Sunday, June 17, 2012

கோயிலில் அர்ச்சனை செய்யும்போது நம் பெயருக்குச் செய்யலாமா? அல்லது சுவாமி பெயருக்கு செய்யலாமா?

 

** கோயிலில் அர்ச்சனை செய்யும்போது நம் பெயருக்குச் செய்யலாமா? அல்லது சுவாமி பெயருக்கு செய்யலாமா?

நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது சுவாமிக்கு தெரியும். குழந்தை ஐஸ்கிரீம் கேட்டால் அதன் உடம்புக்கு ஆகாது என்று வாங்கித்தர மறுக்கிறோம். இதனால் குழந்தைக்கு நல்லதைச் செய்கிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அதுபோல் தான் இறைவனிடம் நாம் கேட்பதும்! நமக்கு எது ஏற்புடையதோ அதை நாம் கேட்காமலேயே ஆண்டவன் கொடுப்பார். இதைப் புரிந்து கொண்டால் சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்யலாம். இல்லாவிட்டால் நம் பெயருக்குச் செய்து கொள்ளலாம்.

* கோளறு பதிகத்தை எல்லாரும் பாராயணம் செய்யலாமா?

கோளறு பதிகத்தை எல்லாரும் தாராளமாகப் பாராயணம் செய்யலாம். சொல்லில் தவறு ஏற்படாமல் இருக்க யாராவது சொல்ல அதைக்கேட்டு, தினமும் காலையும், மாலையும் சுவாமி முன்பு பாராயணம் செய்யுங்கள். கிரக தோஷம் நீங்குவதுடன் பயம் நீங்கி மனத்தெளிவும் உண்டாகும்.

* அலுவலகத்தில் பணிசெய்யும் நேரத்தில் லலிதா சகஸ்ரநாமத்தை ஜெபிக்கலாமா? அல்லது சுவாமி முன் அமர்ந்து தான் சொல்ல வேண்டுமா?

"நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே' என்று சுந்தரரும், "இடரினும் தளரினும்' என்னும் சம்பந்தர் தேவாரத்திலும் எப்போதும் சுவாமி நாமத்தை ஜபம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற குறிப்பு காணப்படுகிறது. பணியின் போது தாராளமாக ஜபம் செய்யலாம்.

* சிலகோயில்களில் மட்டும் ஆண்களை சட்டையோடு அனுமதிப்பதில்லையே ஏன்?

அந்தச் சில கோயில்களில் தான், நம் கலாச்சாரம் ஓரளவாவது காப்பாற்றப்பட்டு வருகிறது. கோயிலும் தெய்வங்களும் பாரம்பரியமானவை. இவ்விஷயத்தை மதித்துத்தான், நாம் கோயில்களுக்குச் செல்கிறோம். தெய்வத்தின் மீதுள்ள மதிப்பை வெளிப்படுத்த நாமும் பாரம்பரிய உடையில் செல்வது அவசியம். திருமணத்திற்கு இரவல் வாங்கியாவது பட்டுப்புடவையும், நகைகளும் அணிந்து செல்வதில்லையா? அதுபோல கோயிலுக்குச் செல்லும்போது பக்தி அவசியம். பக்திக்கு பாரம்பரியத்தைப் போற்றும் பண்பும் அவசியம். எனவே, கலாச்சாரத்தை நாமாகவே முன்வந்து, எல்லா கோயில்களிலும் பின்பற்றுவோமே!
வீட்டில் விக்ரஹபூஜை செய்வதற்கு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் யாவை?

எண்ணெய், பால், பன்னீர் அபிஷேகம் செய்ய வேண்டும். வஸ்திரம், சந்தனம், குங்குமம், பூக்களால் அலங்காரம் செய்து சாம்பிராணி அல்லது ஊதுபத்தி காட்ட வேண்டும். தனியாக சாதம் வடித்து அதில் சிறிது நெய், பருப்பு சேர்த்து பிரசாதம் செய்ய வேண்டும். பிறகு கற்பூரம் காட்ட வேண்டும். அந்தந்த தெய்வத்திற்குரிய தோத்திரங்களைப் பாராயணம் செய்ய வேண்டும். இம்முறையில் பூஜை செய்வது சிறப்பு. பஞ்சலோக விக்ரஹமாக இருந்தால் எண்ணெய் சாத்தவேண்டாம்.

No comments:

Post a Comment