Saturday, June 25, 2011

அறிவே, செல்வத்தில் எல்லாம் தலைசிறந்த செல்வமாகும்

பொருள் வரும் வழிகளை உருவாக்குதல், அந்த வழிகளில் பொருளை சம்பாதித்தல், சம்பாதித்த பொருளை பாதுகாத்தல், பாதுகாத்த பொருளை முறைப்படி பிரித்து செலவு செய்தல் ஆகியவற்றை செய்தலே நிர்வாக திறமையுள்ள அரசாங்கமாகும்.படித்தவர்களைத்தான் பார்வையுடையவர்கள் என்று சொல்லலாம். கல்லாதவர்களுக்கு இருக்கும் கண்கள் புண்ணுக்கே சமமானது. மணலில் தோண்டிய கிணற்றில் தோண்டுகிற அளவுக்கு தண்ணீர் சுரப்பது போல, மக்களுக்கு படிக்கின்ற அளவுக்கு அறிவு பெருகும். இளமைப் பருவத்தில் ஒருவன் கற்கின்ற கல்வி, அவனது எல்லாப் பருவங்களுக்கும் பாதுகாப்பாக அமையும். ஏழு பிறப்புக்கும் அது காவல் அரணாக இருக்கும். எந்த வகையிலும் அழிவு பெறாத ஒரே செல்வம் கல்வி மட்டுமே. குறையக்கூடிய அல்லது களவு போகக்கூடிய தங்கம் முதலான பிறசெல்வங்கள் எல்லாம் மதிக்கத்தக்கவையே அல்ல. கொடுக்க, கொடுக்க வளர்வதும், இன்பத்தை தருவதும் கல்வி ஒன்றே. பிறரிடம் கேட்டுப் பெறுகின்ற அறிவே, செல்வத்தில் எல்லாம் தலைசிறந்த செல்வமாகும். படிப்பின் மூலமும், இயந்திரங்கள் மூலமும் பெறும் அறிவு ஒரு அளவுக்கே பயன்படும். கேட்டுப்பெறும் அறிவு எல்லா வகையிலும் வாழ்க்கைக்கு உதவும். பெரிய அளவில் கேட்பதற்கு இயலாவிட்டாலும், ஒரளவாவிற்காவது நல்ல அறிவுரைகளை கேளுங்கள். கேட்ட அந்த ஒவ்வொரு அறிவுரையும் உனக்கு சிறந்த நன்மையைத் தரும். மனதை அது செல்லும் வழியில் எல்லாம் அலையவிடாமல், தீயஎண்ணங்களை அகற்றி நல்லவழியில் செலுத்த வேண்டும். இதுவே அறிவுள்ள செயலாகும். ஒரு செயலைச் செய்யும் போது நமக்கு தெரிந்த வழிமுறைகளைக் கையாண்டு கடைசி வரை செய்து முடித்து வெற்றி பெறுவது ஒரு வகை. அவ்வாறு முடியாத பட்சத்தில் பிறருடைய துணையை தாராளமாக வேண்டலாம். அவ்வாறு செய்து வெற்றியடைந்தாலும் அது ஏற்றுக் கொள்ளத்தக்கதே. நீ மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால், உனக்கு முன் வாழ்ந்தவர்களை எண்ணிப்பார், அவர்கள் மதிமயங்கி கடமைகளை ஆற்ற மறந்து கெட்டழிந்து போயிருந்தால், அவற்றைச் சிந்தித்துப் பார். உன் வாழ்க்கை சரியாகிவிடும்.ஒருவனுக்கு நல்ல குணம் இருந்தாலும், பணம் இல்லாவிட்டால் தாய் உட்பட யாரும் மதிக்க மாட்டார்கள். கெட்ட குணம் இருந்தாலும், அவனிடம் பொருள் இருந்தால் அவனை பொய்யாகவேனும் புகழ்வார்கள்.ஒருவனுக்கு எதுவேண்டுமானாலும் வரலாம், வறுமை மட்டும் வரக்கூடாது. வறுமையை விட கொடியது வறுமையே. ஒருவனை வறுமை பற்றிவிட்டால் அவ்வளவு எளிதில் விடாது. அவனது பரம்பரை பெருமையையும், புகழையும் ஒரு சேர அழித்துவிடும்.உழைத்து வாழ முடியாமல், சோம்பேறியாக பிச்சை எடுத்து வாழவேண்டும் என்று ஒருவனது தலையில் கடவுளே எழுதி வைத்தான் என்றால் கூட, அந்த கடவுளும் குற்றவாளி தான். தன் தகுதிக்கு ஏற்ப வாழாமல், தன் பொருளாதார நிலை, முதலீடு ஆகியவற்றின் அளவு அறியாமல் பெருமைக்கு ஆசைப்பட்டு அகலக்கால் வைப்பவன் விரைவில் அழிவான்.

No comments:

Post a Comment