்டாச்ம காஞ்சன:/

துல்ய ப்ரியாப்ரியோ தீரஸ் துல்யம்

நிந்தாத்ம ஸம்ஸ்துதி://'

"இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருதுபவன் மண்ணையும் பொன்னையும் சமமாகக் கருதுவான்; போற்றுதலையும் தூற்றுதலையும் சமமாகக் கருதுவான்.'

இந்த ஒப்பற்ற கருத்தை மகான்கள் தங்கள் வாழ்வில் கொண்டு வருவார்கள். ஆன்மிகத்தின் மிகச் சிறந்த நிலை இது!

No comments:

Post a Comment