Saturday, November 7, 2015

வெற்றி கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

கேள்வி பில்கேட்ஸ் போல் உலகத்தின் நம்பர் ஒன் பிஸினஸ்மேனாக வேண்டும் என்று ஆசை. வாழ்க்கையில் வெற்றிபெறத் துடிக்கும் இளைஞன் நான். வாழ்க்கையில் வெற்றி பெற்ற பல மனிதர்களைப் பற்றிய புத்தகங்களைப் படித்து, அவர்களைப் போலவே செயல்படுகிறேன். ஆனாலும், ஒரு பலனும் இல்லை. எங்கே தவறு நிகழ்கிறது? ஏன் இப்படி? சத்குரு: சச்சினைப் போல் கிரிக்கெட் ஆட முடியுமா? உங்களின் ஆசை உயர்ந்ததே! உங்களுக்கு பெரிய கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று ஆசை. அதனால் சச்சின் அணிவது போன்ற ஷூக்களை அணிவீர்கள். அதே போன்று கால் பேடுகள் கட்டிக் கொள்வீர்கள். அவர் எந்த மாதிரி கிராப் வெட்டியிருக்கிறார் என்று பார்த்து அப்படியே உங்கள் தலைமுடியையும் வெட்டிக் கொள்வீர்கள். சச்சினே தன் கிரிக்கெட் மட்டையை உங்களிடம் கொடுக்கிறார். ஆனால், இதனாலெல்லாம், அவர் ஆடும் அதே ஆட்டத்தை ஆட உங்களால் இயலுமா? உங்கள் திறமையை முழுமையாக எப்படி உபயோகப்படுத்திக் கொள்வது என்று பழகுவதுதானே முக்கியம்! இன்னொருவர் மாதிரி செயல்பட்டால் உங்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்று யார் சொன்னது? உங்கள் திறமையை முழுமையாக எப்படி உபயோகப்படுத்திக் கொள்வது என்று பழகுவதுதானே முக்கியம்! இன்னொருவரைப் போலவே இருக்க முயற்சி செய்தால், பரிணாம வளர்ச்சியில் பின்னோக்கிப் போய், குரங்கு போல் நடந்து கொள்ளப் பார்க்கிறோம் என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கையை ஏன் அப்படி வீணடிக்கிறீர்கள்? மூன்று பேருக்கும் ஒரே டிக்கெட் இப்படித்தான் சங்கரன்பிள்ளை தன் இரண்டு நண்பர்களுடன் ரயில் நிலையம் வந்தார். மூவருக்கும் சேர்ந்து ஒரே ஒரு பயணச்சீட்டு வாங்கினார். கிராமத்திலிருந்து வந்திருந்த மூன்று பேர் இதைக் கவனித்தனர். ஒற்றை டிக்கெட்டில் எப்படி மூவர் பயணம் செல்ல முடியும் என்று அவர்களுக்குப் பிரமிப்பு. ரயிலில் சங்கரன்பிள்ளையையே அவர்கள் கவனித்தனர். டிக்கெட் பரிசோதகர் வருவதைப் பார்த்ததும், சங்கரன்பிள்ளையும், அவர் நண்பர்களும் சேர்ந்து ஒரே டாய்லெட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டனர். மற்றவர்களுடைய பயணச்சீட்டுக்களைச் சரிபார்த்துவிட்டு, பரிசோதகர் டாய்லெட் கதவைத் தட்டி, “உள்ளே யார்? டிக்கெட் ப்ளீஸ்” என்றார். வெளியில் ஒரு கை டிக்கெட்டுடன் நீண்டது. அவர் அதை சரிபார்த்து விட்டுப் போய்விட்டார். அப்புறம் உள்ளே இருந்து மூவரும் வெளியில் வந்து உட்கார்ந்து கொண்டார்கள். கிராமவாசிகளுக்கு சங்கரன்பிள்ளையின் தந்திரம் புரிந்துவிட்டது. ‘ஆஹா! பிரமாதமான ஐடியாவாக இருக்கிறதே’ என்று நினைத்தார்கள். ஊர் திரும்பும் நாள் வந்தது. அந்த மூவரும் சேர்ந்து ஒரே டிக்கெட் வாங்கினர். பின்னாலேயே தன் இரு நண்பர்களுடன் சங்கரன்பிள்ளை வந்தார். ஆனால், இந்த முறை அவர்கள் ஒரு டிக்கெட் கூட வாங்காமல் ரயில் ஏறுவதை கிராமவாசிகள் பார்த்தனர். அவர்களுக்குக் குழப்பமாகிவிட்டது. பரிசோதகரை சங்கரன்பிள்ளை எப்படி சமாளிக்கப் போகிறார் என்று அவர்களுக்குப் புரியவே இல்லை. டிக்கெட் பரிசோதகர் வருவதைப் பார்த்ததும், கிராமவாசிகள் மூவரும் ஒரு டாய்லெட்டில் போய் ஒளிந்து கொண்டனர். சங்கரன் பிள்ளை தன் நண்பர்களுடன் எழுந்தார். எதிர்ப்புறம் இருந்த மற்றொரு டாய்லெட்டுக்குள் நண்பர்கள் இருவரும் போய்விட்டார்கள். கிராமவாசிகள் ஒளிந்திருந்த டாய்லெட் கதவை சங்கரன்பிள்ளை தட்டி, “யார், உள்ளே? டிக்கெட் ப்ளீஸ்” என்றார். பரிசோதகர் தட்டுகிறார் என்று நினைத்து, உள்ளேயிருந்து ஒரு கை டிக்கெட்டுடன் நீண்டது. வெளியே காத்திருந்த சங்கரன்பிள்ளை அந்த டிக்கெட்டை வாங்கிக்கொண்டு, எதிரில் இருந்த டாய்லெட்டுக்குள் புகுந்து கொண்டார். அடுத்தவர் போல் செய்து பார்க்க நினைத்தால், இருந்ததையும் இழந்து நிற்கும் கிராமவாசிகள் கதிதான் நமக்கும் வந்து சேரும். இன்னொருவரை ஒப்பிட்டுக் காட்டி அவர் போல் இருக்க வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே உங்களுக்குப் பெரியவர்களால் சொல்லப்பட்டு வந்ததால் கிளர்ந்த நோய் இது. விபரீதமான பாதிப்பை ஏற்படுத்தும் முன், இந்நோயைக் களைந்துவிடுங்கள். விரலை வெட்டிய குரு ‘குயிட்டி’ என்று ஒரு ஜென் குரு இருந்தார். அவரிடம் யார் எந்தக் கேள்வி கேட்டாலும் ஒற்றை விரலைக் காட்டுவார். அவ்வளவுதான் பதில். அதைப் பார்த்தாலே, கேள்வி கேட்டவருக்குப் பதில் கிடைத்துவிடும். அப்படியொரு சக்தி, அந்த குருவின் விரலில் இருந்தது. இதைப் பார்த்துக் கொண்டு இருந்த சீடன் ஒருவன், ‘அட! இவ்வளவுதான் விஷயமா?’ என்று அதைப்போலவே விரலைக் காட்டத் துவங்கினான். ஒருநாள், குயிட்டி தற்செயலாக அவனிடம் ஒரு கேள்வி கேட்டார். பழக்க தோஷத்தில் சீடன் அவரிடமும் ஒற்றை விரலைக் காட்டினான். குயிட்டி அந்த விரலை அப்படியே வெட்டித் தள்ளிவிட்டார். அவனுக்கு ஞானோதயம் கிடைத்துவிட்டது. இத்தனை கோடிக்கோடி ஜனத்தொகையில் ஒரு மனிதனுக்கு இருக்கும் திறமை இன்னொரு மனிதனுக்குக் கிடையாது. குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையை நீங்கள் புரிந்து கொள்ளும் முறை வேறு. வேறொருவர் புரிந்து கொள்ளும் முறை வேறு. வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை நமக்கு உந்துசக்தியாக மட்டுமே இருக்க முடியும். ஆனால், அதையே வெற்றியின் சூத்திரமாக எடுத்துக் கொள்ளப் பார்ப்பது முட்டாள்தனம். வாழ்க்கையில் வெற்றி பெற்று நீங்கள் முதலாவதாக வர வேண்டுமென்றால், உங்கள் திறமை என்னவென்று அறிந்து, அதைப் பட்டை தீட்டி, முழுமையாகப் பயன்படுத்திச் செயலாற்றுங்கள்.

1 comment:

  1. ஆஹா! நல்லா இருக்கு சங்கரன் பிள்ளை கதை!

    ReplyDelete