Thursday, June 9, 2016

ஞானோதயம் அடைய கிருஷ்ணர் என்ன செய்தார்…

பலருக்கும் கிருஷ்ணரை வெண்ணை திருடிய விளையாட்டுப் பிள்ளையாகவோ, குழலூதும் கண்ணனாகவோ தெரியும். அடுத்த கட்டத்தில் அரசியலில் ராஜதந்திரியாகவும், மஹாபாரதத்தில் பார்த்தசாரதியாகவும் தெரியும். நடுவில் என்ன நிகழ்ந்தது? இந்நிலையை கிருஷ்ணர் எப்படி எட்டினார்? சத்குருவின் விளக்கம்… கேள்வி நமஸ்காரம் சத்குரு. ஞானோதயம் அடைய கிருஷ்ணர் ஏதேனும் ஆன்மீக சாதனையில் ஈடுபட்டாரா? இதுபோன்ற நிலையை அவர் எப்படி எட்டினார்? சத்குரு: ஒரு மனிதர் ஒவ்வொரு நாளும், அவர் எழுந்த கணத்தில் இருந்து மீண்டும் தூங்கச் செல்லும்வரை அன்பாகவும் ஆனந்தமாகவும் இருப்பதே மகத்தான ஆன்மீக சாதனைதான். தன்னைச் சுற்றி மனிதர்கள் இருக்கும்போது சிரித்த முகமாகவும், யாரும் தன்னை கவனிக்கவில்லை எனும்போது சோகமே உருவாக முகத்தை தூக்கி வைத்துக்கொள்வதும், அவர் எப்படிப்பட்டவர் என்பதைத் தெளிவாய்க் காட்டிவிடும். தனியாய் விட்டுவிட்டால் மனிதர்களில் பெரும்பாலானோர் தாங்கமுடியா துன்பங்களாகிவிடுவர். ஆம்… உங்களால் தனிமையில் இருக்க முடியாத நிலையில் நீங்கள் இருந்தால், நீங்கள் தவறான சகவாசத்தில் இருக்கிறீர்கள். உங்களுக்கு நீங்களே சரியான சகவாசம்தான் என்றால், தனிமையில் இருப்பது மகத்தான விஷயமாய் இருக்கும். ஒரு மனிதர் ஒவ்வொரு நாளும், அவர் எழுந்த கணத்தில் இருந்து மீண்டும் தூங்கச் செல்லும்வரை அன்பாகவும் ஆனந்தமாகவும் இருப்பதே மகத்தான ஆன்மீக சாதனைதான். மனிதர்களுடன் கூடி இருப்பது என்பது விழாக்காலம் போன்று… ஆனால் ‘ஒரு உயிராய்த் துடிப்பது’ தனிமையில் மட்டும்தான். நீங்கள் ஒரு அழகான உயிராய் உருவெடுத்தால், இங்கு சும்மா அமர்ந்திருப்பதுமே அற்புதமாக இருக்கும். உங்கள் வாழ்வில் அவ்வப்போது ஏதோ ஒரு சூழ்நிலையில் மட்டும், அல்லது யாரையேனும் பார்த்தால் மட்டும் அன்பாக இருப்பது என்றில்லாமல், வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் எவ்வித பாகுபாடுமின்றி அன்பாக இருந்தால், உங்கள் புத்திசாலித்தனம் முற்றிலும் வேறுவிதமாக மலரும். விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தரும்போது, உங்கள் புத்திசாலித்தனம் ஊனமுறுகிறது. நீங்கள் அன்பாக இருப்பது வேறு ஒருவருக்கு தரும் பரிசல்ல… அது நீங்கள் இருப்பதற்கும், உணர்வதற்குமே அழகான நிலை. உங்கள் உணர்வுகள், மனம், உடல் என அனைத்துமே இனிதாக உணர்வீர்கள். நீங்கள் இனிமையாக இருக்கும்போதுதான் உங்கள் புத்திசாலித்தனம் அதன் உச்சத்தில் இயங்கும் என்பதற்கு, இன்று போதுமான ஆராய்ச்சி சான்றுகளும் கூட இருக்கிறது. ஒத்திசைவில் வாழ்வது உங்கள் இதயம் ஒரு நிமிடத்திற்கு 60 முறை துடித்தால், நீங்கள் இந்த பூமியோடு ஒத்திசைவில் இயங்குகிறீர்கள் என்று அர்த்தம். ஏதோ செயலில் ஈடுபடும்போது இந்த எண்ணிக்கையில் ஏற்றம் இறக்கம் இருக்கலாம், ஆனால், நீங்கள் ஓய்வாக இருக்கும்போது இதயத்துடிப்பின் எண்ணிக்கை 60 ஐவிட அதிகமாக இருந்தால், ஏதோ சரியாக இல்லை என்றுதான் அர்த்தம். இன்று ஆரோக்கியமாக இருக்கும் பலரின் இதயத்துடிப்பு 65 – 75 ற்குள் உள்ளது. இதுவே சூர்ய நமஸ்காரம், ஷாம்பவி மஹாமுத்ரா போன்ற மிக எளிமையான யோகப் பயிற்சிகளை 18 மாதங்களுக்கு நீங்கள் செய்துவந்தால் உங்கள் இதயத்துடிப்பு நிச்சயம் 60 ஆகிவிடும். இந்நிலையில் நீங்கள் பூமியோடு ஒத்திசைவில் இருப்பீர்கள் என்பதால், அன்பாக, ஆனந்தமாக, ஒரு மலர் போன்று இருப்பது உங்கள் இயல்பாகவே இருக்கும், ஏனெனில் இந்த உயிர் அப்படித்தான் படைக்கப் பட்டிருக்கிறது. சோகத்தில் ஆழ்ந்து, நோய்வாய்பட்டு உழல்வதற்கு இவ்வுயிர் படைக்கப்படவில்லை… பரந்து விரிந்து, பிரம்மாண்டமாய் மலர்வதே இதன் நோக்கம். இது தான் கிருஷ்ணரின் ஆன்மீக சாதனை – அவரைச் சுற்றி இருக்கும் படைப்போடு அவர் கச்சிதமான ஒத்திசைவில் இயங்கினார். இது தான் கிருஷ்ணரின் ஆன்மீக சாதனை – அவரைச் சுற்றி இருக்கும் படைப்போடு அவர் கச்சிதமான ஒத்திசைவில் இயங்கினார். சிறு வயதில் அவர் என்னென்ன குறும்புகள் செய்தாலும், அவருக்கு எவ்விதமான சங்கடங்களும் வரவில்லை. பலரின் வீடுகளில் இருந்து அவர் வெண்ணை திருடினாலும், மற்றவர்களின் மீது எத்தகைய சேட்டைகளை அவர் அரங்கேற்றினாலும் அனைவருக்கும் அவர் செல்லப் பிள்ளையாகவே இருந்தார். ஏதோ ஒரு வகையில் அவர்களை எல்லாம் அவர் தன்னோடு ஒரு ஒத்திசைவில் இருக்கச் செய்தார் என்பதற்கு இதுவே ஒரு சான்று. யாரொருவரோடு நீங்கள் ஒத்திசைவில் இருக்கிறீர்களோ, அவரோடு இருக்கும்போது நீங்கள் இனிமையாக உணர்வீர்கள். யாரொருவரோடு நீங்கள் ஒத்திசைவில் இல்லையோ, அவரைப் பார்த்தாலே உங்களுக்கு மனக்கசப்பு உண்டாகும். இனிமையும், மனக்கசப்பும் ஒரே நபரிடம் கூட உண்டாகமுடியும். ஆம்… அந்த நபரோடு ஒத்திசைவில் இருக்கும்போது அவரைப் பார்த்தால் இனிமையும், அவரோடு ஒத்திசைவில் இல்லாதபோது அவரைப் பார்த்தால் உங்களுக்கு மனக்கசப்பும் உண்டாகும்… இதற்கு அவர் ஏதும் செய்யவேண்டும் என்றுகூட இல்லை. கிருஷ்ணரின் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்ட மாற்றம் தனது 16 வயதுவரை கிருஷ்ணரின் ஆன்மீக சாதனை, தன்னைச் சுற்றி இருக்கும் படைப்போடு ஒத்திசைவில் இருப்பதிலேயே இருந்தது. அதன்பின், கிருஷ்ணரின் குரு சாந்திபாணி கிருஷ்ணரைச் சந்தித்து, அவரது வாழ்க்கை வெறுமனே ஆடிக் களிப்பதற்கல்ல, மற்றொரு பெரிய நோக்கம் இருக்கிறது என்று நினைவூட்டினார். கிருஷ்ணருக்கோ அதனை ஏற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. அவர் வாழ்ந்து வந்த கிராமத்தின் மீதும், அதில் வாழ்ந்த மக்கள் மீதும் அவருக்கு அலாதி பிரியம் இருந்தது! தன்னைச் சுற்றி இருந்த அனைத்தோடும், அது ஆணோ, பெண்ணோ, விலங்கோ, குழந்தையோ… அனைவருடனும், எல்லாவற்றுடனும் அவர் முழுமையான ஈடுபாட்டோடு இருந்தார். அதனால், “எனக்கு பெரிய நோக்கங்கள் எதுவும் வேண்டாம். இந்த கிராமத்தில் சும்மா வசித்திருப்பதே எனக்குப் பிடித்திருக்கிறது. இங்கிருக்கும் மாடுகள், மாடு மேய்ப்பவர்கள், கோபியர்கள் மீது எனக்குப் பிரியம். அவர்களுடன் ஆடிப் பாட நான் விரும்புகிறேன்,” என்றார் கிருஷ்ணர். அதற்கு குரு சாந்திபாணி, “நீ எழத்தான் வேண்டும் கிருஷ்ணா. ஏனெனில், நீ பிறப்பெடுத்ததே இதற்காகத்தான். இது நடக்கவேண்டும்,” என்று வலியுறுத்தினார். தனது 22வது வயது வரை தீவிரமான ஆன்ம சாதனையில் ஈடுபட்டார். போர்க்கலைகளையும் கற்று, அற்புதமான மல்யுத்த வீரராகவும் திகழ்ந்தார். கிருஷ்ணர் “கோவர்தன மலை” ஏறி அங்கு நின்றார். அங்கிருந்து அவர் கீழிறங்கி வந்தபோது, அதுவரை இருந்த 16 வயது விளையாட்டுப் பையனாய் அவர் இருக்கவில்லை. முற்றிலும் வேறுவிதமான தீவிரத்தோடு அவர் இருந்தார். அவரைப் பார்த்த மக்களுக்கு அது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஏதோ பேரதிசயம் நிகழ்ந்திருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்தாலும், கிருஷ்ணரை இழக்கப் போகிறோம் என்பதையும் அவர்கள் அறிந்தனர். அவர்கள் கிருஷ்ணரைப் பார்த்தபோது, அவரும் புன்னகையுடன் தான் இவர்களை எதிர்நோக்கினார்… ஆனால் அவரின் கண்களில் அன்பு இருக்கவில்லை. ஏதோ தொலைநோக்கு தான் இருந்தது. அவர்கள் கற்பனைகூட செய்திராத விஷயங்களை அவர் பார்த்தார். இந்த நினைவூட்டுதல் நடந்தபின், அவர் செய்த முதல் காரியம், அவரின் தாய்மாமனான கம்சனை அழித்து, யாதவ குலத்தினரை கொடுங்கோல் ஆட்சியினின்று விடுவித்தார். அதன்பிறகு தனது சகோதரன் பலராமருடனும், உறவினன் ‘உதவா’வுடனும் தன் குரு சாந்திபாணியின் ஆசிரமத்திற்குச் சென்று, அங்கு அடுத்த ஏழு ஆண்டுகள் பிரம்மச்சரியம் கடைபிடித்தார். தனது 22வது வயது வரை தீவிரமான ஆன்ம சாதனையில் ஈடுபட்டார். போர்க்கலைகளையும் கற்று, அற்புதமான மல்யுத்த வீரராகவும் திகழ்ந்தார். இருந்தும் அர்ஜுனர் போன்றோ, பீமர் போன்றோ, தசைகள் நிரம்பிய உடற்கட்டோடு அவர் இருக்கவில்லை. வேறுவிதமான ஆன்ம சாதனை இத்தனை ஆன்ம சாதனைகள் செய்தும், போர்கலைகள் கற்றும், கிருஷ்ணர் மென்மையாகவும் மிருதுவாகவும் இருந்ததற்குக் காரணம், அவரின் ஆன்ம சாதனை முற்றிலும் வேறுவிதமான கோணத்தில், மாறுபட்ட ஒரு தன்மையில் இருந்தது. குரு சாந்திபாணி அவருக்கு வழங்கிய சாதனைகள், பெரும்பாலும் உள்முகமாக செயல்படும் விதமாகவே வடிவமைத்திருந்தார். கிருஷ்ணர் துவாபர யுகத்தை சார்ந்தவர் இல்லை (அவரின் வாழ்வும் செயலும் அவர் சத்ய யுகத்தை சார்ந்தவர் போன்றே இருந்தது) என்பதால் அவருக்கு எல்லாம் மனதளவிலேயே நடந்தது. கிருஷ்ணருக்கு ஏதேனும் உணர்த்தவேண்டும் என்றால், குரு சண்டிபானி அதை வாய் திறந்து சொல்லவேண்டும் என்றில்லை. உணர்த்த வேண்டிய விஷயங்கள் அனைத்தும் மனதளவில் பரிமாறி, மனதளவில் உணர்ந்து, மனதளவிலேயே எட்டவேண்டிய இலக்குகளையும் எட்டினார் கிருஷ்ணர். குருவின் சொற்படி அவரவர் ஆன்ம சாதனைகளை செய்துமுடித்து வெளிவந்த போது, கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் இடையே இருந்த வித்தியாசம் அப்பட்டமாய் இருந்தது. பலராமர் உடலளவில் முறுக்கேறிய தசைகளோடு ஆஜானுபாகு போல் இருக்க, கிருஷ்ணரோ வெளித்தோற்றத்தில் எவ்வித மாற்றமுமின்றி முன்பிருந்தது போன்றே காட்சிதந்தார். இதற்காக பலராமர் கிருஷ்ணரை கேலி செய்ததும் கூட உண்டு. “குரு வழங்கிய சாதனைகளை நீ செய்யவே இல்லை போலிருக்கிறது. நான் கடுமையாக உழைத்தேன். பார்… நான் எப்பேர்பட்ட வீரனாய் வெளிவந்திருக்கிறேன். ஆனால், நீயோ இப்படி இருக்கிறாய்?” என்று. இருந்தாலும் மல்யுத்த போட்டியாக இருந்தாலும், வில்வித்தையாக இருந்தாலும் யாராலும் கிருஷ்ணருக்கு ஈடுகொடுக்க முடியாது. வாள்வீச்சிலும் வெகு சிலரால் மட்டுமே கிருஷ்ணரை எதிர்கொள்ள முடியும். இப்பேற்பட்ட ஆற்றல்கள் இருந்தும் உடலளவில் அவருக்கு முறுக்கேறிய தசைகள் ஏதும் இருக்கவில்லை, ஏனெனில் அவர் செய்த ஆன்மீக சாதனைகள் முழுக்கமுழுக்க மனதளவில் நடந்தேறியது. இதன் தாக்கத்தையும் விஸ்தாரத்தையும் அவரது வாழ்வில் பல்லாயிரம் விதங்களில் அவர் வெளிப்படுத்தினார்

No comments:

Post a Comment