Friday, October 2, 2015

துறவி யார்?

துறவி யார்?
“எவனொருவன் வெறுப்பு, விருப்பு இரண்டையும் மேற்கொள்ளவில்லையோ அவனே என்றும் துறவி என்றறிய வேண்டும்.
ஞானம் வேறு, (கர்ம) யோகம் வேறு என்று அறியாதவர்கள் சொல்வார்கள். இரண்டு வழிகளில் எதாவது ஒன்றை ஒழுங்காகக் கடைபிடித்தாலும் இவ்விரண்டின் பலனையும் அடையலாம்.
கர்ம யோகமில்லாமல் சன்னியாசத்தை அடைவது மிகவும் கஷ்டமானது. கர்ம யோகத்துடன் ஞானத்தை நாடும் முனிவன் உடனடியாக பிரம்மத்தை அடைகிறான்”
இன்று துறவிகள் என்ற பெயரில் உலகில் பலர் மலிந்து கிடக்கிறார்கள். துறவுக் கோலம் பூண்டு ஆசிரமம் அமைத்துக் கொண்டு வாழ்பவர்கள் எல்லாம் துறவிகள் என்று நம்பும் அவலம் அதிகமாகி விட்டது. துறவுத் தோற்றமும், சுய அறிவிப்பும், புனித நூல்களை அறிந்து வைத்திருப்பதும், பக்த கோடிகளைச் சேர்த்துக் கொள்வதும் ஒருவரைத் துறவியாக்கி விட முடியாது.
உண்மையான துறவிக்கு பணம், புகழ், பெருமை, அங்கீகாரம் முதலான எதுவுமே தேவை இல்லை. அப்படித் தேவை இருக்குமானால் அந்த நபர் உண்மையான துறவி இல்லை. போலிகளது புறத்தோற்றம் கண்டு ஏமாறுபவர்கள் அறியாமைக்குரியவர்களே.
விருப்பு-வெறுப்பு, சுகம்-துக்கம், புகழ்-இகழ், பெருமை-சிறுமை, வெற்றி-தோல்வி முதலிய இரட்டை நிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து அதில் சிக்கித் தவிக்காமல் நீங்கி இருப்பதே உண்மையான துறவு ஆகும். இரண்டில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து கடைசி வரை அதை அனுபவித்து விட முடியும் என்று சாதாரண மனிதன் ஆசைப்பட்டு கடைசி வரை ஏமாறுகிறான்.
விருப்பு என்று ஒன்றை வைத்துக் கொண்டால் அது கிடைக்காத போது வெறுப்பு வந்தே தீரும். ஒரு விஷயம் சுகமானது என்று சந்தோஷப்பட்டு கொண்டு அதில் மூழ்கினால் அதை இழக்கிற போது துக்கம் ஏற்படாமல் இருக்க முடியாது. புகழால் பெருமிதம் அடைந்து திளைத்தால் இகழ்ச்சி வரும் போது அவமானப்படாமல் இருக்க முடியாது.
இப்படி இந்த இரட்டை நிலைகள் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றிலிருந்து இன்னொன்று பிரிக்க முடியாதது. இதை உணர்ந்து கொண்டு அந்த இரட்டைச் சங்கிலிகளின் பிணைப்பில் இருந்து வெளியே வந்து அமைதியடைவது தான் உண்மையான துறவு.
இது புறத்தோற்றம் அல்ல. ஒரு அழகான அகநிலை. துறவு அடுத்தவர்களுக்கு அறிவிப்பது அல்ல. தானாக உணர்ந்து தெளியும் சுக அனுபவம்.
கர்மமும், ஞானமும் மேம்போக்காகப் பார்க்கும் போது வேறு வேறு போலத் தோன்றினாலும் ஆழமாகப் பார்த்தால் வேறுபட்டவை அல்ல. உண்மையான ஞானி செயல் பட வேண்டிய நேரத்தில் செயல்படாமல் இருக்க முடியாது. அதே போல ஒரு கர்மயோகி ஞானத்தை அடையாமலும் இருக்க முடியாது.
இதைத் தான் ஸ்ரீகிருஷ்ணர் கர்மம், ஞானம் இரண்டில் ஒன்றை ஒழுங்காகக் கடைபிடித்தாலும் மற்றதன் பலனையும் சேர்ந்து அடைய முடியும் என்று கூறுகிறார். அதே போல இரண்டின் சேர்க்கையால் உடனடியாக ஒருவர் பிரம்மத்தை அடைய முடியும் என்றும் கூறுகிறார்.
இந்து நூலில் இருந்து திரட்டியது.

1 comment: