Saturday, June 11, 2011

மணிகர்ணிகா

  ந்தியாவில் பல இடங்களிலும் ஆடி, புரட்டாசி, தை மாத அமாவாசை களில் புனித நீர் நிலைகளில் முன்னோர் களுக்கு திதி மற்றும் வழிபாடுகள் செய்யப்படுவதை நாமறிவோம். இதில் புனித நதிக்கரைகளும் கடற் கரையோரங்களும் மிகவும் சிறப்பிக்கப்படுகின்றன. ஆனால், காசியில் (வாரணாசி) உள்ள "மணிகர்ணிகா காட்' என்னும் இடத்திலுள்ள மணிகர்ணிகா குளம் இவையெல்லாவற்றையும்விட சிறந்ததாகப் போற்றப் படுகிறது. இந்தக் குளத்தினையொட்டிய கங்கை நதிக்கரையில் எல்லா நாட்களிலும் மாதங்களிலும் மறைந்த முன்னோர்களுக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

இந்த மணிகர்ணிகா குளம் மிகவும் புனிதமானது. பல தலைமுறைகளைச் சேர்ந்த முன்னோர்கள் சுவர்க்கம் செல்ல வழிவகுக்கும் புனிதக் குளம். இந்தக் குளம் கங்கை நதி இங்கு வருவதற்கு முன்பே அமைந்திருந்த தாகப் புராணம் சொல்கிறது.

மகாவிஷ்ணு தன் தங்கை உமையவளை பரமசிவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார். அந்தத் தம்பதிகள் தேனிலவு செல்ல ஓர் புனிதமான இடத்தைத் தேடினார்கள். கயிலாயத்திலும் தேவ லோகத்திலும் பல வசதிகள் இருந்தும் அங்கு தேவர்கள், ரிஷிகள், தேவகணங்களின் இடையூறுகள் இருக்கும் என்பதால் பூலோகத்தில் ஓரிடத்தைத் தேடினர். அப்பொ ழுது அவர்களுக்கு ஒளி பொருந்திய- ஆனந்த மான- மனதைக் கவரும் ஓரிடம் தென்பட்டது. அந்த இடம் பிரளய காலத்திலும் மூழ்காமல் தனித் தன்மை பெற்றிருந்ததை அறிந்த பரமசிவனும் உமையவளும் அங்கு தேனிலவு கொண்டாட திட்ட மிட்டனர். இதனை அறிந்த மகாவிஷ்ணு, புதுத் தம்பதிகள் நீராட ஒரு குளத்தை அந்த ஆனந்தவனத்தில் தன் சக்கராயுதத்தினால் உண்டாக்கினார்.


தெளிந்த நீர் நிறைந்த அக்குளத்தை தங்கை உமையவளிடம் காண்பித்தார் மகாவிஷ்ணு. உமையவள் அந்த அற்புதமான குளத்தை கரை யோரத்திலிருந்து எட்டிப் பார்த்தாள். அதில் உமையவளின் அழகுமுகம் பிரகாசமாகத் தெரிந்தது. தான் அணிந்திருந்த ஆபரணங்களை ஒழுங்குபடுத்த முனைந்தாள் உமையவள். அப்போது அவள் காதில் அணிந்திருந்த மணிகள் நிறைந்ததோடு அந்தக் குளத்தில் விழுந்தது. சிவபெருமான் அதனை எடுக்க முயன்றபோது, அவர் காதில் அணிந்திருந்த ஒரு குண்டலமும் குளத்தில் விழுந்தது. தம்பதிகளின் காதணிகள் விழுந்த அந்தக் குளம் "மணிகர்ணிகா' என்று பெயர் பெற்றது. (கர்ணம் என்றால் காது).
இந்தக் குளத்தை மகாவிஷ்ணு உருவாக்கினார் என்பதற்கு
அடையாளமாக இக்குளத்தின் வடகிழக்குப் பகுதியில் மகாவிஷ்ணு ஸ்ரீ மகாலட்சுமியுடன் எழுந்தருளியுள்ளார்.

பரமசிவனும் உமையவளும் தேன்நிலவு கொண்டாடிய ஆனந்தவனம் என்னும் பகுதியே வாரணாசி என்னும் காசித் திருத்தலம் ஆகும்.

இறைவனும் இறைவியும் தேனிலவினை பூலோகத்தில் கொண்டாடியபின் கயிலை சென்றார்கள். இதனை அறிந்த தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் அந்தப் புனிதக் குளத்தைத் தரிசித்து அதில் நீராடி மேன் மேலும் புனிதம் பெற்றார்கள்.

அந்தக் காலத்தில் காசியின் வழியாக கங்கை நதி ஓடவில்லை. யாரும் தெரிந்து கொள்ள முடியாத ஒரு மலையின் குகையில் தோன்றிய கங்கையானவள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிதான் ஓடிக் கொண்டிருந்தாள். அவள் மணிகர்ணிகா குளம் பற்றி கேள்விப் பட்டதும், அதனைத் தரிசிக்க உத்தரவாகி னியாக மாறி, தன் பயணத்தைத் திருப்பி வடக்கு நோக்கி ஓடி வந்து, மணிகர்ணிகா குளத்தைத் தரிசித்து, நீராடி மகிழ்ந்தாள். அன்றிலிருந்து வாரணாசியில் கங்கை தன் பயணத்தைத் தொடர்ந்து ஓடி மணிகர்ணிகா குளத்திற்கு மேன்மேலும் புகழைச் சேர்த் தாள். அத்துடன், அங்கு வரும் பக்தர்களை யும் புனிதப்படுத்திக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறாள்.

யாரொருவர் வாரணாசியில் இறக்கும் நிலைக்கு புண்ணியம் செய்திருக்கிறார் களோ, அவர்களின் இறுதி மூச்சு அடங்கும் வேளையில் அந்த ஜீவனைத் தன் மடியில் பார்வதி எடுத்து வைத்துக் கொண்டதும், சிவபெருமான் அந்த ஜீவனின் வலது காதில் ராமநாமத்தை ஜெபித்து முக்தியடைய வைக் கிறார் என்பது ஐதீகம். அதனை நிரூபிக்கும் வகையில் அங்கு சிவபெருமான் ஏற்றி வைத்த நெருப்புக் குண்டம் ஒரு மண்டபத்தில் இன்றும் கனன்று கொண்டிருக்கிறது. அதிலிருந்துதான் நெருப்பு எடுத்து கொள்ளி வைக்கப்படுகிறது.

மணிகர்ணிகா குளத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள கங்கை நதிப் படித்துறைக்கு அருகில்தான் சடலங்கள் தகனம் செய்யப் படுகின்றன. இங்கு எடுத்து வரும் சடலங்கள் எத்தனை பாவங்கள் செய்திருந்தாலும் அவை புனிதப்படுத்தப்படுகின்றன. சடலத்தை மூன்று முறை கங்கை நதியில் மூழ்க வைத்து, பின்னர் சிதையிலிட்டு எரியூட்டுகின்றனர்.

காசியின் கங்கைக் கரையோரத்தில் 64 படித்துறைகள் உள்ளன. இதில் மணிகர்ணிகா படித்துறை மற்றும் அரிச்சந்திரா படித்துறைகளில்தான் சடலங்கள் தகனம் செய்யப் படுகின்றன. பிணங்களை எரியூட்டும்போது எந்தவித துர்நாற்றமும் ஏற்படுவதில்லை. அது மட்டுமல்ல; சடலங்களை இறைவனின் திருவருள் பெற்றதாக நினைத்து தொட்டு வணங்கிச் செல்வதையும் காண முடிகிறது. இங்கு "தீட்டு' என்ற பேச்சுக்கே இடமில்லை.


சடலம் எரிந்து சாம்பலானதும், அதே கங்கை நதியில் அஸ்தியைக் கரைத்துவிட்டு, ஈமச்சடங்குகள் முடிந்ததும் கங்கை நதியில் நீராடிவிட்டுச் செல்கிறார்கள். இந்த மணி கர்ணிகா படித்துறையில் இருபத்து நான்கு மணிநேரமும் சடலங்கள் தகனமாகிக் கொண்டிருக்கின்றன.


காசிக்கு வரும் பக்தர்கள் முதலில் மணி கர்ணிகா குளத்தில் நீராடிவிட்டு, அதன்பின் கங்கை நதியில் நீராடி மறைந்த முன்னோர் களுக்கு வழிபாடுகள் செய்கிறார்கள். இதற்கென்று பண்டாக்கள் என்று சொல்லப் படும் வேத விற்பன்னர்கள் தாழம்பூ குடையின்கீழ் தயாராக உள்ளார்கள்.

இந்த மணிகர்ணிகா குளத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் நீராடி தங்கள் முன்னோர் களுக்கு வழிபாடுகள் செய்தால், அவர்கள் நரகத்திலிருந்தாலும் உடனே புனிதம் பெற்று சுவர்க்கம் செல்வார்களாம். மறுபிறவி எடுத்திருந்தால் நல்ல புனிதமான காரியங்கள் செய்யும் மனிதர்களாக இருப்பார்களாம். மேலும் அவர்களுக்கு வேளாவேளைக்கு பசிக்குத் தகுந்த உணவும் கிட்டுமாம். வழிபாடு செய்பவர்களுக்குப் புனிதம் சேருவதுடன், அவர்கள் வாழும் காலம் முடிந்தபின் சுவர்க்கம் செல்வார்கள் என்றும் நம்பப்படுகிறது. வழிபாடுகள் முடிந்ததும் அன்னதானம் செய்வது மிகவும் போற்றப் படுகிறது. இதனால் புண்ணியம் மேன்மேலும் சேரும் என்பது ஐதீகம்.

எனவே, காசிக்கு புனிதப் பயணம் செல்பவர்கள் காசி விஸ்வநாதர், ஸ்ரீ விசா லாட்சி, ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ தண்டபாணி, சோழி அம்மன், பைரவர் மற்றும் பிற தெய்வங்களைத் தரிசிப்பதுபோல, இந்த மணிகர்ணிகா குளத்தினையும் தரிசித்து, நீராடிப் புனிதம் பெற வேண்டும்.

No comments:

Post a Comment