Saturday, June 25, 2011

பல இடத்தில் பிறந்த நதிகள் ஒரு கடலில் வந்து சேரும் - கமலாத்மானந்தர்




* ராமகிருஷ்ணரின் சிறப்புக்கு முக்கிய காரணம் அவர் எந்தவொரு சித்தாந்தத்தையும் உயர்த்தி, மற்றவர்களின் ஆன்மிக கருத்துக்களை குறை சொல்லவில்லை. எந்த ஒரு சித்தாந்தத்திற்கும் முக்கியம் அளிக்கவில்லை. மாறாக அனைத்து மதப்பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அனைத்து மதக்கருத்துக்களையும் ஒருங்கிணைக்கும் சமய சமரச வாழ்க்கையாக அவரது வாழ்க்கை இருந்தது. பல இடத்தில் பிறந்த நதிகள் ஒரு கடலில் வந்து சேருவது போல" மதங்கள் அத்தனையும் இறைவனின் அன்பிற்குரிய பாதைகள்' என்பதே அவரது கருத்தாக இருந்தது.
* இறைவன் என்ற ஒருவர் இருக்கிறார். அவரை அடைவதற்கு அன்றாட வாழ்க்கையில் நாம் பின்பற்றவேண்டிய வழிமுறைகள், அதற்குரிய தடைகள், நம்மாலும் அவரை அடைய முடியும் என்ற ஊக்கம், நம்மாலும் இறைவனை அடைய முடியும் என்ற நம்பிக்கையை ராமகிருஷ்ணர் வாழ்க்கை நமக்கு வழங்குகிறது.
* சாதாரணமாக நம் கண்களுக்குப் புலப்படாத மிகவும் சிறிய பொருள்களை லென்ஸ் மூலம் பார்க்கிறோம். அதுபோல் பண்டைய சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும் மிகவும் சூட்சுமமான ஆன்மிக உண்மைகளை ராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறு என்ற லென்ஸ் மூலம் நாம் சுலபமாகவும், நன்றாகவும் புரிந்து கொள்ள முடியும்.
* எல்லா வகையான மனநிலைகளை கொண்டவர்களுக்கும் பல்வேறு ஆன்மிகப் பக்குவம் கொண்ட மக்களுக்கும் உரிய படிப்பினையை ராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் காணலாம். பாமரர் பின்பற்றும் ஆன்மிகம் முதல் அத்வைத வேதாந்தம் வரையில் அனைத்து கருத்துக்களையும் அவர் கூறியிருக்கிறார்.
* ராமகிருஷ்ணரின் வாழ்க்கையைப் படிப்பவர் கள் நாளடைவில் விவேகம், வைராக்கியம், ஞானம், பக்தி, ஆன்மிக சாதனைகளின் மூலம் பெறும் ஆனந்தம் ஆகியவற்றைப் பெற்று முடிவில் முக்தியும் பெறுவர்.

No comments:

Post a Comment