Saturday, June 18, 2011

ஆன்மிக சந்தேகங்களும் பதில்களும்

அவரவர் தலையெழுத்துப்படியே எல்லாம் அமையும்; நவகிரகங்களே அதைத் தீர்மானிக்கின்றன என்றால் வாஸ்து, எண் கணிதம் போன்றவையெல்லாம் தேவைதானா?

.


நமது தலையெழுத்தை நவகிரகங்கள் எழுதுவதாகச் சொல்லிக் கொண்டாலும் தினமும் நாம்தான் எழுதிக் கொண்டி ருக்கிறோம். மகாதவம் செய்து சிவனருளால் மாபெரும் வரங் களைப் பெற்ற இராவணன்கூட, மாற்றான் மனைவியைக் கவர்ந்த தோஷத்தால் தான் பெற்ற தவப் பயனை இழந்தான். எல்லாம் விதி என்று எண்ணிக் கொண்டிருக்கும் நாம், எப்படியும் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அப்படியே உட்கார்ந்து கொண்டிருந்தால் உணவு உண்ண முடியுமா? எதற்கும் சுயமுயற்சி அவசியம்.

நல்ல யோக பலன் உள்ள ஜாதகர்கூட பாவ காரியங்களைச் செய்வதால் ஆயுள் குறைந்து மரணம் அடைய நேரலாம். ஜாதகத் தில் ஆயுள் குறைவானவர்கள்கூட புண்ணிய கர்மாக்கள் செய்வதால் மார்க்கண்டேயருக்குக் கிடைத்த வரம்போல் ஆயுள் நீடிக்க லாம். நவகிரகங்கள் தரும் தீய பலன்களை மாற்ற பிரார்த்தனைக்கு சக்தி உள்ளது. எந்த நல்ல காரியமும் செய்யாமல் எண் கணிதப்படி என் பெயரை மாற்றிக் கொண்டேன்; வாஸ்துப்படி வீட்டை அமைத்துக் கொண்டேன் என்று பொதுவாகச் செய்வதால், முழுமையாக நல்ல பலனை அடைய முடியாது. கடன் வாங்கி வாஸ்துப்படி வீட்டைக் கட்டினால் குபேர லாபத்தை அடைய முடியுமா? முடியாது. வசதி உள்ளவர்கள் அல்லது நாம் வசிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்காக வீடு வாங்கும்போது அதற்கென கூறப்பட்ட இலக்கணப்படி அமைத்துக் கொள்வது சிறப்பானதாகும்.

நம் முன்னோர்கள் மழைநீர் சேமித்து வைப்பது குறித்து அந்தக் காலத்திலேயே சொல்லி வைத்துள்ளார்கள். வடகிழக்கு சுத்தமாக இருக்க வேண்டும், வடகிழக்கு தாழ்ந்திருக்க வேண்டும் என்று கூறிய படி வடகிழக்கில் கிணறு அமைத்தார் கள். வீட்டில் மழை எந்தப் பகுதியில் பெய்தாலும் வடகிழக்கில் உள்ள கிணற்றில் போய்ச் சேரும்.

மேலும் மயன் எழுதிய வாஸ்து வையும், மரீசி மகரிஷி மற்றும் காச்யப மகரிஷி எழுதியவற்றையும் நன்கு கவனித்தால் கிராமம், நகரம், அரண்மனைகள் எல்லாம் திட்டமிட்டு அமைக்கப்பட்ட விவரத்தைப் புரிந்து கொள்ள லாம். சுமார் 3000 வருடங்க ளுக்கு முன்பாகவே இவ்வாறு திட்டமிட்டு நிர்ணயித்ததை அறிய முடியும். இதை விட்டுவிட்டு வாஸ்து என்றால் வீட்டை இடிப்பது, ஜன்னல்களை மாற்றுவது என்று தவறாக எண்ணிக் கொள்பவர்களுக்கு வாஸ்து புரியாது.

எண் கணிதம் என்பது பரபரப்பாகச் சொல்லப்படும் விஷயம்தான். எண் கணிதம் மாத்திரம் ஒருவருக்கு யோகத்தைத் தராது. பெயர் மாற்றினாலும் ஜாதக யோகத்தை அறிய வேண்டியது மிக அவசியம்.

நாம் வாஸ்து, ஜோதிடம், எண் கணிதம் என்று எதன் தலையிலாவது பழியைப் போட்டுவிட்டு நாம் செய்த செயல்களிலிருந்து தப்பிக்க நினைக்கிறோம். ஒருவன் கடுமையான பூஜை செய்து இறைவனை வேண்டிக் கொண்டிருந்தான். இறைவன் அவனிடம், "என்ன வேண்டும்?' என்று கேட்க, "லாட்டரி சீட்டில் பரிசு விழ வேண்டும்' என்றான். "அவ்வாறே ஆகட்டும்' என்று சொல்லி இறைவன் மறைந்தார். ஆனால் அந்த பக்தன் பல வருடங்கள் காத்திருந்தும் லாட்டரி சீட்டில் பரிசு விழவில்லை. மறுபடியும் பூஜை செய்து இறைவனை வேண்ட, இம்முறையும் இறைவன் தோன்றி, "என்ன வேண்டும்?' என்று கேட்டார். "தாங்கள் முதலில் கொடுத்த வரம் பலிக்கவில்லை. லாட்டரி சீட்டுப் பரிசு இன்னும் விழவில்லையே' என்றான் அவன். அதற்கு இறைவன், "அப்பனே! உனக்கு லாட்டரி சீட்டில் பணம் விழ வைக்கி றேன். ஆனால் நீ ஒரு லாட்டரி சீட்டாவது வாங்கு' என்றார்.

நாம் கடுமையாக உழைத்தால் அதற்குரிய பலனை இறைவன் கொடுப்பான். விதியின்மீது பழியைப் போட்டு வாழ்க்கையை விரயமாக்கிக் கொள்ளக்கூடாது. சாஸ்திரங்களைச் சரியானபடி உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். இதய நோய் கடுமையாகத் தாக்கும்போது சந்திராஷ்டமம், பரணி நட்சத்திரம், வடக்கே சூலம் என்று மருத்துவமனைக்குச் செல்லாமல் இருந்தால் உயிர் பிழைப்போமா? எந்த நேரத்தில் நல்ல நேரத்தைப் பார்க்க வேண்டுமோ அப்பொழுதுதான் பார்க்க வேண்டும். அதே போல்தான் வாஸ்துவும் எண் கணிதமும் தேவையான அளவு உபயோகப்படுத்திக் கொண்டால் பலன் கிடைக்கும்.

● ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொள்ளும்போது பலவித சோதனைகளைச் சந்திக்க நேரிடும் என்கிறார்களே, அது உண்மையா?


வாழ்க்கையில் சோதனைகளும் சாதனைகளும் எல்லாருக்கும் உண்டாகத்தான் செய்கிறது. ஆனால் ஆன்மிகத்தில் ஈடுபடும் போது நாம் செய்யும் எல்லா செயல்களையுமே நல்ல செயல்கள் என்று நாம் எண்ணிக் கொள்கிறோம். சில விஷயங்கள் தவறானதாகக் கூட இருக்கலாம். ஆக, அதற்குரிய பலனை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் நல்லவர்களுக்கு வரக்கூடிய சோதனை தங்கத்தை காய்ச்சி எடுப்பது போல்! பக்தனுக்கு ஏற்படும் சோதனைகளும் சாதனைகளாக மாறும்.

● ஸ்ரீதேவி மஹாத்மியத்தில் ந்யாஸ மந்திரத்தை அடுத்து "ஓம் நமஸ் கண்டிகாயை' எனத் தொடங்குகிறது. இது நவசக்திகளுள் மூன்றாவதாக உள்ள சந்திரகண்டீ அம்ம னைக் குறிக்கிறதா? இல்லை; கிராமங்களில் உள்ள கெண்டியாயி அம்மனைக் குறிக்கிறதா?


நீங்கள் கண்டிகாயை என்று குறிப்பிட்டுள் ளீர்கள். "சண்டிகாயை' என்றுதான் தொடங்கும். சண்டி என்பது பராசக்தியின் ஒரு அம்சமாகும். அசுரர்களை அழிக்க உண்டானவள். இவளும் கிராமத்தில் உள்ள கெண்டியாயி அம்மனும் ஒன்றல்ல. சண்டி தேவியைப் பற்றி பல நூல் களில் கூறப்பட்டுள்ளது என்பது உண்மைதான். இந்த தேவியின் மந்திரத்தை நவாக்ஷரி என்பர். இந்த மந்திரத்தை ஒன்பது லட்சம் முறை ஜெபித்தால் சண்டிதேவியின் அருள் கிடைக்கும். இந்த தேவியை மாந்திரீக முறையில் உபாசிப்பவர் களும் உண்டு. சத்ருக்களை அழிக்கவும் செய் வினைகளை விலக்கவும் சண்டி தேவியின் மந்திரங்கள் பயன்பெறுகின்றன. ஸ்ரீதேவியின் அருள் பெற்றவர்களுக்கு எல்லாருமே தலை வணங்குவர்.

● தங்களின் "ஓம் சரவணபவ' ஆன்மிக இதழ் ஆரம்பித்த மாதம் முதல் நாங்கள் தவறாமல் பக்தியுடன் படித்து வருகிறோம். ஓய்வு பெற்ற ஆசிரியர்களாகிய எங்களுக்கு "ஓம் சரவணபவ' ஆன்மிக அருளை உணரச் செய்கிறது.

நம் இந்து மதத்தில் மந்திர நூல்கள், சுலோகங்கள், துதிகள், காயத்ரி என ஏராளமாக உள்ளன. மற்றும் தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம் என ஏராளமான பாடல்களும் பதிகங்களும் உள்ளன. தினமும் படிக்க மிகமிக முக்கிய மான பக்தி தரும் பாடல்களைத் தயவு செய்து கூறுங்கள்.


ஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் என்ற புத்தகம் கடைகளில் கிடைக்கிறது. இதைப் படிப்பதால் நவகிரக தோஷங்களால் வரும் தொல்லை, விபத்து போன்றவை விலகி சிவபெருமான் அருள் கிடைக்கும். படிக்க எளிமையான தமிழால் அமைந்த அற்புத புத்தகம். இதைத் தவிர திருப்பாவையில் உள்ள "சிற்றஞ்சிறுகாலை' பாசுரத்தைச் சொல்லி வாருங்கள். விஷ்ணு பகவானின் அருள் கிடைக்கும். இவை எளிய தமிழில் இறைவன் அருள் பெற அமைந்துள்ள அற்புதமான துதிகளாகும்.

● புத்தர் போதி மரத்தடியில் (அரச மரத்தடியில்) அமர்ந்து தியானம் செய்து ஞானம் பெற்றார். அரச மரக் காற்றை சுவாசித்தபடி தியானம் செய்வது, மந்திரம் ஜெபிப்பது ஆன்மிக முன்னேற்றத்திற்கு உதவுமா?


அரச மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் கட்டாயம் நல்ல பலன் உண்டு. சூரிய உதயத்திற்கு முன்பாக அரச மரத்தைச் சுற்றி வரவேண்டும் என்பார்கள். பொதுவாகவே இரவு நேரத்தில் மரங்கள் பிராணவாயுவை எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியிடுவதால், இரவு நேரங்களில் மரத்தின் கீழ் உறங்குவதோ, நீண்ட நேரம் மரத்தின் கீழ் சுவாசிப்பதோ ஆரோக்கியமானதல்ல என்பது அறிவியல் கூற்று. அதுபோல பகலில் மரங்கள் கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு பிராண வாயுவை வெளியிடுகிறது. எனவே பகல் நேரக் காற்றே சிறந்தது.

மேலும் வேப்பமரக் காற்று உடலைப் பெருக்க வைக்கும் என்றும்; புளிய மரக் காற்று இளைக்க வைக்கும் என்றும் கூறுவார்கள்.

புத்தர் கடும் தவம் செய்து ஞானம் கிடைக்கும் தறுவாயில் அரச மரத்தடியில் இருந்தார். அரச மரத்தடியில் அமர்ந்ததால் மட்டுமே புத்தர் ஞானம் பெறவில்லை.

No comments:

Post a Comment