Monday, November 9, 2015

கணவன் – மனைவி உறவு சிறக்க…

“திருமண பந்தத்தில் சிக்கலா?! இதோ பரிகார பூஜை!” என்ற ஜோதிடர்களின் பிரச்சாரங்களுக்கும், “கணவன்- மனைவி உறவு மேம்பட, இதோ பத்து டிப்ஸ்!” என்ற தலைப்புகளில் புத்தகங்களுக்கும் இங்கே பஞ்சம் கிடையாது. இங்கே, திருமணம் குறித்து பேசும் சத்குரு, கணவன்-மனைவி பந்தம் சிறப்பாக அமைவதற்குக் கூறும் அந்த ஒரு வழி என்ன என்பதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்! சத்குரு: இருபது வயதைத் தாண்டிவிட்டாலே இளைஞர்களிடம், ‘எப்போது திருமணச் சாப்பாடு போடப் போகிறாய்?’ என்று கேட்பது ஒரு சடங்காகிவிட்டது. கல்விபோல, உத்தியோகத்தைப் போல, நம் சமூகத்தில் திருமணம் என்பதும் ஓர் அந்தஸ்தாகக் கருதப்படுகிறது. திருமணம் என்பது தனக்கு அவசியமா, இல்லையா என்ற யோசனையே இல்லாமல், மற்றவர்கள் செய்து கொள்கிறார்களே என்று தானும் சிக்கிக் கொள்பவர்கள், மூன்றாம் நாளே பேயடித்ததுபோல் காணப்படுகிறார்கள். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி… வசதியான குடும்பம், கை நிறைய சம்பளம் என்பவற்றையே வாழ்க்கைப் பொருத்தங்களாக நினைப்பது பரிதாபமல்லவா? திருமணம் என்று மட்டும் இல்லை… நீங்கள் எந்தச் செயல் செய்தாலும், அதற்கான பின் விளைவுகள் வெள்ளம்போல் அடித்துக் கொண்டு வரும் என்பதை மறக்கக்கூடாது. அவற்றைச் சுணங்காமல் எதிர்கொள்ள உங்களைத் தயார் செய்து கொண்ட பிறகே, காரியத்தில் இறங்க வேண்டும். வயதில் மூத்தவர்கள், இளையவர்களுக்கு அப்பழுக்கில்லாத அன்பைச் செலுத்தச் சொல்லித் தருவதில்லை. ஆனால், பெண்களைப் பெற்ற பெரும்பாலானவர்கள், புகுந்த வீட்டு மனிதர்களை அனுசரித்துப் போகச் சொல்லி தங்கள் மகளுக்கு அறிவுரை தருவார்கள். இவர்கள் தங்கள் மகளைப் பற்றிய பொறுப்பை அடுத்தவர் தோள்களுக்கு மாற்றுவதாகவே நினைத்து, அவளுக்கான துணையைத் தேடுகிறார்கள். சங்கரன் பிள்ளையின் திருமணமாகாத மகள், திடீரென்று கர்ப்பமாகி வந்து நின்றாள். சங்கரன்பிள்ளை ஆத்திரமானார். அவளைத் தாறுமாறாக அடித்து, அதற்குக் காரணம் யாரென்று உலுக்கினார். அவள் அழுதுகொண்டே அவன் பெயரைச் சொன்னாள். சங்கரன்பிள்ளை தன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டார். நேரே அவனைத் தேடிப் போனார். அரண்மனை போன்ற அந்த வீட்டின் கதவை உதைத்துத் திறந்தார். கட்டிலில் படுத்திருந்த அவன் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி முனையை வைத்தார். “அவசரப்படாதீர்கள். நாம் இதைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்” என்று அவன் கெஞ்சினான். “நீ ஊரிலேயே பெரிய பிஸினஸ்மேனாக இருக்கலாம். ஆனால், சின்னப்பெண்ணை ஏமாற்றியிருக்கிறாய். உனக்கு என் கையால்தான் சாவு” என்று உறுமினார் சங்கரன்பிள்ளை. “ஐயா, உங்கள் மகளுக்கு பெண் குழந்தை பிறந்தால் பத்து லட்சம் தருவதாக இருக்கிறேன்!” “ஆண் குழந்தையாக இருந்தால்?” “இருபது லட்சம் தருவேன்!” சங்கரன் பிள்ளை துப்பாக்கியை மடக்கிப் பையில் வைத்துக் கொண்டார். அவனுக்கெதிரில் மரியாதையாக நின்றார். நெளிந்தபடி கேட்டார்: “ஒருவேளை கரு தங்காவிட்டால், என் மகளுக்கு இன்னொரு வாய்ப்புத் தருவீர்களா சார்?” செல்வத்தையும், வசதிகளையும் மட்டுமே அளவுகோலாக வைத்துத் திருமணங்களை நிச்சயம் செய்பவர்களுக்கும் சங்கரன்பிள்ளைக்கும் அதிக வித்தியாசம் இல்லை. ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி… வசதியான குடும்பம், கை நிறைய சம்பளம் என்பவற்றையே வாழ்க்கைப் பொருத்தங்களாக நினைப்பது பரிதாபமல்லவா? மனப்பொருத்தம் பற்றி யோசிக்காமல், மற்ற காரணங்களை உத்தேசித்து, இரண்டு பேரை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதுதான் பெரும்பாலான திருமணங்கள் கசப்பாகிப் போவதற்கான அடிப்படைக் காரணம். உங்கள் திருமண வாழ்வை எப்படிச் சந்தோஷமாக அமைத்துக் கொள்வது என்று சொல்லித்தர, நூற்றுக்கணக்கான புத்தகங்களை இன்று மேல்நாட்டில் எழுதித் தள்ளுகிறார்கள். “ஒரு நாளைக்கு இத்தனை தடவை ‘ஐ லவ் யூ’ என்று சொல்… இத்தனை தடவையாவது தொட்டுப் பேசு… இத்தனை தடவையாவது முத்தம் கொடு’ என்று கணக்கெல்லாம் சொல்லி விற்பனை செய்கிறார்கள். பிறந்த குழந்தைக்குத் தாய் எத்தனை முத்தம் கொடுக்க வேண்டும் என்று சொல்லித் தரக்கூட அங்கே ஆட்கள் இருக்கிறார்கள். திருமணத்துக்கு அப்புறம் அடுத்தவரிடம் என்ன ஆதாயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கணவன்-மனைவி உறவு அமைந்தால், வாழ்க்கை கொந்தளிப்புகள் நிறைந்ததாகி விடும். அதையெல்லாம் படித்து ஒவ்வொன்றுக்கும் விரல்விட்டு எண்ணிக் கொண்டிருந்தால், ஒரு வாரத்துக்குள் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குத்தான் போய்ச் சேர வேண்டியிருக்கும். உண்மையான அன்பிருந்தால், கட்டி அணைக்கவும், முத்தம் கொடுக்கவும் ஏற்ற நேரத்தை இதயமே தேர்ந்தெடுக்கும்! ஒரு தம்பதியின் இருபத்தைந்தாவது திருமண நாள் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தன. கணவனின் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்து கொண்டிருந்தது. மனைவி நெகிழ்ந்து போய், அவனைத் தன்மீது சாய்த்துக் கொண்டாள். “என்ன கண்ணா… என் மேல் அவ்வளவு பிரியமா? எதற்கு இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறீர்கள்?” கணவன் கண்ணீரை அடக்க முடியாமல் சொன்னான்… “நாம் காதலித்து, ஜாலியாகச் சுற்றி கொண்டிருந்தபோது, உன் அப்பா நீதிபதியாக இருந்தாரே… நினைவிருக்கிறதா?” “ஆமாம்!” “நம் விஷயம் தெரிந்து, அவர் என்னைத் தேடி வந்துவிட்டார். ‘என் மகளைத் திருமணம் செய்யாமல் ஏமாற்றினால், உன்னை இருபத்தைந்து வருடம் உள்ளே தூக்கிப் போட்டு விடுவேன்’ என்று மிரட்டினார். அந்த மிரட்டலுக்கு மட்டும் நான் பயப்படாமல் இருந்திருந்தால், இன்றைக்கு நான் விடுதலையாகி இருக்க வேண்டிய நாள்!” திருமணம் என்றாலே இப்படி வேதனைதானா? இல்லவே இல்லை! இரண்டு உயிர்கள் ஒன்றை ஒன்று புரிந்து கொண்டு, வாழ்க்கையை ஆனந்தமாக்கிக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் அது. உண்மையான அன்பைப் பகிர்ந்து கொள்ளக் கிடைக்கும் ஓர் அற்புதமான வாய்ப்பு! ஆனால், திருமணத்துக்கு அப்புறம் அடுத்தவரிடம் என்ன ஆதாயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கணவன்-மனைவி உறவு அமைந்தால், வாழ்க்கை கொந்தளிப்புகள் நிறைந்ததாகி விடும். கோர்ட் வரை போகாவிட்டாலும், குடும்ப அளவிலேயே திருமணம் தோற்றுவிடும். இருவருக்கிடையிலான உறவு இனிதாக இருக்க வேண்டுமானால், அங்கு ஆதாயக் கணக்குகளுக்கு இடம் இருக்கக்கூடாது. அன்பு மட்டும் தீவிரமாக மலர்ந்திருந்தால், வாழ்க்கையின் மேடு, பள்ளங்களில் விழுந்தாலும் காயப்படாமல், சுகமாக மிதந்து பயணம் செய்ய முடியும்.

 

No comments:

Post a Comment