Saturday, June 25, 2011

சரஸ்வதி நதி

இந்தியாவில் சரஸ்வதி நதி அனைவர் கண்களிலும் தென்படும்படியாகவே ஒரு காலத்தில் ஓடியதாம். பின்னர் ஒரு கட்டத்தில் இது பூமிக்குள் சென்று மறைந்து விட்டது. இதற்கு காரணமாக புராணத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது. படைப்புக்கடவுளான பிரம்மா, உயிர்களின் தலைவிதியே தன் கையில் தான் உள்ளது என்று பெருமை அடைந்திருந்தார். இதனால் ஆணவம் அடைந்த அவரது ஒரு தலையை சிவபெருமான் வெட்டி விட்டார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நெருப்புக்கோளமாக மாறியது. இதை ஏந்திச்சென்று கடலில் சேர்க்கும்படி தேவர்கள் சரஸ்வதி நதியிடம் கேட்டனர். தன் கணவருக்கே இத்தகைய நிலையை ஏற்படுத்திய சிவனின் பிரம்மஹத்தி தோஷத்தை சுமக்க விரும்பாத சரஸ்வதி, பூமிக்கு அடியில் சென்று மறைந்ததாக கூறப்படுகிறது.

கல்விப்பயிர் வளர்ப்பவள்
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளின் சங்கமமான திரிவேணியில் (அலகாபாத்) பக்தர்கள் புனித நீராடுகின்றனர். இந்த இடத்தில்தான் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடக்கிறது. கங்கையும் யமுனையும் நம் கண் முன்னே சங்கமமாவதை பார்க்க முடிகிறது. ஆனால், சரஸ்வதி மட்டும் பூமிக்குள்ளேயே அமைதியாக ஓடிவந்து இந்த நதிகளுடன் கலந்து விடுவதால் இந்த நதி சங்கமம் ஆவதை காண முடிவதில்லை. ஆறு பயிர் வளர்ப்பது போல, சரஸ்வதி கல்விப்பயிரை வளர்க்கிறாள்.

கலைமகள்
திருநாமங்கள் கலைமகளுக்கு நாமகள், பாரதி, வாணி, இசைமடந்தை, ஞான வடிவு, பனுவலாட்டி, பிராஹ்மி, பூரவாஹினி, அயன்மனைவி, வெண்தாமரையாள், சாவித்திரி, வாக்தேவி என்ற பெயர்கள் உண்டு.

சரஸ்வதி- பெயர்விளக்கம்
கலைமகளின் மறுபெயர் சரஸ்வதி. "சரஸ்' என்றால் "பொய்கை' எனப் பொருள். "வதி' என்றால் "வாழ்பவள்'. சரஸ்வதி என்றால் "மனம் என்னும் பொய்கையில் வாழ்பவள்' என்பது பொருளாகும். மனம் வெள்ளைத் தாமரைபோல் இருக்க வேண்டும். அந்த வெள்ளை மனதிலேயே சரஸ்வதி குடி கொள்வாள்.

சரஸ்வதியும் தண்ணீரும்
சரஸ்வதி நதி பற்றி ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. சரஸ்வதி என்ற சொல்லுக்கு "தண்ணீர்' என்ற பொருளும் உண்டு. மயக்கமடைந்த ஒருவனை தண்ணீர் தெளித்து எழுப்புவது போல, இருளடைந்துள்ள மனதிற்கு தண்ணீர் அவசியம். இதனால் தான் தண்ணீரையும், சரஸ்வதியையும் ஒப்பிட்டுக் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment