Monday, June 6, 2011

சனீஸ்வரன்

இந்த கலியுகத்தில் வாழும் மனிதர்கள் எதற்கு அஞ்சுகிறார்களோ இல்லையோ சனீஸ்வரனுக்கு பயந்து பரிகாரங்களை செய்கின்றனர். அந்த அளவிற்கு மனிதர்களை ஆட்டிப் படைக்கிறவர் சனீஸ்வரன்.

நவகிரகங்களில் முக்கியமானவாராக கருதப்படும் சனி பகவான் "ஆயுள்காரகர்' எனப்படுகிறார். மனிதர்கள் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு நல்லதையோ, கெட்டதையோ அளிக்கிறார். இவர் ஆட்சி, உச்சம், பலம் பெற்று தசை புக்தியை நடத்தும் காலத்தில் ஜாதகருக்கு அனைத்துச் செல்வங்களையும் வள்ளல் போல் வாரி வழங்கிடுவார். அதேசமயம் கெட்ட காலம் என்றால் அனைத்தையும் துடைத்து எடுத்துக்கொண்டு போய்விடுவார். நவகிரகங்களில் இவருக்கு மட்டுமே ஈஸ்வர பட்டம் கிடைத்துள்ளது. அந்த அளவிற்கு சக்திவாய்ந்தவர்.

சனீஸ்வரரின் பிறப்பு

சூரியனின் மனைவியான உஷாதேவி கணவனின் உக்கிரத்தைப் பொறுக்க மாட்டாமல், நிழலான சாயா என்பவளைப் படைத்து, அவளை தன் கணவனிடம் விட்டுத் தான் தந்தை வீடு சென்று விட்டாள்.

இந்த சாயாதேவியிக்கும் சூரியனுக்கும் பிறந்தவரே சனி பகவான். முதல் மனைவி உஷாதேவியின் புத்திரனான எமன் தனது காலால் சனியை உதைத்ததால், அவன் கால் ஊனமாகியது. இதனால் சனிபகவானால் மெதுவாகத்தான் நடக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டதால் "சனைச்சரன்' (மெதுவாகச் சஞ்சரிப்பவன்) என்ற பெயர் ஏற்பட்டது.

சனிபகவானின் சஞ்சாரம்

சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. ஜென்ம ராசிக்கு முதல் ராசி, சுயராசி, பின் ராசி ஆகிய மூன்று ராசிகளிலும் சஞ்சரிப்பதை ஏழரை நாட்டுச் சனி என்பார்கள். எட்டாவது ராசியை அஷ்டமத்துச் சனி என்பார்கள்.

ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவியில் இல்லாதவன், புத்திசாலி, முட்டாள் என்ற வித்தியாசம் எதுவும் சனிக்குக் கிடையாது! பல காரியங்கள் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடும். இதற்கு தேவர்களின் தலைவன் இந்திரனும் விதி விலக்கல்ல.

இந்திரனையும் விட்டு வைக்காத சனீஸ்வரன்

ஒருசமயம் தேவேந்திரன் தன்னை சனி பிடிக்கப் போகிறார் என்பதை அறிந்து, சனியைக் கூப்பிட்டு, ""நான் தேவர்களுக்கெல் லாம் தலைவன்; என்னை எப்படி நீ பிடிக்க லாம்?'' என்று கேட்க, ""என் பார்வையிலிருந்து எவருமே தப்ப முடியாது'' எனப் பதிலளித்தார் சனி பகவான். "

"அப்படியானால் நீ என்னைப் பிடிக்கும் நேரத்தைச் சொல்லிவிடு'' என்று தேவேந்திரன் வேண்ட, சனி பகவான் அதைக் கூறினார்.

அந்நேரம் வந்ததும் இந்திரன் பெருச் சாளி உருக்கொண்டு சாக்கடையில் ஒளிந்து கொண்டான். சனி அந்த இடத்தில் தேட மாட்டார் என்ற நினைப்பு அவனுக்கு! அந் நேரம் கழிந்ததும் இந்திரன் வெளியே வந்து சனி பகவானைக் கூப்பிட்டு, தான் தப்பித்து விட்டதாக பெருமையாக கூறினார்.

உடனே சனீஸ்வரன் சிரித்துக் கொண்டே, ""நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் சில நாழிகை இருந்ததே என் பீடிப்பினால்தான்!'' என்றார். எங்கு சென்று ஒளிந்து கொண்டாலும் சனியின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பது தெளிவாகிறது.

சனிபகவானும் நோய் பாதிப்பும்

ஜாதகத்தில் சனிபகவான் பலம் குன்றியவர்களுக்கு நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்ட வியாதிகளான பாரிச வாயு, கை- கால் தொடர்​நடுக்கம் என்கிற பார்கின்ஸன் வியாதி, சிறுநீரகக் கோளாறு, அடிவயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் போன்றவை உண்டாகின்றன.

ஒருவருக்கு ஏழரைச் சனி வந்தால் அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு குறைந்த அளவிலாவது ஏற்படும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள். இது ஏழரைச் சனிக்கு மட்டுமின்றி அஷ்டமச்சனி, சனி தசைக்கும் பொருந்தும். அதுபோன்ற நிலையில் உள்ளவர்கள் சொகுசாக வாகனங்களில் செல்வதைத் தவிர்த்து அதிகளவில் நடைபழக வேண்டும். சனி எளிமைக்கு உரிய கிரகம் என்பதே அதற்கு காரணம். சனியின் ஆதிக்கத்திற்கு உட்படும் போது நடைபயணம் செய்வதன் மூலமே சர்க்கரை நோயில் இருந்து தப்ப முடியும்.

என்ன பரிகாரம் செய்யலாம்

சனிக்கிழமைகளில் காக்கைக்கு எள், நல்லெண்ணெய் கலந்த அன்னத்தை வைத்தும், மாலையில் ஆலயங்களில் எள் தீபமேற்றியும், காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு தலத்துக்குச் சென்று முறையாக வழிபட்டும், தேனிக்கு அருகில் உள்ள குச்சனூர் சென்று சுயம்பு சனீஸ்வரரையும் வழிபட்டும் வர, கெடுதல்கள் மறைந்து நன்மைகள் உண்டாகும்.

No comments:

Post a Comment