Thursday, June 21, 2012

ஒருவர், தான் செய்த தவறுக்கு கடவுள் எப்படி பொறுப்பாவார்!

ஒரு ஆஸ்ரமத்தில், வேதாந்த பாடம் நடத்திக் கொண்டிருந்த குரு, ""உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் கடவுளின் அம்சம்,'' என்று போதித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு பசு தோட்டத்தில் உள்ள பயிர்களைத் தின்று கொண்டிருந்தது. சிஷ்யர்களின் கவனம் பசுவின் மீது செல்லத் தொடங்கியது.
ஆத்திரமடைந்த குரு, பசுவை தடியால் பலமாக அடித்தார். அந்த இடத்திலேயே பசு இறந்து போனது. பசுவின் உரிமையாளர் குருவிடம் வந்து நஷ்ட ஈடு கேட்டார். அதற்கு குருவோ, ""பசுவும் பிரம்மம். நானும் பிரம்மம். உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் பிரம்மம் (கடவுள் அம்சம்). பிரம்மத்தைப் பிரம்மம் அடித்தது. பிரம்மம் பிரம்மத்திடம் சென்றுவிட்டது, அவ்வளவு தான்,'' என்று பதில் அளித்தார்.
பதிலைக் கேட்ட பசுவின் உரிமையாளர் செய்வதறியாமல், வழியில் சென்ற துறவி ஒருவரை அழைத்து குருவிடம் நியாயம் கேட்கும்படி வேண்டினார்.
துறவி குருவிடம், ""இங்கே பாடம் நடத்துவது யார்?'' என்றார்.
""நான் தான்'' என்றார் குரு.
""இந்த தோட்டம், ஆஸ்ரமம் இவற்றை எல்லாம் பராமரிப்பவர் யார்?''
அதற்கும், ""நான் தான்'' என்றார் குரு.
சந்நியாசி குருவிடம், ""இதற்கெல்லாம் பதில் "நான்' என்றால் பசுவைக் கொன்றதும் தாங்கள் தானே!'' என்றார்.
தவறை உணர்ந்த குரு, பசுவின் உரிமையாளருக்கு நஷ்டஈடு தர ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டார்.
ஒருவர், தான் செய்த தவறை, கடவுள் தான் செய்ய வைத்தார் என்று சொல்லி காரணம் கற்பிக்கக்கூடாது, புரிகிறதா! 

No comments:

Post a Comment