Saturday, June 25, 2011

பாசமுள்ள தாய்மையிலே கடவுள் வாழ்கிறான்

* ஒரு குழந்தை நன்றாக நடக்கப் பழகுவதற்கு முன் பல முறை கீழே விழுகிறது. இதைப் போல, தோல்விகள் வாழ்க்கையின் இயற்கையே. ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்குரிய பாதையைக் காட்டுகிறது.
* பிறருக்கு பொருளுதவி செய்யாவிட்டாலும், புன்முறுவல் தவழ அன்பாகப் பேசலாம். இதற்கு பெரிய பணக்காரராக இருக்க வேண்டியதுதில்லை. கருணை உள்ள இதயம் இருப்பதே ஆன்மீக வாழ்வின் முதல் படியாகும்.
* பிறர் மீது அன்பும் கருணையும் படைத்தவர்கள் பகவானைத் தேடி அலைய வேண்டியதில்லை.
பாசமுள்ள தாயிடம் நாம் கடவுளைப் பார்க்கலாம். கருணை என்று துடிக்கும் இதயத்தைத் தேடியும் கடவுள் செல்வார். அத்தகைய இதயமே கடவுள் விரும்பி குடியிருக்கும் கோயிலாகும்.
* ஏழைகள் மற்றும் துன்பப்படுபவர்களிடம் கருணை காட்டுவதே உண்மையான அன்பும், பக்தியுமாகும். பசித்திருப்பவருக்கு உணவும், திக்கற்றவர்களுக்கு உதவியும், கவலைப்படுபவர்களுக்கு ஆறுதலும், துயரப்படுவோருக்கு நிவாரணமும் அளியுங்கள். அனைவர் மீதும் இரக்கம் காட்டுங்கள்.
* தியானம், பிரார்த்தனை போன்ற ஆத்மசாதனைகள் மதிப்பு மிக்கவையாகும். அத்துடன் அன்பு, கருணை, பிறரிடம் அக்கறை போன்ற நல்ல பண்புகளும் இருந்தால் நறுமணம் மிகுந்த பொன்மலரைப் போல விளங்குவோம்.
* உலகப் பொருள்களிலிருந்தும், புலன் இன்பங்களிலிருந்தும் பெறும் அற்ப சுகங்கள், நமக்குள் விளங்கும் ஆத்மசொரூபத்தின் எல்லையற்ற பேரின்பத்தின் பிரதிபதிப்பாகும்.
* உலகிலுள்ள அனைத்து உயிர்களும் இறைவனின் அம்சம். நாம் ஒருவரை ஒருவர்
"ஓம் நமசிவாய' என கூறி வணங்கும் போது ""உங்களுக்குள் இருக்கும் இறைவனை வணங்குகிறேன், அந்த இறைவன் மீது எனக்கு அன்பும் மரியாதையும் இருக்கின்றன'' என்று அவரிடம் கூறுவதாகப் பொருள்.
* பணத்தையும் பிற உலகப் பொருள்களையும் பிறருக்கு வழங்கும் போது அவை நம்மை விட்டு நிரந்தரமாக நீங்கிவிடுகின்றன. ஆனால் பிறருக்கு எவ்வளவு அன்பு வழங்குகிறேமோ அவ்வளவு அதிகமான அன்பு நம் இதயத்தில் நிரம்புகிறது.
* எந்த வேலையும் முக்கியமில்லாமலும், பொருளற்றதாகவும் இல்லை. அந்த வேலையை இதயப்பூர்வமாகவும், அன்புடனும் செய்தால் அது முக்கியமானதாகவும், அழகானதாகவும் மாறிவிடுகிறது.
* மனதை கட்டியாளும் திறமையைப் பெறுவதே நாம் பெற வேண்டிய முக்கியமான ஆன்மிகக் கல்வியாகும்.
* நமது இதயமான கோயிலில் இறைவனைப் ரதிஷ்டை செய்ய வேண்டும். நல்ல எண்ணங்களை அர்ச்சனை மலர்கள், நல்ல செயல்கள் பூஜையாகும். பிறரிடம் அன்பாகப் பேசுவது இறைவனைப் போற்றிப்பாடுவதாகும். அன்பே நைவேத்யமாகும்.
* பிறருக்குத் துன்பமும் வேதனையும் தரும் செயலை செய்யக்கூடாது. இப்படிப்பட்ட செயல்கள் இறுதியில் உங்களுக்கே கெடுதல் செய்யும். யாரையாவது புண்படுத்தும் போது, அவர் குற்றமற்றவராகவும் இருக்கலாம். அவர் தவறு எதுவும் செய்யாமலே புண்படுத்தப் பட்டதாக இதயம் நொந்து வருந்துவர். அவரது எண்ணமும், பிரார்த்தனையும் உங்களைப் பாதிக்கும். பிற்காலத்தில் நீங்கள் துன்பப்பட இவை காரணங்களாகிவிடும். ஆகவே யாரையும் எண்ணத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ புண்படுத்தக்கூடாது.
* ஒவ்வொருவரிடமும் உள்ள நல்லதையே காணுங்கள். எங்கு சென்றாலும் தேனை
மட்டும் சேகரிக்கும் தேனியைப் போல இருங்கள்.

No comments:

Post a Comment