Saturday, November 7, 2015

குருவுக்கு அர்ப்பணங்கள் தேவையா?

கேள்வி: கோவில்களில் பூஜை செய்யும்போது பூஜைப் பொருட்கள் என்று சிலவற்றைப் பயன்படுத்துகிறோம். லிங்கபைரவியில் கூட 11 விதமான அர்ப்பணங்கள் செய்யப்படுகின்றன. ஈஷாவில் நாம் செய்யும் குருபூஜையில் கூட 16 விதமான அர்ப்பணிப்புகள் செய்யப்படுகிறதே… இது எதனால்? சத்குரு: ஒரு மனிதனால் தியான நிலைக்கு வர முடிந்தால் அவனுக்கு எந்தப் பூஜையும் தேவையில்லை, ஆனால் எல்லோராலும் தியான நிலைக்கு வர முடிவதில்லை. சில நேரங்களில் அந்நிலையை எட்டுகின்றனரே ஒழிய, பலரால் அதில் நிலைத்து நிற்க இயலுவதில்லை. மனம், அலைக்கழிந்து கொண்டே இருக்கிறது, பலவற்றில் சிக்கிக் கொள்கிறது. மனிதர்கள் இதுபோன்ற நிலையில் இருக்கின்றபோது, அவர்களுக்குள் ஆழமான உள்அனுபவம் ஏற்படுத்துவதற்காக சில செயல்முறைகளை நாம் உருவாக்குகிறோம். இவை விஞ்ஞானப்பூர்வமாக உருவாக்கப்பட்டவை. ஆனால் இன்றைய கால கட்டத்தில் அவை பெருமளவில் தங்கள் தரத்தை இழந்துவிட்டன. பக்தி என்னும் அற்புதக் கருவியை மக்கள் வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாற்றுவதே இவற்றின் நோக்கம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன், அந்த ஆதியோகியிடம் யோக முறைகளை சப்தரிஷிகள் கற்றறிந்தனர். மனிதன் எவ்வழியில் எல்லாம் உயர்ந்த நிலையை எட்ட முடியும் என்பதை கற்றுத் தேர்ந்தனர். இதைக் கற்றுக் கொள்ள, அவர்களுக்கு பல ஆண்டு காலங்கள் பிடித்தது. சிவன் அவர்களுக்கு 112 விதமான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்தார். 112 வழிமுறைகளையும் ஒரே மனிதன் கற்றுக் கொள்வது சிரமம் அல்லவா? அதனால் ஒருவருக்கு 16 கலைகள் என பகுத்துச் சொல்லிக் கொடுத்தான். சிவன் 112 முறைகளை சொல்லித் தந்தது எதற்காக? நம் உடலில் 114 சக்கரங்கள் உள்ளன. இவற்றை நாம் சக்தி ஸ்தானங்கள் என அழைக்கலாம். இந்த 114 இல் இரண்டு நம் பொருள் உடலைத் தாண்டி அமைந்துள்ளது. அதனால் இவையிரண்டிற்கும் நாம் செய்ய வேண்டியது என எதுவுமில்லை. இவை இரண்டையும் கழித்தால் மொத்தம் 112 சக்கரங்கள். இந்த 112 சக்கரங்களுக்கு, சக்கரத்திற்கு ஒரு முறை என்ற விகிதத்தில் 112 வழிமுறைகளை உருவாக்கினான் சிவன். சப்தரிஷிகளுக்கு 112 முறைகளைச் சொல்லிக் கொடுத்தான். சிவனிடமிருந்து சிரமேற்கொண்டு அவர்கள் அத்தனை வித்தைகளையும் கற்றறிந்தனர். உலகம் முழுவதும் இதனை நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொன்ன சிவன், அவர்கள் புறப்படும் தருணத்தில், “குரு தட்சிணை தராமல் போகிறீர்களே?” எனக் கேட்டான். தாங்கள் உடுத்தியிருந்த கௌபீனத்தை தவிர தங்களிடம் எதுவுமில்லையே, சிவனுக்கு என்ன கொடுக்க என்று வருத்தமுற்ற சப்தரிஷிகள்… “உங்கள் தகுதிக்கு ஏற்றவாறு கொடுப்பதற்கு, எங்களிடம் ஒன்றுமில்லை சிவனே!” என விம்பி வேதனையுற்றனர். குருபூஜை செய்யும்போது, நம் சக்தி, மனம், உணர்வு இவை மூன்றும் ஓரணியாய் திரண்டு அங்கே ஒருங்கிணைய வேண்டும். திடீரென, அகஸ்திய முனி, “ஐயனே, நீ கற்றுக் கொடுத்த இந்த 16 வழிகளைவிட பெரிதாக நான் எவற்றையும் காணேன், அதையே நான் உங்களுக்கு அர்ப்பணை செய்கிறேன். அவற்றையே உங்கள் பாதத்தில் அர்ப்பணிக்கிறேன்,” என்று கூறி, தான் பிரயத்தனப்பட்டு கற்ற அனைத்தையும் சிவனின் பாதத்தில் ஒப்படைத்தார். கற்றவை அனைத்தும் அற்று வெறுமை நிலையில் நின்றார். அதைப் பார்த்த பிறரும் அகஸ்திய முனியை பின்பற்றினர். தாங்கள் கற்றவை அனைத்தையும் சிவனின் பாதத்தில் படைத்துவிட்டு எதுவும் இல்லாத நிலையில் அவ்விடத்தை விட்டு விலகினர். ஒன்றுமில்லாமல் வெறுமையாய் நின்றதால், சிவன் அவர்களுக்கு முழுமையாய் சொந்தமானான். சிவன் அவர்கள் மூலம் செயல்பட அவர்கள் கருவி ஆனார்கள். அதனால் 16 முறைகள் அல்ல 112 வழிமுறைகளும் அவர்களுக்கு சித்தித்தது. அன்று அகஸ்திய முனி தன் குருவான சிவனுக்கு தான் கற்ற 16 முறைகளையும் அர்ப்பணித்ததால், அன்று முதல் இன்று வரை குருவுக்கு 16 அர்ப்பணங்கள் செய்யும் முறை நிலவி வருகிறது. அகஸ்தியரிடம் இருந்ததுபோல் அத்தனை ஞானம் மக்களிடம் இல்லையே, அர்ப்பணிப்பதற்கு! வேறென்ன செய்ய வெற்றிலை, பாக்கு, தேங்காய்… என உங்களிடம் இருப்பதைத்தானே நீங்கள் அர்ப்பணிக்க முடியும். உங்களிடம் இருப்பதிலேயே மிக உயர்ந்த ஒன்றை எனக்கு தாருங்கள் என்றான் ஆதியோகி, அதனால் தன் குரு தனக்கு வழங்கிய ஞானத்தை அவர் பாதத்தில் அர்ப்பணித்தார் அகஸ்தியர். யோகக் கலாச்சாரத்தில் குருபூஜை செய்வதற்கென்று சில வழிமுறைகள் உருவாக்கியிருக்கிறார்கள். அதன்படி 24 மணி நேரத்தைப் பகுத்து 7 முறை குருபூஜை செய்வார்கள். இந்தக் கணக்குப்படி 112 வழிமுறைகளையும் குருபூஜையில் முழுமையாக அர்ப்பணிக்க முடியும். யாரோ ஒருவர் 16 அர்ப்பணித்தார் நாமும் 16 அர்ப்பணிப்பது, இன்று தேங்காய் இல்லாவிட்டால் வேறு ஏதோவொன்றை அர்ப்பணிப்பது, இதுவல்ல குருபூஜை. அங்கே வைக்கப்படும் அர்ப்பணிப்பின் ரூபத்தில் உங்கள் உயிர் அங்கே அர்ப்பணிக்கப்பட வேண்டும். குறிப்பாக குருபூஜை செய்யும்போது, நம் சக்தி, மனம், உணர்வு இவை மூன்றும் ஓரணியாய் திரண்டு அங்கே ஒருங்கிணைய வேண்டும். இப்படிச் செய்தால் அந்த குருபூஜை வெடிகுண்டைப்போல் வெடிக்கும். அங்கே பிரமாதமான பல விஷயங்கள் நிகழும். லிங்கபைரவிக்கு எதற்காக 11 அர்ப்பணங்கள்? நாம் தேவிக்கு 11 விதமான அர்ப்பணங்கள் செய்கிறோம். இந்த எண்ணிற்கும் உருவத்திற்கும் சம்பந்தம் உண்டு. ஒரு உருவத்தை சக்திவாய்ந்த ரூபமாக மாற்ற வேண்டுமென்றால், அதற்கு வடிவியல்படி சில கணக்குள் இருக்கின்றன. இப்படி அமைக்கப்பட்ட உருவத்தை பார்க்கும்போது, அதற்கு உகந்தாற்போல் நாம் ஒரு எண்ணையும் நிர்ணயிப்போம். இந்த எண்ணிற்கும் அந்த உருவத்திற்கும் வடிவியல் ரீதியான தொடர்புண்டு. இவற்றை அடிப்படையாகக் கொண்டு பிரதிஷ்டை செய்கிறோம். பிரதிஷ்டை என்பது ஒருவிதமான விஞ்ஞானம். எதை நம் கண்களால் பார்க்க முடியுமோ அவை மட்டுமே விஞ்ஞானம் என்ற மனநிலைக்கு நாம் வந்துவிட்டோம். நவீன விஞ்ஞானம்கூட ஆன்மீக மறைஞானத்தை நோக்கி நகரத் துவங்கிவிட்டது. நீங்கள் கண்களால் பார்க்க முடியாதவற்றையும் அது செய்கிறது தானே? உங்கள் கணிப்பொறியும், அலைபேசியும் நீங்கள் கண்ணில் பார்க்க முடியாதவற்றையும் செய்கிறதே! ஒருவிதத்தில் அதுவும் சக்திரூபம் தான். இந்தப் பொருட்களுக்கும் ஒரு வடிவியல் இருக்கிறது, அதன் வடிவியல் சரியாய் இருந்தால் அந்த கருவிகளும் சரியாய் செயல்படும். இதனை விஞ்ஞானம் என்பீர்களா அல்லது சடங்கு என்பீர்களா? அதேபோல நம் கண்களால் நாம் காண இயலாமல் நாம் இயங்கச் செய்யும் கருவி இந்த யந்திரங்கள். அவற்றை செயல்படச் செய்யும் முறையை பிரதிஷ்டை என்கிறோம். காலம் காலமாக நம் கலாச்சாரத்தில் இவற்றைச் செய்து வந்தாலும், ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு இந்த அறிவினை நாம் முறையாய் வழங்கிச் செல்லாமல் விட்டால், தேவையான அறிவு அடுத்த தலைமுறைக்கு இல்லாது போனால் உயர்ந்த அறிவியல் வெறும் சடங்காக தரம் தாழ்ந்துவிடும் அல்லவா? அதுதான் தற்போது நிகழ்ந்திருக்கிறது. இந்த அனுபவத்தையுடைய மக்களை நாம் உருவாக்காவிட்டால், விஞ்ஞானம் சடங்காய் போய், பிறகு போலி விஞ்ஞானமாய் மாறிப் போகும். இதனால், உங்கள் கைகளில் வைத்திருக்கும் இதுபோன்ற கருவிகளை நீங்கள் கவனமாய் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம். நம்முடைய உயிர்சக்தியை நாம் பலவிதங்களில் பயன்படுத்த முடியும். இந்த அடிப்படையில்தான், பல விதமான யந்திரங்கள், சக்தி ரூபங்களை மக்கள் நன்மைக்காக காலங்காலமாகவே நம் கலாச்சாரத்தில் நாம் உருவாக்கி வந்துள்ளோம். இதனை வரும் தலைமுறைக்கு விஞ்ஞானப்பூர்வமானதாக, அறிவியல்பூர்வமானதாக நாம் எடுத்துச் செல்லாவிட்டால், ஆழமான விஞ்ஞானம் மேலோட்டமாய் நிகழ்கிற சடங்காய் மாறிவிடும்.

No comments:

Post a Comment