Wednesday, December 11, 2013

பூஜையின்போது சாம்பிராணி ஏன்?

பூஜையின்போது சாம்பிராணி ஏன்?

கோயில்களில் தூபக்கால் என்று ஒன்று இருக்கும். இதில், மரக்கரியை எரியச் செய்து, அந்தக் கனலில் சாம்பிராணியைப் போட்டு, புகைய விட்டு, இறைவன் சந்நிதியில் காட்டுவர்.

பாறை போல் இறுகிக் கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாகிப் போகிறது. அதுபோல், நம்முன் பூதாகாரமாக, மிகக் கடினமாகக் கிடக்கும் துன்பங்கள் எல்லாம், அக்னி உருவாக உள்ள இறைவனின் அருள் கடாட்சம் கிட்டியவுடனே, புகையைப் போன்று லேசாகி விலகிவிடும்....

இன்று சாம்பிராணியை பெரும்பாலும் எல்லோராலும் உபயோகப்படுத்த முடிவதில்லை. எனவே, பாரம்பரியமான சாம்பிராணிக்குப் பதிலாக, இன்றைய நாட்களில் கம்ப்யூட்டர் சாம்பிராணி மற்றும் விதவிதமான ஊதுபத்திகள் மூலம் தூப ஆராதனையை இறைவனுக்குச் செய்கின்றனர். இதில் தவறு ஏதும் இல்லை. இதற்கு விளக்கமாக அமைந்திருக்கிறது ஒரு சம்பவம்.

வைணவ ஆசார்யர் ஸ்ரீராமானுஜருடைய சீடரான கூரத்தாழ்வானின் திருமகனார் பராசர பட்டர். இவர் ஸ்ரீராமானுஜருக்குப் பிறகு வைணவ உலகின் தலைமைப் பொறுப்பில் திகழ்ந்தவர். இவர், தனது பிரபந்த உரை நிகழ்ச்சிகளின்போது மிகச் சிறந்த விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார். ஒரு முறை திருவாய்மொழிக்கான வியாக்கியானத்தை அளித்தபோது, பரிவதிலீசனைப் பாடி என்ற திருவாய்மொழிப் பாசுரத்துக்கு விளக்கமளித்தார். அந்தப் பாசுரம்...

""பரிவதில் ஈசனைப் பாடி
விரிவது மேவல் உறுவீர்
பரிவகை இன்றி நல்நீர்தூய்
புரிவதும் புகைபூவே''

-இறைவனுக்கு எந்தப் புகையும் பூவும் சமர்ப்பிக்கலாம். செதுகையிட்டுப் புகைக்கலாம், கண்டகாலிப் பூவும் சூட்டலாம் என்று உரை அளித்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சீடரான நஞ்சீயருக்கு வருத்தம் ஏற்பட்டது. ""இறைவனுக்கு வாசனை மிகுந்த பூக்களும் புகையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று சாத்திரம் வகுத்திருக்கும்போது, நீங்கள் இப்படி உரை செய்யலாமா?'' என்று கேட்டுவிட்டார்.

அதற்கு பட்டர், ""இறைவன் ஒன்றும் எனக்கு இதைத்தான் நீ சூட்ட வேண்டும், காட்ட வேண்டும் என்று விதிக்கவில்லை... கண்டகாலிப்பூ சாத்துவதற்காகப் பறிக்கப் போனால், அதில் உள்ள முட்கள் பக்தனின் கையைப் பதம் பார்த்து

விடும். எனவே அடியார்கள் மீது கருணை கொண்டே அவற்றை வேண்டாம் என்று மறுத்தானே ஒழிய இறைவனுக்கு விருப்பமானது விருப்பமில்லாதது என்று எதுவும் இல்லை'' என்று விளக்கம் அளித்தார்.

No comments:

Post a Comment