Wednesday, June 22, 2016

சிவன் அணிந்துள்ள ஆபரணங்களின் விளக்கங்கள்:

சிவன் அணிந்துள்ள ஆபரணங்களின் விளக்கங்கள்:
1. சிவபெருமான் ஞானக்கண் எனப்படும் நெற்றிக்கண்ணை உடையவர்,
2. உடுக்கையும் சூலாயுதத்தையும் வைத்திருப்பவர்
3. சடாமுடியும், சாம்பல் தரித்த மேனியும் உடையவர்.
4. மான், அக்னி தாங்கியவராகவும் உள்ளார்.
5. காளை மாட்டை வாகனமாக வைத்திருப்பவர்
6. நெற்றியில் திருநீற்றினால் மூன்று கோடுகள்
7. தலையில் பாயும் கங்கை..
8. பத்மாசனம் இருக்கை.
9. ஒளி மிகுந்த கண்கள் முக்கால் பாகம் மூடிய நிலையில் - தியான நிலை.
10. செம்மை நிற சடைமுடியான்.
11. தலையில் கொன்றை மலர்.
12. உடல் முழுவதும் திருநீற்று கோடுகள்.
13. கைகளிலும் கழுத்திலும் உருத்திராட்ச மாலை.
14. கழுத்தில் பாம்பு.
15. காதில் தோடுகள்
தருகா வனத்து முனிவர்களின் ஆணவத்தினை அழிக்கச் சிவபெருமான் திகம்பர மூர்த்தியாகச் சென்றார். அவருடைய அழகில் மயங்கி முனிவர்களின் மனைவிகள் சிவபெருமானை பின்தொடர்ந்து சென்றனர்.
இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் தங்களுடைய யாகவலிமையால் புலியை உருவாக்கி சிவனைக் கொல்லும்படி அனுப்பினர், சிவபெருமான் அதன் தோலை உரித்து உடுத்திக் கொண்டார்.
பின்பு அந்த வேள்வியில் மானுண்டாகி வர அதனை இடக்கையில் வைத்துக்கொண்டருளினார். பின்பு மழுவுண்டாகி வர அதனை ஆயுதமாக வைத்துக்கொண்டனர்.
பின் முயலகன் என்னும் அசுரனுண்டாகி வர அவனைக் கீழே தள்ளி முதுகிலேறி நின்றார். மந்திரங்களை ஏவினார்கள் அவைகள் டமருக (உடுக்கை) ரூபங்கொண்டு வர திருக்கரத்தில் வைத்தருளினார்.
சிவபெருமானின் மாமனாரான தட்சனின் சாபத்திலிருந்து சந்திரனைக் காக்க பிறைசந்திரனை சடாமுடியில் சூடிக்கொண்டார்.
காசிபர் கத்துரு தம்பதிகளின் குழந்தைகளான பாம்புகள், மாற்றந்தாய் மகனான கருடனிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள சிவபெருமானை சரணடைந்தன. அவற்றைச் சிவபெருமான் ஆபரணங்களாகத் தரித்துக் கொண்டார்.
துருவாச முனிவரின் மாணவர் சிலாத முனிவர் என்பவருக்கும் சித்திரவதி என்ற குணவதிக்கும் குழந்தைச் செல்வம் இல்லாததால் ஸ்ரீசைல மலையில் புத்திரப்பேறு வேண்டி சிவனை நோக்கி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார்கள்.
சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி யாகபூமியை உழுதால் தங்கப் பெட்டகம் ஒன்று வெளிப்படும். அதில் ஒரு புத்திரன் தோன்றுவான். அவன் பதினாறு ஆண்டுகள் மட்டுமே பூலோகத்தில் வாழ்வான் என்று கூறி மறைந்தார். சிறந்த சிவபக்தரான அக்குழந்தையே நந்தி தேவர். சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெளிந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்தி தேவரே.
பாற்கடலிலை கடையும் பொழுது வாசுகி (பாம்பு) கக்கிய ஆலகாலத்தினை உண்டு அதன் மூலம் நீலமான கண்டத்தினை உடையவர்.
பகிரதனின் முன்னோர்களை முக்தியடைய அவரின் வேண்டுகோளை ஏற்று கங்கையை முடியில் தாங்கினார்.
யானைரூபமாகத் தோன்றிய கஜாசுரனென்பவன்
பிரம்ம தேவனை நோக்கித் தவஞ்செய்து வரம் பெற்று பிரம தேவன் தேவேந்திரன் முதலானவர்களுடன் யுத்தஞ்செய்து வென்று திரியும்போது, முனிவர்கள் கண்டு பயந்து ஓடிக் காசியில் மணிகர் நிகையென்னும் ஆலயத்துக்குப் போய்ப் பரமசிவனைச் சரணாகதியடைந்தார்கள். சுவாமி கோபத்துடன் உக்கிரமூர்த்தியாய்க் கஜாசுரன் மத்தகத்தை மிதித்து உடலைக் கிழித்துத் தோலையுரித்துப் போர்த்தருளினார்.
விஷ்ணு கடலில் மச்சாவதாரங்கொண்டு வேதங்களை அபகரித்துக்கொண்டுபோன ஒரு அசுரனை வதைத்து மயக்கமுற்று உலகம் வருந்தும்படிக் கடலைக் கலக்கியபோது தேவர்கள் சிவபெருமானை வேண்டிக்கொள்ள தேவர்கள் சிவபெருமான் ஒரு பைரவரையனுப்ப அவர்போய் வலைவீசி அந்த மீன்கண்களைப் பெயர்த்துக் கொண்டுவர அவைகளைத் தேவர்கள் வேண்டுதலினால் தமது ஸ்ரீபாதங்களிலே தரித்துக் கொண்டருளினார்.
அமிர்தமுண்டாகும்படித் தேவர்கள் பாற்கடலில் மந்தரகிரியை மத்தாக நாட்டி வாசுகியாகிய பாம்பினைத் தாம்பாகச் சுற்றி வலிக்கும்போது அந்த மந்தரகிரி கடலில் மூழ்க அதைக்கண்டு தேவர்கள் விஷ்ணுவை வேண்டிக்கொள்ள அவர்வந்து ஆமையாகி மந்தரகிரி தன்முதுகில் நிற்கும்படித் தாங்கினார். இதனால் மமதை அடைய அவரின் மமதையை அடக்கும் பொருட்டு ஈசன் விநாயகரை அனுப்பிவைத்தார்.
விநாயகர்போய்த் தம்முடைய துதிக்கையை நீட்டிக் கடல் நீரையெல்லாம் உறிஞ்சுகையில் ஆமையும் அந்தத் துதிக்கைக்குள் போய் விட்டது. பின்பு விநாயகர் நீரைச் சிந்தினார்.
அந்த நீருடன் ஆமையும் வெளிவந்து விழுந்துக் கிடக்க, விநாயகர் அதன் ஓட்டினைத் தன்னுடைய தந்தத்தினால் பெயர்த்துக் கொண்டுவந்து சுவாமிக்குக் காணிக்கையாகக் கொடுக்க தேவர்கள் வேண்டுதலினால் தலை மாலையுடன் அந்த ஆமையோட்டையும் மார்பில் தரித்துக் கொண்டருளினார்.
ரணியாட்சன் என்னும் அசுரன் பிரம்மதேவனை நோக்கித் தவஞ்செய்து வரம் பெற்று பூமியைக் கவர்ந்து கொண்டு போய்விட்டான். அதையறிந்து விஷ்ணு வராக அவதாரஞ்செய்து அவனைக்கொன்று பின் மமதை அடைய பரமசிவன் சுப்பிரமணியரையனுப்ப அவர் அந்த பன்றியின் தலையை வேலினால் குத்தி அமுக்கி அதன் கொம்பினைப் பறித்துக்கொண்டு வந்து சுவாமியினிடத்தில் வைக்க அதை முன்போலத் தரித்துக்கொண்டார்.
விஷ்ணு வாமனாவதாரத்தில் விஸ்வரூபம் கொண்டபோது மமதையடைந்து உலகினையழிக்க முயலுகையில் சிவபெருமான் வைரவரையனுப்ப, அவரந்த விஸ்வரூபத்தைச் சம்ஹாரம் செய்து அதன் வீணாதண்டத்தைக் கொண்டுவந்து எம்பெருமானிடத்தில் வைக்க, சுவாமி அதனைத் தனக்கு ஒரு கோலாக வைத்துக்கொண்டார்.
இரணியனைக் கொல்லவந்த விஷ்ணு நரசிம்மாவதாரம் செய்து அவனைக்கொன்று மமதையடைய, சிவபெருமான் சரபேஸ்வரர் ரூபமெடுத்து அச்சிம்மத்தின் தலையைப்பிளந்துக் கொன்றனர். தேவர்களதன் தோலைக் கொண்டு சிம்மாசனம் செய்து சுவாமியை வேண்டிக்கொள்ள அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.
தேவர்கள் அமிர்த முண்டாவதற்காகப் பாற்கடல் கடைந்தபோது ஆலகாலவிஷமுண்டாயது. அதைக் கண்டு தேவர்கள் முறையிட அவர்களை காக்கும் பொருட்டு விஷத்தைக் கண்டத்தில் வைத்தருளினார். இந்தக் காரணத்தினால் காளகண்டன், கறைமிடற்றன், நீலகண்டன் எனப்பெயர்பெறுவர்.
குரண்டாசுரனென்னும் அசுரன் கொக்கு ரூபமாயிருந்து, தேவர்களை துன்புறுத்தி வந்தமையால் சிவபெருமான் அவனைச் சம்ஹாரம் செய்து அவனது கொக்கு இறகை அணிந்து கொண்டார்.
பிரம்மா அகந்தைகொண்டிருக்க அதை யடக்கும் பொருட்டு அவருக்கிருந்த ஐந்து தலையில் நடுத்தலையைக்கிள்ளிக் கையிற் கபாலமாக வைத்தருளினார். அது முதல் பிரமனுக்குச் சதுர்முகனென்று பெயராயது. பரமசிவன் சிரமாலை யணிந்திருப்பதனால் சிரமாலியென்றும்
கபாலந்தரித்துக்கொண்டிருப்பதனால் கபாலியென்றும் பெயருண்டானது.
அரக்கர்களை அழிக்க விஷ்ணு, அவதாரங்கள் எடுத்து அந்த செயல் முடித்த பின் அந்த அவதாரங்களின் உக்கிரத்தால் யாருக்கும் தீங்கு வரக்கூடாது என்பதற்காக தான் அந்த அவதாரங்களின் எலும்புகளையும் சிரங்களையும் மாலையாக அணிந்தருளினார். அவர்களுக்கு நன்மையுண்டாக வேண்டுமென்று தரித்துக் கொண்டதே அன்றி பெருமை பாராட்டுக்காகத் தரித்துக்கொண்டது அல்ல.

No comments:

Post a Comment