Friday, June 24, 2011

பேரனுக்கு கிடைத்த சொத்து

ஆழ்வார்கள் பாடிய நாலாயிரதிவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளின் பேரன் யமுனைத்துறைவன். 12வயது சிறுவனாக இருந்தபோது, மகாபாஷ்ய பட்டரிடம் வேதம் கற்று வந்தார். அவர் படித்த ஊரில் வசித்த கோலாகலர் என்ற புலவர் புலமைச் செருக்காலும், மன்னரிடம் இருந்த செல்வாக்காலும் மற்ற பண்டிதர்களை தனக்கு அடிமையாக எண்ணி கப்பம் வசூலித்தார்.
ஒருநாள் மகாபாஷ்யபட்டர் அவசர வேலையாக வெளியூர் சென்றுவிட்டார். யமுனைத்துறைவன் மட்டும் வீட்டில் இருந்தான். அங்கு வந்த கோலாகலரின் வேலையாட்கள் கப்பம் கேட்டனர். வந்தவர்களை யமுனைத்துறைவன் கோபத்துடன் விரட்டியடித்தான். இதை அறிந்த கோலாகலர், சிறுவனை அரண்மனைக்கு இழுத்து வரும்படி செய்தார்.
கப்பம் கட்ட மறுத்ததற்கு காரணம் கேட்டார்.
""புலவரே! வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நீர் அறியவில்லை போலும்! வேண்டுமானால் என்னுடன் வாதிட்டு பாரும். நீர் ஜெயித்தால், என் குருநாதர் தொடர்ந்து கப்பம் கட்டுவார்,'' என சவால் விட்டான். விவாதத்திற்கு ஏற்பாடானது. சிறுவனுடன் பண்டிதர் வாதம் செய்யும் விஷயம் ஊரெங்கும் பரவியது.
யமுனைத்துறைவனின் தெய்வீகக் களையான முகத்தைக் கண்டதும், ராணி பரவசம் கொண்டாள். அரசனிடம், "யமுனைத்துறைவன் சிறுவனாக இருந்தாலும் வாதத்தில் நிச்சயம் ஜெயிப்பான்,'' என்று பந்தயம் கட்டினாள். மன்னனும் அதை ஆமோதிப்பது போல, ""வாதத்தில் வெற்றி பெற்றவர்க்கு எனது ஆட்சியையே பரிசாக அளிக்கிறேன்,'' என உறுதியளித்தான்.
வாதம் தொடங்கியது. கோலாகலர் கேட்ட கேள்விக்கெல்லாம், யமுனைத்துறைவன் சளைக்காமல் பதில் அளித்தான். கோலாகலர் தோல்வியை ஒப்புக் கொண்டார். ராணி யமுனைத்துறைவனை கட்டியணைத்து, "ஆளவந்தாரே! ஆளவந்தாரே!' என்று பாராட்டினாள். மன்னனும் அவனை ஆட்சியில் அமர்த்தினான்.
அன்றுமுதல் யமுனைத்துறைவன் ஆளவந்தார் ஆனார். அவரின் பொறுப்பில் நாடு இருந்தது. இதற்கிடையில், நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகள், தன் இறுதிக்காலத்தில் சீடரான மணக்கால் நம்பியை அழைத்து, "என் பேரன் யமுனைத்துறைவனுக்கு உரிய பக்குவம் வந்ததும், ஆன்மிகவழிக்கு திருப்பிவிடவேண்டும்' என்று வேண்டிக் கொண்டார். ஒருநாள், மணக்கால் நம்பி அரண்மனைக்குப் புறப்பட்டார்.
ஆளவந்தாரிடம் ""அரசே! உங்கள் பாட்டனார் நாதமுனிகள் பெரிய மகான். அவர் உயிர் பிரியும் வேளையில் என்னிடம் என்றென்றும் அழியாத பொக்கிஷம் ஒன்றை உங்களுக்காகக் கொடுத்துச் சென்றார். தாத்தா சொத்து பேரனுக்குத் தானே! '' என்றார்.
ஆளவந்தாரும், ""ஆகா! அந்த பொக்கிஷத்தை எங்கே வைத்திருக்கிறீர்கள். சீக்கிரம் கொடுங்கள்,'' என்று ஆர்வத்துடன் கேட்டார்.
"" பொக்கிஷத்தை என்னால் எடுத்து வரமுடியாது. நீங்கள் தான் நேரடியாக வந்து எடுத்துக் கொள்ள வேண்டும்,'' என்று அழைத்தார் நம்பி.
அவரது பேச்சு ஆளவந்தாருக்கு புதிராக இருந்தது. இருந்தாலும், தாத்தா கொடுத்த பொக்கிஷம் என்பதால், அதைப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் கிளம்பினார். இருவரும் பல்லக்கில் புறப்பட்டனர். ரங்கநாதர் கோயிலுக்கு வந்ததும், ஒன்றும் சொல்லிக் கொள்ளாமல், கோயிலுக்குள் நுழைந்தார் மணக்கால்நம்பி. ஆளவந்தாரும் பின் தொடர்ந்தார்.
மணக்கால்நம்பி ரங்கநாதரின் முன் நின்று, இருகைகளையும் நீட்டியபடி "இதோ! உங்கள் பாட்டனார் தந்த பொக்கிஷம் இதுதான்! என்றென்றும் நிலையான பொக்கிஷம்!' என்றார்.
அள்ள அள்ளக் குறையாத பெருஞ்செல்வமாய் அரிதுயிலில் கிடந்த ரங்கநாதனிடம் மனதைப் பறி கொடுத்தார் ஆளவந்தார். தாத்தா நாதமுனிகளின் அன்பில் கரைந்து, அரியணையையும், ஆட்சியையும் மறந்தார். ரங்கநாதரை உயிர் மூச்சாகக் கொண்டார். கோயில் நிர்வாகத்தையும்,வைணவபீடத்தையும் ஆளவந்தார் வசம் ஒப்படைத்தார் நம்பி. இவருக்கு 16 சீடர்கள் இருந்தனர். இவர்களில்"வைணவத்தை வளர்த்த தாய்' என்று போற்றப்படும் ராமானுஜரும் ஒருவர்.

No comments:

Post a Comment