Sunday, June 26, 2011

அறுபடை வீட்டில் முருகனின் நிலைகள்

ஆறு படைவீடுகளில் முருகப்பெருமான் ஆறு நிலைகளில் விளங்குகிறார். குறிப்பாக திருப்பரங்குன்றத்தில் திருமண நிலை (உல்லாசம்), திருச்செந்தூரில் கவலை தோய்ந்த நிலை (நிராகுலம்), பழநிமலையில் ஞான பண்டிதனாகத் துறவி கோலநிலை (யோகம்), சுவாமிமலையில் தந்தைக்கு இதமாகப் பிரணவப் பொருள் உபதேசித்த குரு நிலை (இதம்), திருத்தணியில் குறிஞ்சி குன்றுகளில் மகிழ்ந்த நிலை (சல்லாபம்), சோலைமலையில் ஞானப்பழம் உதிர்க்கும் ஆனந்தநிலை (விநோதம்) நிலையில் அருள்பாலிக்கிறார்.
முருகனுக்கு ஆறுநாள் திருநாள் கந்தசஷ்டி விரதம் ஆறுமுகப்பெருமானுக்குரிய ஆறுநாள் விரதமாகும். "சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்'' என்னும் பழமொழி இவ்விரதத்தின் மகத்துவத்தைப் போற்றுவதாகும். மேலோட்டமாக சட்டியில் உணவு இருந்தால் தானே கரண்டியில் வரும் என்று பாமரர்கள் இதற்கு பொருள் சொல்வர். தத்துவார்த்தமாக, இப்பழமொழியை ""சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வளரும்'' என்று கூறுவர். சஷ்டி விரதம் மேற்கொள்ளும் தம்பதியருக்கு அகப்பையான கருப்பையில் நல்ல கரு (குழந்தை) வளரத்தொடங்கும் என்பதே இதன் உண்மைப்பொருள். மழலைச் செல்வம் வாய்க்காத தம்பதியர் யாவரும் முருகப்பெருமானைக் குறித்து இவ்விரதத்தைக் கடை பிடிப்பர். ஐப்பசி அமாவாசையின் மறுநாளான பிரதமை முதல் சஷ்டி வரையிலான ஆறு தினங்கள் இவ்விரதம் மேற்கொள்ளப்படும்.

சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

பொதுவாக விரத தினங்களில் மக்கள் சைவமாக இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு, பலகாரங்களை விருப்பமாக உண்ணுகின்றனர். ஆனால், விரதத்தை நியமத்தோடு கூடியதாக இருப்பதே முழுபலனைத் தரும். கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு. காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது. காலை, மாலை வழிபாட்டின் போது அவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும். ஆறுநாட்களும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தைக் கேட்பதும் அவசியம். மலைக்கோயிலாக இருப்பின், காலையிலும், மாலையிலும் முருகனுக்குரிய துதிகளை மனதில் ஜபித்தபடியே கிரிவலம் வருவது நன்மை தரும்.

விரத நிறைவு நாள்

விரத நிறைவு நாளான கந்தசஷ்டி அன்று கோயிலுக்குச் சென்று முருகனுக்கு மாவிளக்கு இடுவர். முருகப்பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடுவர். மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர்நிலைகளிலோ நீராடவேண்டியது அவசியம். அன்று இரவு பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். மறுநாள் முருகன் கோயில்களில் நடக்கும் பாவாடை நைவேத்யத்தை தரிசனம் செய்தபின்னரே சாப்பிடவேண்டும் என்றும் கூறுவதும் உண்டு. "முன் செய்த பழிக்குத் துணை முருகா' என்னும் நாமம் என்பார் அருணகிரிநாதர். முருகப்பெருமானுக்குரிய சஷ்டி விரத நாட்களில் முடிந்தவரை "ஓம் முருகா!' என்று ஜபிப்பது நன்மை தரும். இதனால், புத்திரதோஷம் நீங்கி நல்ல அறிவும் அழகும் உள்ள குழந்தைகள் உண்டாகும். நம் பிறவிப்பிணி நீங்கி முருகனருள் எப்போதும் துணை நிற்கும்.


ஆறுமுகத்தை வழிபட்டால் ஏறுமுகம்

ஆறுமுகக்கடவுளான முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள், ஆறு திருமுகம், ஆறு கார்த்திகை பெண்கள், ஆறு சமயங்களுக்கும் தனிப்பெருங்கடவுள், ஆறு மந்திரங்கள், ஆறு நாட்கள் கந்தசஷ்டி விரதம், ஆறுமுகனுக்கு உகந்த ஆறு நூல்கள், தோன்றிய இடமும் ஆறு (கங்கை ஆறு) இவ்வாறு ஆறு என்பதுடன் முருகப்பெருமானுக்கு நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. ஆறுமுகத்தை மனமுருகி வழிபட்டால் நம் வாழ்க்கையில் ஏறுமுகத்தை காணமுடியும்.

1 comment:

  1. ஆறுமுகத்தை மனமுருகி வழிபட்டால் நம் வாழ்க்கையில் ஏறுமுகத்தை காணமுடியும்.

    ReplyDelete