Saturday, June 11, 2011

இராமாயண- மகாபாரதக் கதைகள்

ராமனுக்கு இளமைக்கால நண்பன் ஏழுமலை. இராமனோ அரசிளங்குமரன். ஏழுமலை பரம ஏழை. ஆயினும் இருவரும் சமமாகப் பழகுவர்; ஒன்றாக விளையாடுவர்; ஒன்றாக உண்பர்; "அடேய்' என்றே ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வர்.

இராமன் கௌசிகன் வேள்வியைக் காக்கச் சென்றது முதல் ஏழுமலையால் இராமனைச் சந்திக்க இயலாமல் போய்விட்டது.


ஏழுமலை இராமனின் நட்பை இதயத்தில் சுமந்தபடி, தன் கிராமத்தில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.

இராவண வதம் முடிந்த பிறகு இராமனுக்கு முடிசூட்டு விழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது.

இச்செய்தியைக் கேள்விப்பட்ட ஏழுமலை இராமனைக் காண ஓடோடி வந்தான். இராமனைக் கண்ட மகிழ்ச்சியால், "டேய் இராமா!' என்று உரக்கக் கூவி விட்டான்.

சக்கரவர்த்திக்கு எத்தகைய அவமதிப்பு! இலக்குவன் சினத்தினால் வாளில் கை வைத்தான். ஆஞ்சனேயன் ஏழுமலையைப் பிடித்து வீசியெறிவதற்காக வாலை நீட்டினான்.

இராமனோ புன்னகையோடு இரு கைகளையும் நீட்டி ஏழுமலையை வரவேற்று தன் அருகில் அமர வைத்தான்.

இராமன் அவையினரிடம், ""இவன் என் பால்யகால நண்பன். அன்பிற் சிறந்தவன். என் தந்தை என்னை "டேய் ராமா!' என்று அழைப்பார். இப்போது அப்படி அழைக்க அவர் இல்லை. இவன் "டேய் இராமா' என்று உரிமையுடன் அழைத் தமையால், அவர் இல்லாத குறையைத் தீர்த்து விட்டான்'' என்றான்.

இராமனின் சமத்துவம் கண்டு அவையினர் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினர்; இராமனை வாழ்த்தினர்.
"காட்சிக்கு எளியனாகவும் கடுஞ்சொல்லன் அல்லனாகவும் அரசன் இருத்தல் வேண்டும்' என்ற வள்ளுவன் கருத்தை இராமன் செயலில் காட்டி நட்புக்கும் எளிமைக்கும் எடுத்துக் காட்டாக விளங்கினான்.

உமை போட்ட சீதை வேடம்

ஒருநாள் சிவபெருமான் உமையம்மை யிடம் இராமனின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தார். குறிப்பாக இராமனது ஏகதார விரத மேன்மையைப் பலவாறு புகழ்ந்தார்.

""வேறு யாராவது சீதையைப்போல் மாறு வேடமணிந்து வந்தால் இராமன் ஏமாற மாட் டானா? ஏமாறுவது மனித இயல்புதானே! இராமன் சாதாரண மனிதன் தானே?'' என்று உமையம்மை மறுதலித்துப் பேசினாள்.

""இராமன் மனிதனாகத் தோன்றினாலும் அவன் பரம்பொருள். அவனுக்குத் தெரியாத ரகசியம் எதுவுமே உலகில் இல்லை'' என்றார் சிவபெருமான்.

""நான் இராமனை சோதித்து வென்று, அவன் பரம்பொருள் அல்ல; மனிதன்தான் என்று காட்டுகிறேன்'' என்று சபதம் செய்தாள் உமை.

""மனைவியைப் பிரிந்தவன் பரம்பொருளா னால் சீதை இருக்கும் இடத்தை உணர்ந்து கொள்ள மாட்டானா? இப்படிக் காடெல் லாம் அழுது கொண்டு திரிவானா? ஆதலால் இராமன் பரம்பொருள் அல்ல என்பது உறுதி'' என்று மேலும் கூறினாள் உமை. பின்னர், சீதையாக வேடமிட்டுக் கொண்டு இராமன் வரும் வழியில் சென்று நின்று கொண்டிருந் தாள்.

நடுவழியில் சீதை உருவில் உமையைக் கண்ட இராமன், ""சகோதரி, நீ உன் கணவர் உடலில் பாதியாக உள்ளவள் அல்லவா! இப்போது பிரிந்து ஏன் இங்கு வந்தாய்? உன் கணவர் உனக்காகக் காத்திருப்பார். உடனே புறப்படு!'' என்றான் இராமன்.

"சீதை உருவிலிருக்கும் தன்னை அடை யாளம் கண்டு கொண்டு, "சகோதரி' என்று அழைத்தமையால், பிறர்மனை நோக்கா பேராண்மை இராமனிடம் உள்ளது. ஆதலால் இராமனைப் பரம்பொருள் என எண்ணத் தடையில்லை. என் சோதனையில் இராமன் வென்றான். நான் தோற்றேன்' என்று நாண முற்ற உமை, அக்கணமே சிவபெருமானிடம் சென்று, தான் இராமனை சாதாரண மனிதன் என்று எண்ணியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்.

புலையன் வீட்டில் புனிதம் கண்ட இறைவன்

"கல்வியும் விநயமும் நன்கு கற்ற பிராமணன், பசு, யானை, நாய் தின்னும் புலையன் முதலிய அனைவரையும்

மெய்ஞ்ஞானிகள் சமமாகவே நோக்குவர்' என்பது கண்ணன் வாக்கு.

மெய்ஞ்ஞானிகளுக்கே இத்தகைய சமத்துவப் பார்வையிருப்பின் இறைவனிடம் சமத்துவம் இல்லாமல் இருக்குமா?

இறைவனது சமபார்வை- சமத்துவம் குறிக்கும் வரலாறு ஒன்றை சூர்தாசர் குறிப்பிட்டுள்ளார்.

புலையினத்தான் ஒருவன் இருந்தான். அவன் நாய் ஊன் உண்பவன். அவன் ஊமை. ஆதலால் அவனை அனைவரும் "மூக சண்டாளன்' என்றே அழைப்பர். ஊமையாகிய இழிகுலத்தான் என்பது அதன் பொருள்.

நாய் தின்னும் இழிகுலத்தவன் ஆயினும், அவனிடம் ஓர் ஒப்பற்ற நற்பண்பு இருந்தது. தன் தாய்- தந்தையரைத் தெய்வமாகவே மதித்தான். மனப்பூர்வமாக அன்பு காட்டி பெற்றோருக்குப் பணிவிடை செய்து வந்தான்.

அவன் பெற்றோரிடம் வைத்த பக்தியின் சிறப்பால், அவன் வீடு பூமியில் தொடாமல், எவ்விதப் பற்றுமின்றி அந்தரத்தில் நின்றது. அது மட்டுமா?

இறைவன் ஒரு அந்தணன் வடிவம் கொண்டு, அந்த மூக சண்டாளன் வீட்டி லேயே நிரந்தரமாகத் தங்கினான்.

இறுதியில் அந்த மூக சண்டாளனுடன், அவன் உறவுடைய அனைவரையும் பரமபதத் துக்கு இறைவன் அழைத்துச் சென்றான்.

ஞானிகள்,

"ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு

உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து

தாம் வாட வாடத் தவம் செய்தும்'

பெறுவதற்கரிய பரமபதம், பெற்றோரைத் தெய்வமாகக் கருதி பணிவிடை செய்த ஒரு செயலாலேயே நாய் தின்னும் புலையன் எளிதில் பெற்று விட்டான்.

தவம் செய்து பெற இயலாததைத் தொண்டினால் பெற இயலும் என்பதற்கு இவ்வரலாறு ஒரு எடுத்துக்காட்டு!

1 comment:

  1. இராமனின் சமத்துவம் கண்டு அவையினர் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினர்; இராமனை வாழ்த்தினர்.//

    nice.

    ReplyDelete