Tuesday, December 3, 2013

மனிதன் தெய்வமான கதை ராமனின் கதை.


 
தனி ஒரு மனிதனாக இருக்கும்போது ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருந்த ராமன், அரசனாக இருக்கும்போது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் இலக்கணமாக இருக்கிறான். அதனால்தான் அவன் உதாரண மனிதன். தெய்வம் மனிதனாக தோன்றி, மனிதன் தெய்வமான கதை ராமனின் கதை.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று தந்தை சொன்ன சொல்லைக் காப்பாற்ற காடு புகும் மகன் ஒரு மகன் எப்படி தன் தந்தையிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருக்கிறான்.

பரதனோ தன் சகோதரனிடம் நடந்து கொள்ளும் முறையில் ஒரு தம்பி எப்படி அண்ணனிடம் நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருக்கிறான். ...

ஒரு மனைவியிடம் ஒரு கணவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இலக்கணமாக ராமன் தன் மனைவியிடம் நடந்து கொள்கிறான். ஒரு மனிதன் எல்லா மக்களையும் சகோதரர்களாக கருத வேண்டும் என்பதன் இலக்கணமாக ராமன், சுக்ரீவனையும், குகனையும் விபீடணனையும் சகோதரனாக வரிக்கிறான்.

ஆனால் அனைத்தையும் விட, ஒரு அரசனாக இருப்பவன் தன் சுக துக்கங்களையும் சொந்த விருப்பு வெறுப்புக்களையும் தாண்டி, மக்களுக்கு 'ஒழுக்கமான அரசுதான் ' நடைபெறுகிறது என்ற நம்பிக்கை இருக்க வேண்டும் என்பதன் உதாரணமாக ராமன் இருக்கிறான்.

போர் முடிந்ததும் ராமன் அரசனாகப் போகிறான். அரசனாக இருப்பவன் நீதி கொடுத்தால் மட்டும் போதாது, அது நீதிதான் வழங்கப்படுகிறது என்பதும் தெரியவேண்டும். ராமனுக்கு சீதை மீது சந்தேகம் ஏதும் இல்லை என்றாலும், அரசனாக இருப்பவன் தன் குடிமக்களுக்கு ஒழுக்கவானாகத் தெரியவேண்டும். அதுவே சீதைக்கு நேர்ந்த துயரம். அதுவே ராமனுக்கு ராஜபாரம்.

தன் மனையாள் மீது கொண்ட அன்பினால், அவள் மீது தனக்கு இருக்கும் கடமையால், ஒரு பெரும் பேரரசை அழித்து தன் மனைவியை மீட்ட ராமனுக்கு சீதை மீது என்ன சந்தேகம் ? ஆனால் அதுவரைதான் அவன் தனி மனிதன். அதற்குப் பின் அவன் எதிர்கால அரசன். அப்படி அன்புகொண்டிருந்த சீதையை அக்னி பிரவேசம் செய்யச் சொல்வதைப் போலவோ அல்லது காட்டுக்கு அனுப்புவதுபோல ஒரு துயரமோ ராமனுக்கு இருக்க முடியுமா ? செய்ய வேண்டியிருக்கிறது. அதுவே ராஜபாரம்...

தனி ஒரு மனிதனாக இருக்கும்போது ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருந்த ராமன், அரசனாக இருக்கும்போது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் இலக்கணமாக இருக்கிறான். அதனால்தான் அவன் உதாரண மனிதன்.....

No comments:

Post a Comment