Saturday, November 7, 2015

விபூதி குங்குமம் வைத்துக்கொண்டால் என்ன பலன்?

சத்குரு, தியானலிங்கத்தில் விபூதி தருகிறார்கள்; லிங்கபைரவியில் குங்குமம் தருகிறார்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? இவைகளை வைத்துக்கொண்டால் என்ன பலன்? சத்குரு: விபூதி… ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக மேக்-அப் செய்துகொள்ள விரும்புகிறார்கள்… (சிரிக்கிறார்) விபூதி என்பது சாம்பல். எல்லாம் முடிந்த பிறகு சாம்பல் எஞ்சியிருக்கும். இந்த ஒட்டுமொத்த உலகமே எரிக்கப்பட்டால் கூட, இறுதியில் கிடைப்பது சாம்பல் தானே? அதனால்தான் சிவன் தனது உடல் முழுவதும் சாம்பலைப் பூசிக்கொண்டார். அது சுடுகாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சாம்பல். நம் சக்திநிலை ஒரு குறிப்பிட்ட திசையில் செல்வதற்கு, விபூதி குங்குமம் வைத்துக் கொள்வதென்பது ஒருவித தொழில்நுட்பமாகும். சுடுகாட்டிலிருந்து கொண்டு வரப்படும் சாம்பலுக்கு வேறுவிதமான தன்மை இருக்கிறது. குறிப்பிட்ட சில ஆன்மீகப் பயிற்சிகளுக்கு அந்த சாம்பல்தான் பொருந்தும். ஆனால் அதுபோன்ற சாதனாவைச் செய்ய இங்கு நாம் தயார்நிலையில் இல்லை என்பதால், பொதுவாக வேறு முறைகளில் விபூதி தயார் செய்யப்படுகிறது. மனிதன் அனுபவிக்கும் துயரங்களுக்கு எல்லாம் அடிப்படையே அவனுடைய மனம்தான். மனதை ஒரு குறிப்பிட்ட விதத்தில் கையாளும்போது, அதே மனம் அனைத்திற்குமே தீர்வாக இருக்கும். மனதை இன்னொரு விதத்தில் கையாளும்போது, இதுவே பூமியில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாகிவிடும். எனவே மனிதனுக்கு மனம்தான் தீர்வு, மனம்தான் பிரச்சனையும் கூட. எது தீர்வாக இருக்கவேண்டுமோ அதுவே ஒரு பிரச்சனையாக மாறினால், பிறகு என்னதான் வழி? மனம் என்பது நமக்கு ஒரு பிரச்சனையாக இல்லாமல், ஒரு தீர்வாக இருக்க வேண்டும். மனம் சமநிலையோடும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில இடங்களில் நாம் இந்த விபூதியை (சாம்பலை) பூசும்போது, அது நம் மனதின்மேல் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்மூலம் நம் மனதை இனிமையாக வைத்துக்கொள்ள முடியும். குளித்தவுடன் விபூதியை பூசிக்கொண்டால், மனம் ஒருவிதமாகச் செயல்படும். அப்போது தேவையில்லாமல் அலைபாயாது. குங்குமம்… சுத்தமான குங்குமம், மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மஞ்சள் புனிதமானது என்று நம் கலாச்சாரத்தில் கருதப்படுகிறது. அதற்கென்று ஒரு குறிப்பிட்ட தன்மை உள்ளது. அதைப் பயன்படுத்திக் கொள்வது நம்முடைய நல்வாழ்விற்கு மிகவும் முக்கியம். பெரும்பாலானவர்கள் நல்வாழ்வு என்றாலே செல்வவளம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் குங்குமத்தை பயன்படுத்தி, உலகியல் வாழ்க்கையில் நலனைத் தேடுகிறார்கள். இரண்டு தன்மைகளும் சமநிலையில் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த நம் முந்தைய தலைமுறைகள், வீட்டுப் பெண்கள் குங்குமத்தையும், ஆண்கள் விபூதியையும் பூசிக் கொள்ளுமாறு முறை செய்தனர். ஒன்று விடுதலையையும், இன்னொன்று நல்வாழ்வையையும் தரக்கூடியது. ஆனால் இப்போது எல்லா பெண்களும் குங்குமத்திற்கு பதிலாக ப்ளாஸ்டிக் (ஸ்ட்டிக்கர்) பொட்டு வைக்கிறார்கள். என்ன செய்வது!!! இப்போது எல்லாமே ப்ளாஸ்டிக்கில் வருகிறது. விபூதிக்கு பதிலாகக்கூட வெள்ளை ப்ளாஸ்டிக்கை உருவாக்குவார்களோ என்னவோ? சிவப்பு ப்ளாஸ்டிக்கை வைத்துக் கொள்ளும்போது, ஏன் வெள்ளை ப்ளாஸ்டிக் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூட சிலர் கேட்கலாம். நீங்கள் சொர்க்கத்தில் இருந்தாலும் சரி, நரகத்தில் இருந்தாலும் சரி, நம்மைச் சுற்றி என்ன இருந்தாலும் சரி, நமது உடல், நமது மனம், சக்திநிலை எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பொருத்தே நம் வாழ்க்கை அமைகிறது. இந்த விஷயங்களெல்லாம் நன்றாக நடப்பதற்கு நாம் சில தொழில்நுட்பங்களை, கருவிகளை உருவாக்கியுள்ளோம். நம் சக்திநிலை ஒரு குறிப்பிட்ட திசையில் செல்வதற்கு, விபூதி குங்குமம் வைத்துக் கொள்வதென்பது ஒருவித தொழில்நுட்பமாகும். எனவே எதையும் வைத்துக் கொள்ளவில்லை என்றால்கூட பரவாயில்லை. ஆனால் ப்ளாஸ்டிக்கை வைத்துக் கொள்ளாதீர்கள். இப்படிச் சொல்வதற்காக சிலர் என்னுடன் சண்டையிடுவார்களோ என்னவோ? இன்று அது பெரிய வியாபாரம் அல்லவா? ஆனால், பிளாஸ்டிக் வைத்துக் கொள்வது உங்கள் மூன்றாவது கண்ணை நீங்களே மூடிக்கொள்வதைப் போன்றது. அதை மூடிக்கொண்டு திறக்க விரும்பாததைப் போன்றது. நீங்கள் விபூதி, குங்குமம் அல்லது மஞ்சள், இதில் எதையாவது வைத்துக் கொள்ளலாம். அல்லது எதுவும் பிடிக்காவிட்டால் எதையுமே வைத்துக் கொள்ளாமல் கூட இருந்துவிடலாம். குறைந்தது, ப்ளாஸ்டிக்கையாவது தவிர்க்கலாம். vjn photography 

No comments:

Post a Comment