Thursday, June 21, 2012

தற்பெருமை மட்டும் கூடவே கூடாது.

மனிதனுக்குள், நல்லதும் கெட்டதுமாக ஆயிரம் வகையான குணங்கள் புதைந்து கிடக்கும். ஆனால், தற்பெருமை மட்டும் கூடவே கூடாது. ஏன்?
வியாசரின் மகன் சுகபிரம்மர். "சுகம்' என்றால் "கிளி'. ஆம்..சுகபிரம்மர் கிளிமுகம் கொண்டவர். பிறந்தவுடனேயே இவருக்கு ஞானம் வந்து விட்டது. எள் முனையளவு கூட களங்கம் இல்லாத மனதுடையவராக இருந்தார்.
ஒருநாள் வியாசர், ""சுகபிரம்மா இங்கே வா,'' என்றார்.
""வருகிறேன்,'' என்று சுகபிரம்மர் மட்டுமல்ல, அங்கே நின்ற மரம், மட்டை, செடி, கொடி எல்லாம் "வருகிறேன்,'' என்றன. சுகபிரம்மருக்கு பெருமை தாங்கவில்லை.
"நான் வருகிறேன்' என்றேன். ஆனால், ஊரிலு<ள்ள மரம் மட்டைக்குள் கூட நான் இருக்கிறேன். நான் எவ்ளோ பெரிய ஆள்,'' என்று நினைத்தாரோ இல்லையோ ஞானம் போய்விட்டது.
""சுகா! தற்பெருமையால் ஞானம் இழந்தாய். நீ ஜனகரைப் பார்த்து உபதேசம் பெற்று வா,'' என்றார்.
சுகர் மிதிலாபுரிக்கு சென்றார். ராஜாங்கத்தில் இருந்தும், குடும்ப வாழ்வில் பட்டும் படாமல் இருந்த ஜனகரைச் சந்திப்பதற்காக வாயில் காப்பவனிடம் அனுமதி கேட்டார்.
""சுவாமி! இங்கேயே நில்லுங்கள்! நான் போய் அரசரிடம் அனுமதி பெற்று வருகிறேன். மன்னர் நீங்கள் யார் எனக் கேட்பார். என்ன சொல்ல வேண்டும்?'' என்றான்.
""சுகப்பிரம்ம மகரிஷி அவர்கள் வந்திருப்பதாகச் சொல்,'' என்றார்.
காவலன் உள்ளே ஓடினான்.
""மன்னா! சுகப்பிரம்ம மகரிஷி அவர்கள் தங்களைக் காண வந்துள்ளார்கள். அனுப்பட்டுமா?'' என்றான்.
""அவர் நாலைந்து பேருடன் வந்துள்ளார். அவர்களை வெளியே விட்டுவிட்டு தனியே வரச்சொல்,'' என்றார்.
காவலனுக்கு புரியவில்லை.
""அவர் ஒருவர் தானே வந்துள்ளார். மன்னர் இப்படி சொல்கிறாரே!'' இருந்தாலும் எதிர்க்கேள்வி கேட்க முடியுமா? அவன் தலையைப் பிய்த்துக்கொண்டு, ""சுகர் அவர்களே! தாங்கள் அழைத்து வந்துள்ள நாலைந்து பேரை விட்டுவிட்டு மன்னர் தங்களை உள்ளே வரச்சொன்னார்,'' என்றான்.
""சரி...சுகப்பிரம்மம் வந்திருக்கிறது என்று சொல்,'' என்றார்.
காவலனும் மன்னனிடம் அவ்வாறே சொல்ல, ""இன்னும் ஒரே ஒரு ஆள் இருக்கிறார். அவரை விட்டுவிட்டு வரச்சொல்,'' என்றார் ஜனகர்.
அவனுக்கு இன்னும் குழப்பம்.
""சுவாமி! தங்களுடன் இருக்கும் ஒருவரை விட்டு வரச்சொல்கிறார்,''.
""சரியப்பா! சுகபிரம்மன் வந்திருக்கிறான் என்று சொல்,'' என்றதும், அவனும் அங்கு போய் சொல்ல, ""அவரை உள்ளே வரச்சொல்,'' என்றார் ஜனகர்.
ஜனகர் அவரிடம் பேசவில்லை. மொட்டையடித்த ஒருவரை அழைத்து வரச்சொன்னார். அவனை அமரவைத்து தலையில் ஒரு தட்டை வைத்தார். தட்டில் எண்ணெ#யை ஊற்றினார்.
""டேய்! உடனே புறப்பட்டு ரதவீதிகளைச் சுற்றி விட்டு மீண்டும் இங்கே வா. தட்டு கீழே விழக் கூடாது. தட்டில் இருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட கீழே சிந்தக்கூடாது. விழுந்தால், உனக்கு தலையிருக்காது,'' என்று எச்சரித்தார்.அவன் பயத்துடன் கிளம்பினான். செல்லும் வழியில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், கச்சேரி எல்லாம் நடந்தது. அவன் எதன் மீதும் கவனம் செலுத்தவில்லை. ஒட்டுமொத்த கருத்தும் தட்டின் மேலேயே இருந்தது. அது கீழே விழாமல் பவ்யமாக நடந்து மன்னர் முன்னால் வந்து நின்றான்.
""ஓடிப்போ,'' என்றார் ஜனகர். அவன் தலை தப்பித்த மகிழ்ச்சியில் பறந்தான். ஜனகர் அப்போதும் சுகரிடம் பேசவில்லை.
ஆனால், ஒன்றைப் புரிந்து கொண்டார்.
"ஒருவனுக்கு உயிர் போய்விடும் என்ற நிலையில், சுற்றுப்புறத்தில் என்ன நடந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் கருத்தை தட்டின் மீது செலுத்தினான். அதுபோல, நாமும் மனதை அடக்கி, கடவுளின் மீது மட்டும் கருத்தைச் செலுத்தினால் அகங்காரம் தானே அடங்கும். மீண்டும் ஞானம் பிறக்கும்' என்ற உபதேசத்தைப் பெற்றவராக அங்கிருந்து கிளம்பினார்.

No comments:

Post a Comment