Sunday, December 1, 2013

குசேலரின் வறுமையை போக்கியது போலவே எனது தேசத்தின் வறுமையைப் போக்கு

குசேலர், கண்ணனின் பால்ய நண்பர். இருவரும் ஒரே குருவிடம் குருகுலத்தில் ஒன்றாகக் பாடம் படித்தவர்கள். குருகுல வாசம் முடிந்தவுடன் குசேலர், சுசீலை என்னும் குணவதியை மணம் புரிந்து கொண்டு போய்விட, கண்ணன் துவாரகையை ஆட்சி செய்யப்புறப்பட்டு விட்டார்.
இருவரின் சந்திப்பும் நீண்ட காலம் நிகழவில்லை. இப்படியே காலம் செல்லச் செல்ல குசேலர் 27 குழந்தைகளுக்குத் தந்தையானார். அவரை வறுமையும் பிடித்து ஆட்டியது. குடும்பம் பசியைத் தவிர வேறு எதையும் அறியவில்லை....

ஒரு நாள் மனைவி சுசீலை, குசேலரிடம் வறுமை தாங்க முடியாத நிலையில் அருமை நண்பர் கண்ணபிரானிடம் போய் உதவி கேட்கும்படி கூறினாள். குசேலரும் சரியென்று கிளம்பினார். யாரையாவது பார்க்கச் சென்றால் ஏதாவது கையில் எடுத்துச் செல்ல வேண்டும் அல்லவா? வீட்டில் எதுவும் இல்லை. இருந்த மூன்று பிடி அவலை எடுத்து குசேலரின் மேல் துண்டு கந்தையின் ஓரத்தில் முடிச்சுப் போட்டு அனுப்பினாள் சுசீலை.

நீண்ட காலமாகச் சந்திக்காத நண்பன், தற்போது மகாராஜாவிற்கெல்லாம் மகாராஜாவாக இருப்பவன். தன்னை நினைவில் வைத்துக் கொண்டிருப்பானோ என்ற சந்தேகத்துடன் சென்றார் குசேலர். ஆனால் அங்கு கண்ணனோ நண்பனைக் கண்ட மாத்திரத்தில் வாரி அணைத்து, கண்ணீர் சொரிந்து, அதீத உபசாரம் செய்து அசத்திவிட்டான். கண்ணனும், குசேலனும் உணவு உண்டு ஓய்வாக இருந்த சமயம் குசேலனின் கந்தை முடிச்சில் இருந்ததைப் பார்த்துவிட்டார் கண்ணன்.

“அண்ணி, எனக்குக் கொடுத்துவிட்டதா! என்ன அது?” என்று முடிச்சைப் பார்த்துக் கேட்டார்.
சங்கடத்துடன் குசேலர் அவலை எடுத்து நீட்டினார். ஒரு பிடி அவலை எடுத்து கண்ணன் ரசிக்க, குசேலர் தன் வறுமையைச் சொல்லாமலேயே அங்கே குசேலரின் வீடு செல்வச் செழிப்பாக மாறியது. வறுமையைச் சொல்ல வந்த குசேலரோ தனது நிலைமையைச் சொல்லக் கூச்சப்பட்டுக் கொண்டு சொல்லாமலேயே வீடு திரும்பிய பொழுது ஆனந்தத்தில் அதிர்ந்து போனார்.
குசேலன் கொண்டு வந்த அவலைச் சாப்பிட்டு விட்டுத்தான் கண்ணன், குசேலருக்கு வாரி வழங்கினான் என்பதில்லை.

பகட்டுக்காகத் தாம் செல்வந்தன் என்கிற திமிருடன் படைக்கப்படும் பண மூட்டைகளோ, தங்கமோ, வைரமோ அல்லது வைடூரியங்களோ கண்ணனின் மனதைக் குளிர்ச்சிப்படுத்திவிடுவதில்லை. மாறாக, பணக்காரனோ ஏழையோ கற்றவனோ கல்லாதவனோ அவனது உள்ளன்போடு படைக்கப்படும் எதையும் இறைவன் ஏற்றுக் கொள்கிறார் என்பது தான் குசேலர் – கண்ணன் இடையிலான நிகழ்ச்சியிலிருந்து நாம் உணர்ந்து கொள்ளக் கூடிய பாடம்.

படைக்கப்படும் பொருள் பார்க்கப்படும் பொருளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது, பிறர் கண்களுக்கு அவை புலப்பட வேண்டிய அவசியமில்லை. அவை பக்தனுக்கும் இறவனுக்குமான மானசீகப் பரிமாற்றமாக இருந்தாலே போதுமானது.
கண்களுக்குப் புலப்படாத, வெளியில் எங்கும் கிடைக்காத, அதே நேரம் அதிக விலைமதிப்புள்ள அப்படிப்பட்ட ஒரு படையல் எது..? பக்தி. கண்ணனின் பாதங்களில் நமது பக்தியினை சமர்ப்பணம் செய்வோம். அவன் குனிந்து நம் தோள் பற்றி நம்மைத் தூக்கி அவனுக்குச் சமமாக நம்மை நிறுத்திவிடுவான்.

கண்ணா, கிருஷ்ணா, கோவிந்தா நான் உன்னை நினைக்கின்றேன், உன்னை என் உள்ளன்போடு தியானிக்கின்றேன், கண்ணீர் சொரிகின்றேன்,

குசேலரின் வறுமையை போக்கியது போலவே எனது தேசத்தின் வறுமையைப் போக்கு. எனது தேசத்தின், என்பது சுய நலமல்ல எனது தேசத்தின் வறுமை ஒழிந்தாலே உலகின் வறுமை ஒழிக்கப்பட்டு விடும் என்கிற எண்ணம்தான்.

ஹரே கிருஷ்ண! ஹரே கிருஷ்ண! கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!!

No comments:

Post a Comment