Wednesday, May 27, 2015

இந்த உலகம் நாகரீகமடைந்து கொண்டிருக்கிறதா?

இந்த உலகம் நாகரீகமடைந்து கொண்டிருக்கிறதா?
ராக்கெட்டுகளும், செயற்கை கோள்களும், ஏவுகணைகளும் வானில் பறக்கும் போது, வெற்றி என்று விஞ்ஞானிகள் ஒரு பூஜை அறையிலிருந்து துள்ளி குதிப்பதை தொலைக்காட்சிகள் ஓயாமல் ஒளிபரப்பும்போது, அதை தேசத்தின் பெருமிதம் என நம்மவர்கள் பூரித்துக்கொள்ளும் போது, என் நண்பர்களிடம் ஒன்று சொல்வதுண்டு..
இந்த கண்டுபிடிப்புகள் எதுவும் மக்களுக்கானதில்லை. இந்த வளர்ச்சி நம் போன்ற எளியவர்களுக்கானதில்லை. இதில் நாம் பெருமிதம் கொள்ள ஒன்றுமில்லை என்று.
ஏண்டா நீங்க வளர்ச்சிய ஆதரிக்கவே மாட்டீங்களா என்ற பதில் வழக்கமாக அவர்களிடமிருந்து கிடைக்கும்.
தென்ஆப்ரிக்காவில் நடக்கும் கிரிக்கெட்டில், ஒரு நொடியில் வீசப்படும் பந்து, எந்த வேகத்தில் வந்தது, எந்த திசையில் வளைந்தது என்றெல்லாம் எனக்கு காட்டிய செயற்கைக்கோள், ஈழத்தில் விழுந்த குண்டுகளையும், செத்து விழுந்த தமிழரின் குரல்களையும் காட்டாதது ஏன். அதுதான் நாம் பெருமையோடு சொல்லிக் கொள்ளும் வளர்ச்சி என்றுமட்டும் சொல்லிவிட்டு நகர்வேன்.
"ஒரு நாட்டின் பாதுகாப்பு பெருமிதம் என விண்ணைக் கிழித்து பறக்கின்ற ஏவுகணைகள் முதலில் குறிவைப்பது என் குழந்தைகளைத்தான்.
உலகத்தையே சிறிய கிராமமாக மாற்றிய செயற்கைகோள்கள் 21ஆம் நூற்றாண்டில்கூட, ஈழத்தின் ரத்தங்களையும், பாலஸ்தீனத்தில் பாய்ந்த குண்டுகளையும், இன்று பர்மாவில் கொல்லப்படும் ரொஹீங்கியா முஸ்லீம்களின் கண்ணீரையும் ஒருபோதும் காட்டுவதில்லை.
கோடிகளைக் கொட்டி செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விட்ட தேசம், படுக்கையில் கிடக்கும் என் நோயாளி சித்தப்பன் மருத்துவமனைக்கு வந்து செல்ல இளிச்சவான்பட்டிக்கு ஒரு பேருந்தினை விடவில்லை.
இதுதான் விஞ்ஞானம் மற்றும் வளர்ச்சியின் யோக்கியதை"
விஞ்ஞானம் இரு வகையுண்டு. அரச விஞ்ஞானம், மக்கள் விஞ்ஞானம்.
அரச விஞ்ஞானிகள் வல்லரசுகளின் அறிவியல் லாப வெறிக்காக வேலை செய்பவர்கள். மக்கள் விஞ்ஞானிகள் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான அறிவியலை பேசுபவர்கள்.
ஒபாமாக்களின், மோடிக்களின் வெற்றிக்காக அணுக்கழிவினை ஒடுக்கப்பட்ட மக்களின் தலையில் கொட்டும் விஞ்ஞானிகள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள்.
இயற்கையை நேசிக்கும், மக்கள் உரிமைகளை மதிக்கும் மக்கள் விஞ்ஞானிகளை உருவாக்குவோம்...

No comments:

Post a Comment