Monday, October 5, 2015

பொய்யே பேசாத.. அரிச்சந்திரன் மனைவி, மகனை விற்று துன்புற்றது ஏன்?

பொய்யே பேசாத.. அரிச்சந்திரன் மனைவி, மகனை விற்று துன்புற்றது ஏன்?
சத்தியசீலனாகத் திகழ்ந்த அரிச்சந்திரனை, தவமுனிவர் விசுவாமித்திரர் பல சோதனைகளுக்கு உள்ளாக்கி அவன் மனைவி, மகன் ஆகியோரையும் துன்புறச் செய்தார் என்ற வரலாற்றை நாம் அறிவோம். விசுவாமித்திரர் இவ்வாறு செய்ததற்கு ஏதேனும் காரணம் இருக்கவேண்டுமே. அதையும் காண்போம்.
காசியை ஆண்டுவந்த மன்னன் காசிராஜன். அவன் மகள் மதிவாணி. அழகிலும் அறிவிலும் குணநலன்களிலும் சிறந்து விளங்கிய அவள், சிவபெருமான்மீது மிகுந்த பக்திகொண்டு காசி விசுவநாதரை ஈடுபாட்டுடன் வழிபட்டுவந்தாள். மதிவாணி திருமண வயதை அடைந்தாள். அவளுக்கு மணம் செய்து வைக்க முடிவெடுத்த மன்னன் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தான். நாடெங்குகிலுமுள்ள மன்னர்களுக்கு சுயம்வர ஓலை அனுப்பி வைத்தான். அந்த அழைப்பை ஏற்று திக்கெங்கிலுமிருந்து மன்னர்கள் பலர் காசி வந்தடைந்தனர். அவர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாளிகைகளில் அவர்கள் தங்கினர். சுயம்வரத்திற்காக வந்திருந்தவர்களில் மகத நாட்டு மன்னன் திரிலோசனின் கம்பீரமான தோற்றம் அனைவரையும் கவர்ந்தது.
சுயம்வர நாள் வந்தது. சுயம்வர மண்டபத்தில் மன்னர்கள் அவரவர்க்கு அளிக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்தனர். சபையில் மங்கல இசை ஒலித்தது. நடன மாதர்கள் நடனமாடி, சபையில் கூடியிருந்தோரை மகிழ்வித்துக் கொண்டிருந்தனர். சபைக்கு வந்த காசி மன்னன் அனைவரையும் பார்த்து, என்னுடைய அழைப்பைபேற்று என் மகளின் சுயம்வரத்திற்காக வந்திருக்கும் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். சுயம்வரத்திற்கான நிபந்தனையின்படி, இந்தக் கூண்டிலுள்ள இளஞ்சிங்கங்களை அடக்கி வெற்றி பெறுபவர்க்கே என் மகள் மாலையிடுவாள் என்று கூறினான்.
கூண்டிலிருந்த சிங்கங்களின் தோற்றம் அனைவரையும் அச்சப்பட வைத்தது. மன்னர்கள் தங்கள் இடத்தைவிட்டு அசையாமல் அமர்ந்திருந்தனர். எவருக்கும் சிங்கத்திடம் செல்லத் துணிவில்லை. மகதநாட்டு மன்னன் திரிலோசனன் கம்பீரமாக எழுந்தான். மிடுக்காக நடந்து சென்று கூண்டுக்குள் நுழைந்தான். அடுத்து அங்கு காண்போரைத் திகைக்கச் செய்யும் உக்கிரமான போராட்டம் நடந்தது. வீரத்துடன் போராடிய அவன் அந்த சிங்கங்களை அடக்கி வெற்றிபெற்றான். வெற்றி வீரன் திரிலோசனனுக்கு மதிவாணி மாலையிட்டாள். ஆன்றோர் வாழ்த்த, வேத முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மதிவாணி தங்களுக்குக் கிடைக்கவில்லையே என மற்றவர் வருந்தினர். திரிலோசனன் மேல் பொறாமைப்பட்டவர்களும் உண்டு.
திருமணத்தன்று மாலை திரிலோசனன் கங்கையில் நீராடி, கோவிலுக்குச் சென்று விசுவநாதரை வழிபாடு செய்து கொண்டிருந்தான். அவன்மீது பொறாமை கொண்டிருந்த மன்னன் ஒருவன் பின்புறமாக வந்து, சற்றும் எதிர்பாராதபடி அவனை வாளால் வெட்டிக் கொன்றுவிட்டு ஓடி மறைந்தான். திரிலோசனன் இறந்த செய்தி நாடெங்கும் பரவியது. திருமணத்தன்றே கணவன் இறந்துவிட்ட துக்கத்தில் மதிவாணி மூர்ச்சையடைந்தாள். மன்னனும் மக்களும் துயரத்தில் ஆழ்ந்தனர். மதிவாணியின் தாய் மிகுந்த துயருற்றாள். வெகுநேரம் கழித்து மூர்ச்சை தெளிந்த மதிவாணி, இனி உயிர் வாழக்கூடாதென முடிவு செய்தாள். அன்று நள்ளிரவுக்குப்பின் யாரும் அறியாதவாறு தன் மாளிகையைவிட்டு வெளியே வந்து கங்கையாற்றில் குதித்தாள்.
அப்போது அங்கு அதிகாலை நீராட வந்த கவுதம முனிவர் இந்த காட்சியைக் கண்டு, அவளைக் காப்பாற்றிக் கரை சேர்த்தார். அவள் அழுதவாறே முனிவரின் கால்களில் விழுந்து வணங்கினாள். முனிவர் அவளுக்கு ஆறுதல் கூறி, மகளே, நீ தீர்க்கசுமங்கலியாக இருப்பாயாக என்று ஆசி வழங்கினார். இதைக்கேட்டு மதிவாணி, முனிவரே, எனக்குத் நேற்றதான் திருமணம் நடந்தது. என் துர்பாக்கியம் திருமணத்தன்றே என் கணவர் இறந்துவிட்டார். கணவரை இழந்த என்னை தீர்க்கசுமங்கலியாய் இரு என்று வாழ்த்தியிருக்கிறீர்களே. இது எனக்கு எப்படிப் பொருந்தும்?
என்று கேட்டாள்.
கவுதம முனிவர், குழந்தாய், வருந்தாதே. என்னுடைய வாக்கு பொய்க்காது. நடந்தவற்றை மறந்து இப்பிறவியில் மீதியுள்ள நாட்களை தவத்தில் ஈடுபடுத்து. <உன் கழுத்திலிருக்கும் மாங்கல்யத்துடனேயே அடுத்த பிறவி எடுப்பாய். அது யார் கண்ணுக்கும் புலப்படாது. உன் கணவன் திரிலோசனன் அடுத்த பிறவியில் சூரிய குலத்தில் பிறப்பான். உன் சுயம்வரத்தின்போது அவன் கட்டிய இந்தத் திருமாங்கல்யம் அவன் கண்களுக்கு மட்டுமே தெரியும். அடுத்த பிறவியில் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு பல்லாண்டு காலம் வாழ்வீர்கள் என வாழ்த்தினார். மதிவாணி முனிவரின் ஆசிரமத்தில் தங்கி தவம் மேற்கொண்டாள். சில காலம் சென்று மரண மடைந்தாள். அடுத்த பிறவியில் மதிவாணி சந்திரமதியாகவும் திரிலோசனன் அரிச்சந்திரனாகவும் பிறந்தனர். சந்திரமதியின் தந்தை விதித்த நிபந்தனையின்படி, வேறெவருக்கும் புலப்படாத சந்திரமதியின் கழுத்தில் கிடந்த திருமாங்கல்யத்தைக் கண்டு கூறி, அரிச்சந்திரன் அவளைத் திருமணம் செய்துகொண்டான். அவர்கள் இல்லறம் இனிதே நடந்தது. அவர்கள் புதல்வன் லோகிதாசன்.
அரிச்சந்திரனின் இனிய இல்லற வாழ்க்கையில் விசுவாமித்திரர் புயலெனப் புகுந்தார். அரிச்சந்திரனை பொய்யன் என்று நிரூபிக்க அவனைப் பலவாறு சோதித்து கடுந்துன்பத்தில் ஆழ்த்தினார். அவன் மனைவியையும், மகனையும் அடிமைகளாக விற்றான். வீரபாகு என்பவனுக்கு
அடிமையாகி, மயானத்தில் பிணம் எரிக்கும் வேலை செய்து, அதில் கிடைக்கும் வாய்க்கரிசியை உண்டு வாழும் நிலைக்குச் சென்றான் அரிச்சந்திரன். தவநெறிக்கும் பெருந்தன்மைக்கும் சான்றாக விளங்கும் விசுவாமித்திரர் அரிச்சந்திரனை ஏன் இவ்வாறு கொடுமைப்படுத்தினார் என்பதற்கான காரணத்தை அரிச்சந்திரனின் முந்தைய பிறவியே கூறுகிறது.
அரிச்சந்திரன் முற்பிறவியில் திரிலோசனனாகப் பிறந்திருந்தபோது விசுவாமித்திரரிடம், எனக்குப் பிறவாநெறி தந்தருள வேண்டும் என பிரார்த்தித்தான். விசுவாமித்திரர், திரிலோசனா! நீ பல பிறவிகள் எடுத்து அனுபவிக்க வேண்டிய சஞ்சித வினைகள் நிறைய இருக்கின்றன. நீ வாய்மை தவறாதவனாக இருந்து, ஒரே பிறவியில் அத்தனை வினைகளையும் நுகர்வாயானால் உனக்கு பிறப்பு நேராது. என்று கூறினார். திரிலோசனன் மன நிறைவுடன் அதனை ஏற்றுக் கொண்டான். அதன்படியே அவன் அரிச்சந்திரனாக மறுபிறவியெடுத்து எண்ணிலடங்கா துன்பங்களை அனுபவித்து, பலபிறவி வினைகளை ஒரே பிறவியில் தீர்த்துக்கொண்டான். மீண்டும் பிறவா நிலையை அடைந்தான். திரிலோசனன் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவனுக்கு பிறவாநெறி அளிப்பதற்காகவே விசுவாமித்திரர் பல துன்பங்களை அனுபவிக்கச் செய்தாரே அன்றி, அவனைத் துன்புறுத்த வேண்டுமென்ற எண்ணத்தாலல்ல!

No comments:

Post a Comment