Saturday, June 25, 2011

நன்றி காட்டும் நல்லநாள்

உழவர்கள் நெல் அறுவடை செய்து மகிழ்ந்திருக்கும் வேளையில், விவசாயத்திற்கு துணைபுரிந்த சூரியன், பணியாட்கள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அமைந்த விழா பொங்கல் விழா. சூரியன் தன் செங்கதிர்களால் உலகிற்கு ஒளியூட்டுகிறார். கடல்நீரை ஆவியாக்கி மழை பொழியச் செய்கிறார். கிருமிகளை அழித்து ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டுகிறார். மண்ணில் உயிர்கள் வாழ்வதற்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறார். அவருக்குரியதாக இந்த நாள் அமைந்துள்ளது. சூரியனுக்குரிய நாளாக தைப்பொங்கலும், கால்நடைகளுக்குரிய நாளாக மாட்டுப்பொங்கலும், உறவினர்,நண்பர்கள், வேலையாட்களைப் பாராட்டும்விதத்தில் காணும்பொங்கலும் அமைந்துள்ளன


தை பிறந்தால் வழி பிறக்கும்

சிறப்பான தை முகூர்த்தம் சுபநிகழ்ச்சி நடத்துவதற்குரிய மாதங்களில் முகூர்த்தங்கள் அதிகமுள்ள மாதமாக தை அமைந்துள்ளது. பெண்ணுக்கு திருமணம் பேசும் பெற்றோர், ""வரும் தையில் கல்யாணத்தை வைச்சுக்கலாம்'' என்று சொல்வது வழக்கம். அக்காலத்தில் மார்கழியில் பெரும்பாலும் அறுவடை முடிந்துவிடும். அதனால், உழவர்கள் கையில் தை மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும். இதைப் பயன்படுத்தி கல்யாணச் செலவு செய்யலாம் என்பதால் தான் "தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற பழமொழி உண்டானது. இப்பழமொழிக்கு வேறொரு பொருளும் சொல்வதுண்டு. வயலில் அறுவடை முடிந்து விட்டதால், பயிர்பச்சை இல்லாமல் வரப்பு நடப்பதற்கு ஏதுவாக காலியாக இருக்கும். அதனையும் "தைபிறந்தால் வழிபிறக்கும்' என்பர்.
மகரசங்கராந்தி
சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சாரம் செய்வார். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிகளில் மூன்று ராசிகள் குறிப்பிடத்தக்கவை. சித்திரை மாதத்தில் மேஷராசியில் சூரியன் உச்ச பலத்தையும், ஐப்பசி மாதத்தில் சூரியன் பலவீனத்தையும் (நீச்சத்தன்மை)பெறுகிறார். மகரராசியில் பிரவேசிக்கும் நாளை மகரசங்கராந்தி என்று பெயர். இம்மாதத்தில் சூரியனுக்கு "பகன்' என்று பெயர். தை மாதம் சூரியனை வழிபட்டவர்களுக்கு எல்லா வளங்களும், பால்பாக்கியமும் (பசுக்களால் யோகம்) உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
சூரியனுக்கு 12 பெயர்
ஆதித்தன், பாஸ்கரன், ரவி, ஞாயிறு என்று சூரியனுக்கு பலபெயர்கள் உண்டு. ரஸ்மி புராணத்தில் சூரியனுக்கு பன்னிரண்டு பெயர்கள் சொல்லப்பட்டுள்ளது. மித்திரன், ரவி, சூரியன், பானு, ககான், பூஷ்ணன், ஹிரண்யகர்பன், மரீசி, ஆதித்யன், சவித்ரு, அர்க்கன், பாஸ்கரன் என்பவையே அவை.


விழா நிறைந்த தைமாதம்


தைமாதம் முதல் நாளிலிருந்து முப்பது நாளுமே பக்திமயமாகவும், விழாமயமாகவும் இருக்கும். முதல் நாள் தைப்பொங்கல். சூரியனை பொங்கலிட்டு நன்றியுணர்வோடு வழிபாடு செய்கிறோம். இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல். மாடுகளுக்கு பொங்கல் வைத்து வணக்கம் செலுத்துகிறோம். மூன்றாம் நாள் சிலபகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என்னும் வீரவிளையாட்டு நடைபெறும். சில பகுதிகளில், உறவினர்களோடு கூடி மகிழும் காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஆறு, கடல் பகுதிகளில் உறவினர்கள், நண்பர்கள் கூடி மகிழ்வர். மகரஜோதியாக சபரிமலை ஐயப்பன் தைமாதத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். தையில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும் தைவெள்ளி என்று சிறப்பாக குறிப்பிடுவர். இந்நாளில் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வர். தை அமாவாசை நாளில் தீர்த்தக்கரைகளில் முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு. தை பவுர்ணமிநாளில் பூசநட்சத்திரமும் சேரும் வேளையில் தைப்பூசவிழா நடைபெறும். இவ்விழா முருகன் கோயில்களில் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக பழநிக்கோயில் தேர்பவனியில் முருகப்பெருமான் வீதியுலா வருவார். முருகபக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்துவருவர். மதுரையில் ராஜாங்க விழாவாக, மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரரோடு தெப்பம் சுற்றிவருவாள்.

No comments:

Post a Comment