Saturday, June 11, 2011

இப்பிறவியில் சேர்த்த செல்வங்கள் இறந்த பிறகு நம்மோடு கட்டாயம் வரும்

                   காலை நேரம்... உள்ளூர் பாடசாலையில் படிக்கும் ராமசுப்பு அவசரமாக ஊரின் நாட்டாண்மை வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாகச் சென்று கொண்டிருந்தான். கண்களில் கண்ணீர். அந்த நிலையில் அவனைப் பார்த்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஊர் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு எந்த பதிலுமில்லை. நடையில்தான் இன்னும் வேகம் கூடியது. மக்களும் அவனைப் பின்தொடர்ந்தார்கள்.

நாட்டாண்மை அப்பொழுதுதான் வயலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். வேகமாக வந்த ராமசுப்புவைக் கண்டதும், ""என்னடா, என்ன விஷயம்?'' எனப் பதட்டத் துடன் கேட்டார்.

பீறிட்ட அழுகையை அடக்க முடியாமல் - பேச முடியாமல் நின்றான் அவன். பின்னால் வந்த ஆட்களைப் பார்த்து, ""நீங்களாவது சொல்லுங்கய்யா, என்ன விஷயம்?'' என்றார்.

அவர்களும், ""எங்களுக்கும் தெரியலைங்க. கேட்டா எந்தப் பதிலும் சொல்லலை. வேகமாக இங்கே வந்தான். நாங்களும் இவன் பின்னாடி ஓடி வந்தோம்'' என்றனர்.

இதற்குள் சிறிது நிதானப்பட்ட ராமசுப்பு, ""அய்யா! காலை ஆறரை மணி இருக்கும். சாமியோட குடிசைக் குப் போய் கதவைத் தட்டினேன். "யாரது'ன்னு கேட்டார். "நான் தான் சாமி'ன்னேன். கொஞ்ச நேரம் பேசாம இருந்துட்டு பிறகு, "போ போ. நான் செத்ததும் வா'ன்னார். எனக்கு ஒண்ணும் புரியலைய்யா! உடனே ஓடிவந்துட்டேன்!'' என்றான்.

அவனுக்கு மட்டுமா - நாட்டாண்மை மற்றும் ஊர் மக்களுக்கும் எதுவும் புரியவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

நாட்டாண்மை எல்லாரையும் பார்த்து, ""வாங்கய்யா! நாம சாமிகிட்டே பேசலாம்'' என அனைவரையும் கூட்டிக் கொண்டு சாமியின் குடிலை நோக்கி விரைவாக வந்தார்.

சாமியின் குடிசைக் கதவு இன்னும் திறக்கப்படவில்லை. ஒருவாறாகத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கதவைத் தட்டினார் நாட்டாண்மை. உள்ளிருந்து, "யாரது?' என்ற கேள்வி வந்தது. உடனே நாட்டாண்மை, ""நான் தான்யா ஊர்த்தலைவர் வந்திருக்கிறேன். கதவைத் திறங்கய்யா'' என்றார்.

அவருக்கும் அதே பதில்தான். ""போங்க, நான் செத்ததும் வாங்க.''

அனைவருக்கும், என்ன செய்வதென்றே புரியவில்லை. அதற்குள் கூட்டத்தில் இருந்த ஒருவர், ""தலைவரே, சாமிக்கு தான் இறக்கப் போகும் காலம் தெரிந்து விட்டது. என்னதான் துறவியாயிருந்தாலும் மரண பயம் இருக்காதுங்களா? நான் என்ன நினைக் கிறேன்னா, சாமி உள்ளே தியானத்திலேயே உயிர விடப்போறாருபோல இருக்குது. தாமதம் செய்யாம சுற்றுப்புற கிராமங்களுக்கெல்லாம் சொல்லியனுப்பி, எல்லாரையும் வரவழைச்சு, அவங்க முன்னாடி சாமியோட பூத உடலுக்கு அபிஷேகம் செஞ்சு, ஊர்வலமாக் கொண்டு வந்து, சாமி வாழ்ந்த குடிசை யிலேயே அவரை சமாதி வைச்சு, அதன்மேலே முறைப் படி ஒரு சிவலிங்கத்தை வைச்சு கோவிலா மாத்திடலாங்க'' என திட்டங்களையெல்லாம் விவரிக்கத் தொடங்கி விட்டார்.

இவ்வாறு இவர் தனது மேதாவிலாசத்தைக் காட்டிக் கொண்டிருந்தபொழுது கதவு மெதுவாகத் திறந்தது. சாந்தம் பொழியும் கண்களுடன் - அமைதி தவழும் முகத்துடன் அந்த ஞானி வெளியில் வந்து கருணையுடன் அனைவரையும் பார்த்தார்.

பின் அவர்களை அன்புடன் பார்த்து, ""குழந்தைகளே! நீங்கள் உங்களையே முன்னிறுத்தி, "நான், எனது' என்ற குறுகிய வட்டத்துக்குள்ளே செயல்பட்டு வியாபாரியைப் போன்று மாறிவிட்டீர்களே! வாழ்க்கை என்பது வியாபாரமல்ல; இறைவன் நம்மை மேம்படுத்திக் கொள்ள அளித்திருக்கும் சாதனம். நாம் நம் நெஞ்சத்தே நான், எனது என்ற கீழ்மைக் குணங்களைக் கொலுவேற்றி, இறைவன் அளித்த அற்புத சாதனத்தைப் பாழ்படுத்தினால், "நான் எதற்கு?' என்று இறைவன் நம்மை விட்டுச் சென்றுவிட மாட்டானா?

தொடக்கம் என ஒன்றிருக்குமானால் முடிவும் கட்டாயமல்லவா! நமது இலக்கு முடிவினை எண்ணி வருந்துவதல்ல. அனைவருக்கும் உண்டான நியதி, நீதி. இறப்பென் பதும் முடிவல்ல; வேறொரு பிறப்பிற்கு அதுதான் வித்து. வருகின்ற பிறவி நன்கு அமைய விரும்பினால் இப்பிறவியில் வைப்பு நிதியைத் தேடிக்கொள்ள வேண்டாமா? பாதிக்கப்பட்டோருக்கு எவ்வித பேதமும் பாராது, தாய் தன் பிறந்த குழந்தையைக் காப்பதுபோல சேவை செய்யுங்கள். அதுதான் இறைவனுக்குச் செய்யப்படும் பூஜை. சேர்க்கையில் உண்டான உடல் மரணமடைவதற்குதான். அதாவது முடிவிற்குதான் உண்டானது. நீங்கள் அழிக்க வேண்டியது "நான், எனது' என்ற களங்கத்தை! ஈடுபடுத்திக் கொள்ள வேண்டியது தேவையானவர்களுக்கு சாதி, மத வேறுபாடின்றி செய்யும் தொண்டை!

அப்பர் எவ்வளவு பெரிய மகான். அவரது வாழ்க்கையே தொண்டுதானே. இரண்டு நூற்றாண்டு களுக்குமுன் அருட்செல்வத்தை வாரிவாரி வழங்கிய வள்ளல் பெருமான் அகங்கார, மமகார, பேதைக் குணங்களை அகற்றி, நாமும் விடுதலை பெற புத்திக்கு ஞானத்தையும், பசித்த வயிற்றிற்கு அன்னதானத்தையும் அளித்து அருந்தொண்டாற்றவில்லையா?

இப்பிறவியில் சேர்த்த செல்வங்கள் இறந்த பிறகு நம்மோடு வருமா என்று கேட்பார்கள். வரும்; கட்டாயம் வரும். ஈட்டிய செல்வத்தை, எளிய வாழ்க்கைக்குத் தேவையானது போக மீதத்தை ஏழைகளுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் அடிப்படைத் தேவைகளுக்காக அள்ளிக் கொடுங்கள். அழிகின்ற செல்வம் அழியாத செல்வமாக- புண்ணியமாக நம்மோடு வந்து பிறவிச் சுழற்சியையே அற்றுவிடச் செய்யும்.

எவ்வளவோ மன்னர்கள் வந்தார்கள்; ஆண்டார்கள். நெஞ்சத்தே நிலைக்கவில்லை. ஆனால் நம் நெஞ்சம் குமணனையும் பேகனையும் பாரியையும் கர்ணனையும் மற்ற கொடை வள்ளல்களையும் மறக்கவில்லையே! ஆகவே அன்பானவர்களே, உங்களுக்கு என் வேண்டுகோள் இதுதான். தொண்டு செய்யுங்கள். துவளாது தொண்டு செய்யுங்கள். இவ்வாறு செய்யின் "நான், எனது' என்பன சாகும். இதைச் சுட்டத்தான் நான் உங்களிடம் "நான் இறந்தால்' வாருமெனச் சொன்னேன். இறந்தும் இறவாதிருக்க இதுவே வழி. காட்சியில் திளைப்பது இனி உங்கள் பொறுப்பு!'' என்றார்.

No comments:

Post a Comment