சமாதி நிலை என்பது எந்த வித எண்ணங்களும் இல்லாது கண்களை மூடி அமர்ந்திருப்பது என்பதாகவே நம்மில் பலரும் புரிந்து கொண்டிருக்கிறோம். உண்மையில், சமம் + ஆதி = சமாதி, அதாவது ஆதியும் அந்தமுமாய் சொல்லப்படுகிற இறை நிலைக்கு சமனான ஒன்றுமற்ற அல்லது வெறுமையான மனநிலையில் இருப்பதே சமாதி எனப்படும்.
இன்னொரு வகையில் சொல்வதானால், கண்ணை திறந்து கொண்டு அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று கொண்டே, உள்ளார்ந்த விழிப்புணர்வுடன் "நான்" "எனது" "என்னுடையது" என்ற அகங்காரம் இல்லாத பக்குவமும் சமாதி நிலையாக சொல்லப் படுகிறது.
"சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியிற் றங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே"
சமாதிகள் வேண்டாம் இறையுடன் னேகிற்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே"
கொங்கணவர் தனது “கொங்கணவர் வாதகாவியம்” என்ற நூலில் சமாதி நிலைகளைப் பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார். ஆறுவகையான சமாதி நிலைகள் இருப்பதாக கொங்கணவர் குறிப்பிடுகிறார்.
அவையாவன...நிருவிகற்ப சமாதி
அகண்டவிர்த்தி சமாதி
சஞ்சார சமாதி
ஆரூட சமாதி
தத்துவல்ய சமாதி
இதனை எளிமைப் படுத்தி எழுதினால் நான் என்பதை கரைத்து, தாமே எல்லாவற்றிலும் நிறைந்தும், மறைந்தும் நிற்பதை உணர்ந்த ஒரு உயர் நிலையாக கூறப் படுகிறது.
சவிகற்ப சமாதி
இந்த சமாதி நிலை என்பது யோகத்தின் மிக உயர்ந்த நிலையாகும். வெறும் வார்த்தைகளால் இவற்றை விவரித்து உணர்த்துவதும், உணர்வதும் கடினமானது. இவை யாவும் உணர்ந்து அறிந்து அனுபவிக்க வேண்டிய அதி உயர்நிலைகள்.இந்த சுவிகற்பச் சமாதி இரண்டு வகைகளாக கூறப் படுகிறது. அவையாவன “சத்தானு சமாதி”, “திரைய சமாதி” என்கிறார் கொங்கணவர்.
தத்துவலய சமாதி நிலையில் இருக்கும் போது தன்னுள்ளே பட்சியின் ஓசை எழும்புவதை உணர்ந்து அதில் லயப்பட்டிருப்பதே சத்தானு சமாதி எனப்படுமாம்.
தத்துவலய சமாதி நிலையில் தன்னைத் தானே அனுசந்தானம் செய்து நிற்றலே திரைய சமாதி என்கிறார்.
நிருவிகற்ப சமாதி
நாம் பார்த்த தத்துவலய சமாதியம், சத்தானு சமாதியும் முழுமையாக சித்தியாகி விட்டால், தன்னை மறந்த துக்கத்தைப் போல் ஒரு மயக்க நிலை ஏற்படுமாம்.இந்நிலையில் எந்த ஒரு சத்தமும் அவர்களுக்கு கேட்காதாம். சுத்தமானது பூரணத்துடன் சேர்ந்து சுத்த சைதந்ய நிலையை அடைந்துவிடும் என்கிறார். இந் நிலைக்கே நிருவிகற்ப சமாதி பெயர்.
மேலும்,சமாதியை விட்டு எழுந்த பிறகும், சமாதியிலிருக்கும் பொழுதும் காலத்திற்குட்பட்டு இயங்கும் இப் பிரபஞ்சமெல்லாம் பொய் என்றும், இவை யாவும் மாயா விகாரத்தால் தோன்றியது என எண்ணி இவற்றின் மேலுள்ள பாசத்தை நீக்கி எதையும் நினைக்காமல் இருத்தலே முழுமையான நிருவிகற்ப சாமாதியாகும் என்கிறார் கொங்கணவர்.
அகண்டவிர்த்தி சமாதி..
இந்த அகண்டவிர்த்தி சமாதி நிலையானது எப்படி இருக்குமென்றால் காற்றில்லாத இல்லத்தில் வைக்கப்பட்ட ஒரு விளக்கின் சுடரைப்போலவும், தண்ணீரில் கரைக்கப்பட்ட உப்பைப் போலவும் யோகத்தில் மனமானது முதிர்ந்து நிற்க்குமாம். இந்த ஆனந்த நிலையில் ஒரு கடிகை நேரம் லயித்தாலும் கிடைக்கும் பலன்கள் அதிகம் என்கிறார். அந்த பலன்களை பின் வருமாறு பட்டியலிடுகிறார் கொங்கணவர்.
கோடி அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்குமாம். மேற் சொன்னவாறு தினமும் பழகி வந்தால் மனமானது சுழித்தியில் அடங்குமாம். இதை வெறும் சுழித்தீ தானே என்று எண்ணி கைவிட்டு விடாமல் சரியாக தொடர்ந்து செய்து வந்தால் அனைத்துமே சித்தத்தில் அடங்குமாம் அப்படி சித்தத்தில் அடங்கி பின் சித்தமும் பிரம்மத்தில் அடங்குமாம். அப்போது நீயே பிரம்மம் என்பதை அறிவாய் என்கிறார். இதுவே அகண்டவிர்த்தி சமாதி யாகும்.
சஞ்சார சமாதி
அகண்டவிர்த்தி சமாதியை விட்டு எழுந்து வெளியுலகமான பிரபஞ்சத்தில் உலாவும் போதும், பிரபஞ்சத்தில் கடமைகள் மற்றும் வேலைகளில் ஈடுபடும் பொழுதும் சமுத்திர அலையால் உண்டான கடல் நுரையைப் போல அனைத்துமே மாயை என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும்.
சிலந்திப் பூச்சியானது தான் உருவாக்கும் ஒருவகையான பசைத்தன்மை கொண்ட பொருளால் வலையை உண்டாக்கிக் கொண்டு அதில் தானே அதில் வசிப்பதை போலவும், கூர்மம் என்று அழைக்கப்படும் ஆமையானது தன்னுடன் தோன்றிய ஓட்டினுள் தன்னை அடக்கிக் கொள்வது போலவும், கனவு போன்ற இந்த பூலோகவாழ்கை அழிவடையும் தன்மை உடையது என்றும் உணர்ந்து, என்னை தவிர வேறொன்றும் இல்லை என்பதை நினைவில் நிறுத்தி பூலோக வாழ்வியல் விவகாரங்களில் ஈடுபடும்போது எதுவும் உன்னை சலனப்படுத்தாது என்பதை உணர்ந்திருக்கும் நிலையே சஞ்சார சமாதி என்கிறார்.ஆரூட சமாதி
உலகில் இருக்கும் அனைத்துப் பொருட்களும் என்னிடம் இருந்தே உண்டாயிற்று, நான் தான் அனைத்து பொருட்களிலும் நிறைந்திருக்கிறேன் என்பதாக உணர்வதுடன், தானே பிரம்மம், தானே அனைத்திற்க்கும் ஆதாரமானவன் என்ற உயரிய நிலையில் இருந்துகொண்டு, உன் முன்னால் தேவதைகள் தோன்றினாலும் கூட அவற்றை பொருட் படுத்தாமல் நீயே பிரம்மமாய் இருக்கும் நிலையான சஞ்சார சமாதியில் எல்லாம் மாயை என்பதை தெளிந்த பின்னர் மேலான தேவதைகள் முதல் வேறு எவரும் உன் முன்னால் வந்து நின்றாலும் அவற்றை காற்றைப் போல் நினைத்து அவை அனைத்துமே உன்னிடம் இருந்து தோன்றியதே என்ற உண்மையை உணர்ந்து மலை போல அசைந்து கொடுக்காது நீயே பிரம்மம் என்ற நிலையில் இருத்தல் ஆருட சமாதி எனப்படும். இதுவே இறுதி முடிவான நிலையும் ஆகும் என்கிறார் கொங்கணவர்.
No comments:
Post a Comment