Tuesday, February 17, 2015

மஹாசிவராத்திரி

கடவுள் இருக்கிறாரா? இருக்கிறார் எனில் எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? அவரை என்னால் ஏன் காணமுடியவில்லை? எப்படிக் காண முடியும்? இப்படி எல்லாம் கேள்வி எழுவது உலகியல் வாழ்க்கையில் இயல்பான ஒன்று தான்!
இதற்கான பதில்களை அற்புதமாக அருளாளர்கள் தங்கள் அழியாப் பாடல்களில் தந்துள்ளனர்.
அப்பரின் அற்புத பதில்கள்!
இவற்றிற்கெல்லாம் பதில் கொடுத்துள்ள அழியாத் தவநெறிச் செல்வர் அப்பரின் அருளுரைகளை சிவராத்திரி தினத்தன்று பார்த்துத் தெளிவோம்!
“விறகில் தீயினன், பாலில் படு நெய் போல் மறைய நின்றுளன்” என்கிறார் அப்பர். விறகிலே தீ போல பாலிலே நெய் போல மறைந்து நின்று இருக்கிறான் எம் சிவ பிரான் என்பதே கடவுள் இருக்கிறாரா, எங்கே இருக்கிறார் என்று கேட்பவருக்கான பதில்!
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும் 
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே 
ஈசன் எந்தை இணையடி நீழலே
எப்படி இருக்கிறார் எனில் மாசு இல்லாத வீணை போல, மாலை மதியம் போல, வீசுகின்ற தென்றல் போல, வீங்கு வசந்தம் போல மூசு வண்டறை தடாகம் போல அவனது நீழல் உள்ளது என்பதே எப்படி இருக்கிறார் என்பதற்கு அவர் தரும் பதில்!
நியூட்டனின் பதில்!
பிரபல விஞ்ஞானி நியூட்டன் ஒரு பெரும் ஆத்திகவாதி. அவரது நண்பர் ஒருவரோ பெரிய நாத்திகர். நியூட்டனின் கடவுள் பக்தியை அவர் ஏற்கவில்லை. ஒரு நாள் நியூட்டன் சூரிய மண்டலத்தின் மாதிரி ஒன்றை ஸ்கேல் மாடலில் அதாவது சிறிய் அளவில் சூரிய மண்டலம் இருப்பது போலவே சுற்றி வரும் கிரகங்களின் தூரம். ஓடு பாதை. அளவு ஆகியவற்றை எல்லாம் நிர்ணயித்து சுழலும்படியான ஒரு அமைப்பில் செய்து வைத்திருந்தார். அற்புதமான அந்தச் சாதனத்தில் ஒரு சிறிய கைப்பிடியைச் சுற்றினால் கிரகங்கள் தனது இயல்பில் சுழல அதனதன் ஓடு பாதையில் அது அது தனது வேகத்தில் சென்று சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும்.
நியூட்டனின் நண்பர் ஒரு நாள் உள்ளே வந்தார். இந்த அபாரமான அமைப்பைப் பார்த்து பிரமித்து நின்று விட்டார். அப்போது அந்த அறையின் ஓரத்தில் தன் மேஜையின் அருகே நாற்காலில் அமர்ந்து நியூட்டன் தீவிரமாக எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். வந்த நண்பர் வியப்புடன் கூவினார்:” ஆஹா! பிரமாதம்! நியூட்டன்! இதை யார் செய்தது?” அவரது ஓங்கிய குரலுக்கு நியூட்டனிடமிருந்து சுவாரசியமின்றி சாந்தமான குரலில்,”ஒருவரும் இல்லை!” என்று பதில் வந்தது. தனது கேள்வியை நியூட்டன் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று எண்ணிய நண்பர் சற்று உரக்க,”இதை யாரேனும் செய்திருக்க வேண்டுமே! யார் செய்தது என்று நான் கேட்கிறேன்!” என்றார்.
இன்னும் அமைதியான தாழ்ந்த குரலில் நியூட்டன், “அது தான் ஒருவரும் செய்யவில்லை என்கிறேனே” என்றார்.
இப்போது நண்பருக்குக் கோபம் வந்து விட்டது. தன் நண்பர் இடக்காகப் பதில் சொல்கிறார் என்று நினைத்த அவர் நியூட்டனிடம் சென்று அவரின் தோளைக் குலுக்கி, “ யாரும் செய்யாமல் இது எப்படி உருவானது? தானே தோன்றியதா?” என்று ஆவேசமாகக் கேட்டார்.
அவரைப் பற்றி இழுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தார் நியூட்டன். வானத்தைச் சுட்டிக் காட்டினார், பிறகு சொன்னார்:” இதோ மேலே பாருங்கள். லட்சக்கணக்கான நட்சத்திரங்கள், கிரகங்கள், அதன் சுழற்சிகள்! இவை எல்லாம் தானே சுற்றுகையில் இந்த வெறும் சாதனம் தன்னைத் தானே தோற்றுவித்திருக்கக் கூடாதா, என்ன!”
நியூட்டனின் பதிலால் விக்கித்து நின்று விட்டார் அவர். கோடானு கோடி நட்சத்திரங்களையும் கிரகங்களையும் இன்ன பிறவற்றையும் தோற்றுவித்தவன் யார்? அவருக்கு உறைத்தது. அன்று முதல் அவர் சிறந்த ஆத்திகரானார்.
விஞ்ஞானி நியூட்டன் சொன்ன பதிலை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே “இயற்கையைப் பார்; அதைப் படைத்தவனை அறி” என்று மூசு வண்டறைப் பொய்கையைக் காட்டிக் கூறிய அருளாளர் அப்பர்,
“விறகில் தீ ஆகவும், பாலில் நெய்யாகவும் மறைய நின்றிருப்பவன் ஜோதி ஸ்வரூபமானவன் என்று கூறி அவனைப் பார்க்க – அடைய - உறவு என்னும் கோலை நட்டு உணர்வு என்னும் கயிற்றினால் முறுக வாங்கிக் கடைந்தால் அவன் நம் முன் வந்து நிற்பான்” என்கிறார்.
“அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை!”
தென்னாடு உடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

No comments:

Post a Comment