Thursday, September 18, 2014

சூர வதத்துக்கு முன்பே முருகப்பெருமான் மயில் வாகனராகத் திகழ்ந்தாரா?

சூரபத்மனை வதைத்த முருகப்பெருமான் அவனுக்கு நற்கதி அளித்து சேவற்கொடியாகவும், மயிலாகவும் ஏற்றதாகப் படித்திருக்கிறேன். ஆனால்... சூர சம்ஹாரத்துக்கும் முன்னதாகவே மயிலின் மீது ஏறி முருகன் உலகை வலம் வந்தார் என்கின்றன புராணங்கள். எனில், சூர வதத்துக்கு முன்பே முருகப்பெருமான் மயில் வாகனராகத் திகழ்ந்தாரா?
அத்தனை உயிரினங்களிலும் ஊடுருவியிருக்கும் பரம்பொருள் முருகப்பெருமான். அவர், ஈசனின் நெற்றிக்கண் நெருப்பில் இருந்து தோன்றியவர்; பிறந்தவர் அல்ல. பிறப்பும் இறப்பும் அற்றவர். அவர், எந்த வேளையிலும் மயில் வாகனத்தில் தோன்றலாம்.
ஒருவனது உயிர் பிரிந்ததும் பூத உடல் மறைந்துவிடும். கண்ணுக்குப் புலப்படாத சூட்சும வடிவில் அவனது ஆன்மா இருக்கும். அதுதான் அழியாத பொருள். சூரன் உயிர் பிரிந்தது. பூத உடல் மறைந்தது. சூட்சும வடிவம், வாகனமான மயிலில் ஒன்றியது. ஸாரூப்யம், ஸாமீப்யம், ஸாலோக்யம், ஸாயுஜ்யம் என்கிற நான்கு நிலைகளில்... மயிலோடு சாயுஜ்யத்தை அளித்தார் முருகப்பெருமான். இப்போது, அவன் மயில் வடிவில் நமக்குத் தென்படுகிறான் என்றே அதற்குப் பொருள். உயிரினங்களில் நஞ்சை உமிழ்ந்த தாரகனை, நஞ்சை அழிக்கும் மயிலில் இணைத்தார் முருகப்பெருமான் என்று சொல்வது பொருந்தும்.
சூரபத்மன் இறக்கும் வரை வாகனம் இல்லாமல் இருந்து, பிறகு கிடைத்தது என்று, மனிதப் பிறவியின் சாதாரண சிந்தனையை இந்த இடத்தில் செயல்படுத்தக் கூடாது. 'உலகையே உலுக்கிய தீய சக்தியையும் அருள்பாலித்து ஆட்கொண்டார் முருகப்பெருமான்’ எனும் முருகனின் பெருமையைப் பறைசாற்றும் நோக்கத்தில் இந்த நிகழ்வு விளங்குகிறது.
வேதம் அறிமுகம் செய்த உயிரினம் மயில் (ஸெளரீ பலாக்ர்ச் யோமயூர:). வேதப்பொருள் (முருகன்) அதனுடன் என்றென்றும் ஒன்றியிருப்பதில் ஆச்சரியம் இல்லை. புராணங்களைத் தெரிந்து கொள்வதில் தனி அணுகுமுறை உண்டு. கதையில் ஒளிந்திருக்கும் தத்துவத்துக்கே முதலிடம் உண்டு. அவனது விளையாட்டிலும் செயல்பாட்டிலும் ஒளிந்திருக்கும் குறிக்கோளை உணர வேண்டும். பாமரர்களை ஈர்க்க கதை வடிவம் தேவைப்படுவதால், அதன் போக்கு விறுவிறுப்புடன் அமைந்திருக்கும்.
மோகினி அவதாரத்தில் அமுது பரிமாறும்போது, அரக்கன் ஒருவன் அமுதைப் பருகினான். மோகினி அதைக் கவனித்து, பாம்பாக மாறிய அவனை கரண்டியால் துண்டித்தாள். ஒருவன் இருவரானான். அவ்விருவருமே நவக்கிரகத்தில் இணைந்த ராகு- கேதுக்கள் என்ற தகவல் உண்டு.
வேதம் ராகுவை அறிமுகம் செய்தது. வேத கால வேதம் ஓதுபவர்கள், தினமும் மூன்று வேளை ராகு-கேதுவுக்கு தர்ப்பணம் செய்வார்கள். அப்படியிருக்க, பாற்கடலை கடைவதற்கு முன்பு ராகு-கேது இல்லை என்றாகுமா? வானவியல், ராகு சாரத்தை வரையறுத்துக் கூறும். உலகம் தோன்றிய நாளிலிருந்து கிரகணமும் தொடங்குகிறது.
காயத்ரீயை விஸ்வாமித்திரர் வெளியிட்டதாக புராணம் கூறும். ஆனால், வேத காலத்திலிருந்தே காயத்ரீ ஜபம் தொடர்கிறது. கங்கையை வரவழைத்தவன் பகீரதன் என்று புராணம் கூறும். ஆனால், வேத காலத்திலேயே கங்கை பற்றிய தகவல் உண்டு. (கங்காயமுறயோர்மத்யே...)
வேதத்தின் விளக்கவுரையாக புராணம் செயல்படுவதால், ஒரு கதையோடு அதன் தொடர்பை சிறப்பித்துக் காட்டும். யுகத்துக்கு யுகம் புராணக் கதைகளில் மாற்றம் உண்டு. வால்மீகி இயற்றிய ராமாயணம், மற்ற மொழிகளில் பல மாற்றங்களுடன் இருப்பது கண்கூடு. ஆகவே, ஒரு குறிப்பிட்ட நிகழ்வை மட்டும் ஆராயாமல், முன்னும் பின்னுமான தகவல்களையும் திரட்டி விரிவாக அதை அணுகும்போது உண்மை விளங்கும்.

No comments:

Post a Comment