Thursday, November 21, 2013

பரமாத்மாவின் ஐந்து நிலைகள்

பரமாத்மாவின் ஐந்து நிலைகள்

இப்படிப்பட்ட மேலான பரமாத்மா ஐந்து நிலைகளில் இருக்கிறார். இது பஞ்சராத்ர கருத்து. இதுவும் வேதமே. இறைவனை ஐந்து இரவுகளில் தம்மை வழிபடும் வழியையும், தனது நிலைகளையும் ரிஷிகளுக்கு உபதேசித்ததே பஞ்சராத்ரம் ஆகும். இது ஆகமமும் ஆகும். பரமாத்மாவின் ஐந்து நிலைகள் 1. பரம் 2. வியூஹம் 3. விபவம் 4. அந்தர்யாமி 5. அர்ச்சை எனப்படும்....

1. பரம் : அகராக்ருதமான (பௌதீகத்திற்கு அப்பாற்பட்ட) முக்காலமும் ஒரு காலமாக இருக்கும் ஸ்ரீ வகுந்த உலகில் ஸ்ரீமந்நாராயணனின் திருக்கோலம். பூமிதேவி, நீளாதேவி உடன் அழகிய மணி மண்டபத்தில் வீற்றிருப்பது. புனிதமான சங்கு, சக்ர, கதை முதலிய ஆயுதங்களுடனும், விதவிதமாகிய நகை அலங்காரங்களுடனும் இருத்தல், அப்போது ஸ்ரீ கருடர், அநந்தர் (ஆதிசேஷன்) விஸ்வ÷க்ஷனர் போன்ற சம்சாரத்திலேயே சிக்காத நித்யசூரிகள் எனப்படுவோரால் எப்போதும் ஸாமகானங்களால் போற்றப்படும், முக்தி அடைந்து வந்த ஆத்மாக்களால் கைங்கர்யங்களால் அனுபவிக்கப்பட்டும் உள்ள திவ்ய மங்கல வடிவம் சுத்த சத்துவமான ஞான வடிவம். இதையே பரப்பிரும்மம், வாசுதேவர் என்று சொல்வது.

2. வியூஹம் : உலகத்தைப் படைக்கவும், காக்கவும், அழிக்கவும், தியானிக்கப்படவும் பூஜை செய்யப்படவும் நான்கு வடிவில் இருப்பது. 1) வாசுதேவன், 2) பிரத்யும்நன் 3) அநிருத்தன் 4) சங்கர்ஷணன் ஆகியவை ஆகும். பிரும்மா, விஷ்ணு, மகேஷ்வரன் போல வாசுதேவரே ஸ்ரீமந்நாராயணர் ஆகும். பாஞ்சராத்யதிகரணத்தினால் ஜீவோத்பத்தி செய்தியைத் தவிர ஸ்ரீசங்கராச்சாரியாரும் எதையும் கண்டிக்கவில்லை என்பர்.

3. விபவம் : இது பரமாத்மா எடுத்த அவதார வடிவங்களைக் குறிக்கும். ஆமை வடிவில் கூர்மமாகவும், மீன் வடிவில் மச்சமாகவும், வராகமாகவும், நரசிம்ம வடிவிலும், ராமர் கிருஷ்ணர் என்றும் அந்தந்த உடலிலும், அலங்காரத்திலும் <<உலகில் அவதரிப்பது. இதைப் பற்றிக் கண்ணனே கீதையில் கூறியுள்ளார். தருமத்தைக் காப்பாற்றி, சாதுக்களுக்கு அருளவும், துன்மார்க்கரைத் தண்டிக்கவும் அவதாரங்கள் எடுக்கப்படுகின்றன.

4. அந்தர்யாமி : எல்லா உயிர்களுக்கும் உள்ளே உறைபவராக இருத்தல், அதாவது ஜீவாத்மாவிற்கும் உள்ளே பரமாத்மா உடலுள் உயிர்போல இருத்தல், இதயத்தில் வாழும் வடிவம், ஜீவனின் குற்றங்குறையால் பாதிக்கப்படாதவன்.

5. அர்ச்சாரூபம் : பலப்பல விக்ரஹங்களாக நாம் கோயில்களில் தொழும் உருவங்கள் கல்லில், பொன்னில், செம்பில், ஐம்பொன்னில் என்று கடவுளுக்குச் செய்யப்பட்ட அடையாள மூர்த்தங்களில் இருப்பது. இந்த தத்துவத்தில் தான் கோயிலில் உள்ள வணங்கப்படும் சில வடிவங்களில் முழுமையாக உண்மையான கடவுள் வாசம் செய்கிறார் என்பது பொருந்தும். பரவாசுதேவருக்குச் சமமான கடவுளின் முழுமை குடியிருப்பது அர்ச்சாவதாரத்தில் தான். பக்தர்களுக்கு அருள என்று அவர்களால் அமைக்கப்பெறும் சில மூர்த்தங்களில் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு அதே மூர்த்தங்களின் வடிவில், அமைப்பில் பௌதீகத்திற்கு அப்பாற்பட்டதான திருமேனியை மேற்கொண்டு, காலம் இடம் இவற்றை மீறி இருந்தபடி உள்ள நிலை. அர்ச்சகர்களால் குளியல், உணவு, படுக்கை, ஊர்வலம் முதலியவற்றுடன் மக்களிடையே ஊருக்குள் கோவில்களில் வாழ்பவர். பக்தருக்கு விருப்பப்பட்ட பொருளால் வடிவம் பெறுபவர்

No comments:

Post a Comment